

முன்னோட்டப் பயிற்சியில் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளோம். அடுத்து, மணிக்கட்டு. கைகளை முன்னால் நீட்டவும். இரண்டு மணிக்கட்டுகளையும் வலது புறமாக 3 முறை, இடது புறமாக 3 முறை சுற்றவும். கம்பி மத்தாப்பு சுத்துவதுபோல ‘இந்த கை இப்டிக்கா.. அந்த கை அப்டிக்கா.’ என சுற்றக் கூடாது. ‘மேலே’, ‘வலது’, ‘கீழே’, ‘இடது’ என்பது போல மனசுக்குள் சொல்லிக்கொண்டே செய்தால், சரியாக சுற்றலாம். பிறகு. கை விரல்களை 5 முறை நன்கு விரித்து மூடவும்.
நிறைவாக, கழுத்துக்கான பயிற்சி. நேராக நிமிர்ந்து நின்று, மூச்சை இழுத்தபடியே மேலே வானத்தை பார்க்கவும். மூச்சை விட்டபடியே குனிந்து, பூமியை பார்க்கவும். இதுபோல 3 முறை. அடுத்து, பக்கவாட்டில். மூச்சை விட்டபடியே இடது பக்கம், மூச்சை இழுத்தபடியே சமநிலை, மூச்சை விட்டபடியே வலது பக்கம். அதாவது சாலையை கடக்கும்போது இடதும், வலதும் பார்ப்போமே, அதுபோல. பின்னர், காதுகளை தோள்பட்டை அருகில் கொண்டு செல்வது போல இடமும், வலமும் மாறி மாறி செய்யவும். நிறைவாக, கழுத்தை முழுமையாக வலப்பக்கமாக ஒரு சுற்று. இடப்பக்கமாக ஒரு சுற்று.
முக்கிய விஷயம். ஏராளமான நரம்புகள் செல்லும் ஏரியா கழுத்து பகுதி. எனவே, கழுத்து தொடர்பான பயிற்சிகளை மிக நிதானமாக செய்வது அவசியம். குனிந்தால், நிமிர்ந்தால் தலைசுற்றல் இருப்பவர்கள், வெர்ட்டிகோ பிரச்சினை உள்ளவர்கள் இவற்றை செய்ய வேண்டாம்.
நாளை – பட்டர்ஃபிளை போல சிறகடிக்கலாம்!