Last Updated : 06 Dec, 2021 09:23 AM

 

Published : 06 Dec 2021 09:23 AM
Last Updated : 06 Dec 2021 09:23 AM

திருக்குறள் கதைகள் 79 - 80: தாயுள்ளம்

1931 -அக்டோபர் 29-ம் தேதி ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர் வாலி. 50 ஆண்டு கலையுலக வாழ்க்கையில் 15 ஆயிரத்துக்கும் மேலான பாடல்கள் எழுதியவர்.

சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை போன்ற படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருக்கு 52 படங்கள், சிவாஜிக்கு 58 படங்கள், ஜெய்சங்கருக்கு 62 படங்கள் பாடல்கள் எழுதியவர்.

2007-ல் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். தமிழக அரசு விருது 5 முறை பெற்றவர். ‘1963- ஜனவரி 1-ம் தேதி சோற்றுக்கு வழியில்லை. ஜனவரி 31-ம் தேதி சோறு தின்ன நேரமில்லை!’ என்றார்.

அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற இவர் பாடல் திருச்சி ஐயப்பன் கோயில் பிரஹாரத்தில் கல்வெட்டாகச் செதுக்கப்பட்டுள்ளது.

‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்!’, ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்; அவன் யாருக்காக கொடுத்தான்!’, ‘நான் செத்துப் பிழைச்சவன்டா; எமனைப் பார்த்து சிரிச்சவன்டா!’, ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்..!’ பாடல்கள் எம்ஜிஆர் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த வாலியின் வரிகள்.

சினிமா உலகில் கண்ணதாசன் ஆறு ஆண்டுகள் வாலியை விட மூத்தவர். ஆனால் எந்த அரியாசனத்திலும் வாலிக்கு சரியாசனம் கொடுத்து அங்கீகரித்தார்.

வாலியுடன் எம்.எஸ்.வி

‘காற்று வாங்கப்போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன்...!’, ‘கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?!’ ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா!’ பாடல்கள் வாலி எழுதியவை. ஆனால், கண்ணதாசன் எழுதியதாகப் பல பெரியவர்களே மேடையில் குறிப்பிடுவார்கள்.

‘விழியே கதை எழுது!’ கண்ணதாசன் எழுதிய பாடலை வாலியினுடைய பாடல் என்றும் சொல்வார்கள். அந்த அளவுக்கு சிந்தனை, சொல்வளம், வீச்சு இருவரிடமும் இருந்திருக்கிறது.

திரைப்பட வாய்ப்பு சரியாகக் கிடைக்காத விரக்தியில் மூட்டை கட்டிக் கொண்டு ஊர் புறப்பட நினைத்த வாலியை அன்று பி.பி.சீனிவாஸ் சந்தித்தார். ‘கண்ணதாசன் பாடல் ஒன்றை இப்போதுதான் பாடி ஒலிப்பதிவு செய்து வந்தேன்!’ என்றார். ‘என்ன பாடல்?’ என்று கேட்டார் வாலி.

‘‘மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா, வாழ்க்கையில் நடுக்கமா? வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல்தோறும் வேதனை இருக்கும்!’ என்ற பாடலைக் கேட்டு நெஞ்சு நிமிர்த்தி சிலிர்த்து எழுந்த வாலி, சினிமாவை ஒரு கை பார்க்காமல் ஸ்ரீரங்கம் திரும்ப மாட்டேன் என்று சத்தியம் செய்தார்.

‘உன் பாடல்கள் சுமார். நீ முன்னுக்கு வர வாய்ப்பில்லை!’ என்று ஆரம்பத்தில் சொன்ன மெல்லிசை மன்னர் மூச்சு முட்ட முட்ட சந்தர்ப்பங்களைக் கொடுத்தார். ‘இந்த வாழ்வு எம்.எஸ்.வி போட்ட பிச்சை!’ என்றார் வாலி.

‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்!’, ‘ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினை தன்னைத் தீர்க்கும். துன்பம் வராத நிலை தன்னைச் சேர்க்கும்!’ என்ற டிஎம்எஸ் பாடிய தனிப்பாடல் வைணவராக இருந்த அவரை சைவத்துக்கு மாற்றி விபூதியும், குங்குமமும் இடும் முருக பக்தராக மாற்றிவிட்டது.

