தினம் தினம் யோகா 09: பத்த கோணாசனம்

தினம் தினம் யோகா 09: பத்த கோணாசனம்
Updated on
1 min read

நிமிர்ந்து உட்கார்ந்து கால்களை நீட்டவும். கால்களை மடக்கி உடம்பை ஒட்டி கொண்டுவரவும். இரு பாதங்களும் சேர்ந்திருக்கட்டும். குதிகால்கள் உடம்பை ஒட்டி இருக்கட்டும். செருப்பு தைக்கும் கலைஞர்கள் உட்கார்ந்திருப்பதுபோல.

கைகளால் கால் விரல்களை நன்கு கோர்த்து பிடித்துக் கொள்ளவும். தொடைகள் தரையில் பதிகிறதா? தொடக்கத்தில் பதியாமல் இறக்கைபோல தூக்கிக்கொண்டுதான் இருக்கும், கவலை வேண்டாம். இறக்கை போல, இரு தொடைப் பகுதியையும் மேலும் கீழுமாக சுமார் 10 முறை அசைத்து, தொடைகளை தரையில் பதிக்க முயற்சியுங்கள். இரு தொடைகளையும் ஒரே நேரத்தில் பதிப்பது சிரமமாக இருந்தால், ‘சீசா’ போல ஒவ்வொரு தொடையாக பதிக்க முயற்சிக்கவும்.

நிமிர்ந்து உட்கார்ந்து, பாதங்களை சேர்த்து, தொடைகளையும் தரையில் பதிவதுபோல வைத்திருப்பதே பத்த கோணாசனம். ‘பட்டர்ஃபிளை போஸ்’, ‘காப்ளர் (Cobbler) போஸ்’ என்ற பெயர்களும் இதற்கு உண்டு.

நன்கு மூச்சை இழுக்கவும். மூச்சை விட்டபடியே, முதுகை கூன்போடாமல், இடுப்பில் இருந்து இயன்ற வரை குனிந்து, நெற்றியால் கால் விரல்களையோ, தரையையோ தொட முயற்சிக்கவும். சுவாசம் சீராக இருக்கட்டும். 1-10 எண்ணுங்கள். மூச்சை இழுத்தபடி, நிமிர்ந்து உட்காருங்கள். காலை நீட்டி ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள்.

வயிறு, இடுப்புக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைப்பதால், சிறுநீரகம், புராஸ்டேட் சுரப்பிகள், கர்ப்பப்பை இயக்கம் சீராகும். சிறுநீர்த் தொற்று, குடலிறக்க பிரச்சினைகள் தீரும். சியாட்டிகா பிரச்சினை உடையவர்கள் தவிர்ப்பது நல்லது.

நாளை – கையும், காலும்‘காயா, பழமா?’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in