தினம் தினம் யோகா 06: ஐம்பதிலும் வளையும்!

தினம் தினம் யோகா 06: ஐம்பதிலும் வளையும்!
Updated on
1 min read

உடம்பின் பிரதான பகுதி – இடுப்பு. நாம் ‘சிக்ஸ்-பேக்’கா, ‘ரைஸ்-பேக்’கா? என்பதை இந்த ஏரியாதான் தீர்மானிக்கிறது. கணுக்கால், கால் முட்டிகள் போல இப்போது இடுப்பு பகுதியை சுழற்றப் போகிறோம். நிமிர்ந்து நில்லுங்கள். கால்கள் இடையே ஒரு அடி இடைவெளி இருக்கட்டும். கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். இடுப்பில் டஜன் கணக்கில் வளையங்களை மாட்டிக்கொண்டு சர்க்கஸில் பெண் கலைஞர்கள் சுற்றுவார்களே, ‘ஹூலா ஹூப்’.. அதேபோல, வளையங்கள் இல்லாமல் வலப்பக்கமாக 3, இடப்பக்கமாக 3 முறை இடுப்பை சுழற்றுங்கள்.

அடுத்து, முதுகுக்கான பயிற்சி. உடம்பை இலகுவாக வளைக்கும் பயிற்சிகளை சிறு வயதில் தொடங்குவது நல்லது. அதை தவறவிட்டவர்கள் உரிய பயிற்சி எடுத்துக்கொண்டால், ஐம்பதிலும் வளைக்க முடியும். நேராக நில்லுங்கள். மூச்சை இழுத்தபடியே கைகளை மேல்நோக்கி உயர்த்துங்கள். உள்ளங்கை முன்னோக்கி இருக்கட்டும். மூச்சை விட்டபடியே, முதுகை கூன்போடாமல், இடுப்பில் இருந்து குனிந்து கால்களை தொட முயற்சி செய்யுங்கள். இதேபோல, குனிந்து, நிமிர்ந்து நான்கைந்து முறை செய்யலாம்.

அடுத்து, முதுகுப் பகுதியை பக்கவாட்டில் வளைக்கும் பயிற்சி. நேராக நில்லுங்கள். கைகளை தலைக்கு மேல் உயர்த்தி, கூப்பி வையுங்கள். கைகள், காதுகளை ஒட்டி இருக்கட்டும். தலை, கைகள், பார்வை நேராக இருக்கட்டும். நன்கு மூச்சை இழுங்கள். வெளியே விட்டபடியே இடது பக்கமாக சாயுங்கள். மூச்சை இழுத்தபடியே, சமநிலைக்கு வாருங்கள். அதேபோல, வலது பக்கம். இப்படி மாறி மாறி 3 முறை செய்யவும். முதுகுவலி உள்ளவர்கள் தவிர்க்கலாம்.

நாளை – பும்ராவுக்கு சவால் விடலாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in