1958-ல் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் ஸ்கூட்டரில் வாலியை அமர்த்தி ஒவ்வொரு இசையமைப்பாளர் வீட்டுக்கும் அழைத்துப் போய் அறிமுகப்படுத்தினார்.

எம்.பி. சீனிவாசன் சந்தேகப்பட்ட பாடல்தான் 1967-ல் எம்ஜிஆரால் பாடப்பட்டு ‘படகோட்டியில்’ வந்த ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்; அவன் யாருக்காக கொடுத்தான்; ஒருத்தருக்கா கொடுத்தான்; இல்லை ஊருக்காக கொடுத்தான்!’

வாலியை எனக்கு அதிகம் பிடிக்கக் காரணம். அவரும் அடிப்படையில் ஓவியர். இந்தியன் இங்க் பேனா வைத்துக் கொண்டு ஸ்ரீரங்கத்துக்கு எந்த முக்கியப் புள்ளி வந்தாலும் அவரை ‘ஸ்கெட்ச்’ செய்து ஆட்டோகிராப் வாங்கியிருக்கிறார்.

1958-ல் நான் ஓவியம் பயில சென்னை வந்தேன். இவர் எனக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் முன்பே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் உலகப்புகழ் சிற்பி, ஓவியர் தேவி பிரசாத்ராய் செளத்ரி முதல்வராக இருந்தபோது சேர்ந்து ஓராண்டுகமர்ஷியல் ஆர்ட் படித்துவிட்டு வெளியேறி விட்டார்.

எனக்கு 53 படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். ‘என் கேள்விக்கென்ன பதில்?’ ‘குங்குமச்சிமிழில் மாதுளை முத்துக்கள்!’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்!’, ‘உன்னிடம் மயங்குகிறேன்!’, ‘என் கண்மணி உன் காதலி!’, ‘மாம்பூவே சிறு மைனாவே’, ‘கனாக்காணும் கண்கள் மெல்ல’ எல்லாம் சூப்பர் ஹிட் பாடல்கள்.

டிஎம்எஸ்ஸூடன் வாலி

எத்தனை ஆயிரம் பாடல்கள் எழுதினாலும் அவதார புருஷன் -பாண்டவர் பூமி -கிருஷ்ண விஜயம் -ராமானுஜ காவியம் - போன்ற புதுக்கவிதை வடிவில் தீட்டிய இலக்கியங்களே என்றும் அவர் பேர் சொல்லும்.

‘பெண் எலாம் நீரே ஆக்கி பேரெலாம் உமதே ஆக்கி

கண் எலாம் நும்கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து

அண்ணல் எய்வனுமாக்கி ஐங்கணைக்கு அரியத்தக்க

புண் எலாம் எனக்கே ஆக்கி விபரீதம் புணர்த்தி விட்டீர்’

- பார்க்கிற பெண்கள் எல்லாம் சீதையா தெரியுது. கூப்பிடற பேரெல்லாம் சீதான்னே வருது. சந்திக்கிற கண்களெல்லாம் சீதை கண்களாவே தெரியுது. மன்மதன் 5 மலர்க்கணைகளை என் மீது விட்டு நெஞ்சைப் புண்ணாக்கி விட்டான்- ஒரு தடவை இணங்க மாட்டாயா சீதா’ என்று கம்பன் பாடுகிறான். இதை வாலி,

‘சீதையே நீ சிறைபட்ட காரணம் நான் மட்டுமல்ல

நான் அனுப்பிய மாயமான் மட்டும் அல்ல

நீயும்தான் என்னுள்ளே நீ எழுப்பிய ஆசைத் தீயுந்தான்’

என்று அவதார புருஷனில் எழுதியுள்ளார்.

எனது ராமாயண உரை முழுவதையும் கேட்டு விட்டு, ‘சிவகுமார் அருவியாய் கம்பன் பாடல்களை மேடையில் கொட்டக்காரணம் அவர் தாயார்தான். அதாவது சிவகுமாரை ஈன்றெடுத்த கருப்பை. அந்தக்கருப்பை அப்பழுக்கற்ற ஒரு நெருப்பை பெற்றெடுத்திருக்கிறது. அந்த கருப்பைக்கு ஒரு சல்யூட்’ என்ற வாலியின் தாயுள்ளத்துக்கு என் கண்ணீர் அஞ்சலி.

வாலி வீட்டுக்குப் போனால் நேரம் போவதே தெரியாது. பேசிக்கிட்டே இருப்பாரு. அவர் தொடாத சப்ஜெக்ட்டே இருக்காது. ‘இப்பத்தான்யா வாலி வீட்டிலிருந்து வர்றேன்!’ என்று நண்பர்களிடம் சொன்னால், ‘என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே!’ என்பார்கள் அவர்கள். அவர் பேச்சைக் கேட்டவர்கள் மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாய் மாறி விடுவார்கள். கேளாதவர்கள், ‘ஐயோ நான் கேக்கலையே என்று அங்கலாய்ப்பார்கள்!’ -இதைத்தான் வள்ளுவர்..

‘கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாஞ் சொல்!’ என்றார்.

---

குறள் கதை 80 சாதனை

சென்னையிலிருந்து 300 கிலோ மீட்டர் தாண்டி சேலத்தில் 1935-லேயே சொந்தமாக ஸ்டுடியோ கட்டி 1937-ல் ‘சதி அகல்யா’ படம் எடுத்தவர் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம். இலங்கையிலிருந்து ‘கிளாமர்’ நடிகையாக அப்போது விளங்கிய தவமணி தேவியை அழைத்து வந்து ‘சதி அகல்யா’ கதாநாயகி ஆக்கியவர். தமிழில் 116 படங்கள் தயாரித்த நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். டி. ஆர்.சுந்தரம் இயக்கத்தில் 85 படங்கள் வெளிவந்தன.

அவர் மகன் ராமசுந்தரம் இயக்கத்தில் 21 படங்கள் வெளிவந்தன. 1937-ல் ‘புரந்தரதாஸ்’ என்ற முதல் கன்னடப் படம் + தமிழ்ப் படம் எடுத்தவர்கள். 1938-ல் பாலன் என்ற முதல் மலையாளப்படம் எடுத்தது மாடர்ன் தியேட்டர்ஸ். 1938-ல் மாயா மாயவன் என்ற முதல் ஸ்டண்ட் படம் எடுத்ததும் அவர்களே. 1941-ல் ‘உத்தமபுத்திரன்’ இரட்டை வேடத்தில் பி.யு.சின்னப்பாவை ஹீரோவாகப் போட்டு படம் எடுத்தவர் டி.ஆர்.எஸ்.

1945-ல் பர்மா ராணி படத்தின் ஹீரோ டி.ஆர்.எஸ். மனோன்மணி, மந்திரிகுமாரி, சர்வாதிகாரி, திகம்பர சாமியார், திரும்பிப்பார், இல்லறஜோதி, சுகம் எங்கே, மகேஸ்வரி, வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம் போன்ற பல பிரபலப் படங்கள் இவர்கள் தயாரிப்பு.

டி.ஆர்.எஸ், ராமசுந்தரம்

1955-ல் முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும் தயாரித்தது இதே நிறுவனம்.

பி.யு.சின்னப்பா, எம்ஜிஆர், சிவாஜி, அஞ்சலிதேவி, மாதுரிதேவி எனப் பல பிரபலங்களும் பின்னாளில் அதிகப் படங்களில் ஜெய்சங்கரும், இரண்டு படங்களில் நானும் நடித்துள்ளோம்.

அலிபாபா

எல்லிஸ் ஆர்.டங்கன், ஏஎஸ்ஏ சாமி, கே.ராம்நாத், முக்தா சீனிவாசன் போன்ற இயக்குநர்களும் ஜி.ராமநாதன், கே.வி. மகாதேவன்- எம்.எஸ்.வி, வேதா போன்ற இசையமைப்பாளர்களும் பணியாற்றிய ஸ்டுடியோ.

பத்து வருடங்களுக்கு முன்னால் படம் தயாரித்த தயாரிப்பாளர் இப்போதும் படம் எடுக்கிறார்களா என்று தேட வேண்டும். ஆனால், 45 வருடங்கள் சென்னையைத் தாண்டி வெளியூரில் படம் எடுத்து சரித்தரம் படைத்தவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ். எவ்வளவுதான் மன உறுதி இருந்தாலும், சாதிக்கணும் என்கிற வெறி உள்ளவரையே உலகம் கொண்டாடும்.

அதற்கான குறள்

‘எனைத்திட்பம் எய்தியக் கண்ணும்- வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டாது உலகு!’

---

கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x