

எதிலாவது சாய்ந்துகொண்டோ, ஒற்றைக் காலிலோ நிற்பது வசதியாக தெரிந்தாலும், நாளடைவில் கழுத்து, இடுப்பு, முதுகு வலிகளுக்கு இது காரணமாகிவிடும். எனவே, எப்போதும் நிமிர்ந்து நிற்கப் பழகுவது நல்லது. இதற்கு உதவுவது தாடாசனம்.
செய்முறை: கால் பாதங்கள் சேர்ந்து இருக்கட்டும். (பேலன்ஸ் வராவிட்டால், கால்கள் இடையே சற்று ‘சமூக’ இடைவெளி விடவும்.) முழு பாதமும் தரையில் நன்கு பதியட்டும். பார்வை நேராக இருக்கட்டும். மெதுவாக மூச்சை இழுத்தபடியே, கைகளை உயர்த்தி தலைக்கு மேல் கொண்டு செல்லுங்கள். விரல்களை கோர்த்து, உள்ளங்கையை மேல்நோக்கி திருப்புங்கள்.
மேலிருந்து ஒரு கிரேன் வைத்து நம்மை தூக்குவது போல நினைத்துக் கொண்டு, கால் முட்டிகள், இடுப்பு உட்பட எல்லா ஜாயின்ட்களையும் மேல்நோக்கி இழுங்கள். நிமிர்ந்து நின்றபோதிலும், முகம் உட்பட உடல் முழுவதும் ரிலாக்ஸாக இருக்கட்டும். மனசுக்குள் 1 முதல் 15 வரை எண்ணுங்கள். கடைசி 5 விநாடிகளுக்கு குதிகாலையும் லேசாக உயர்த்தவும். மூச்சை வெளியே விட்டபடியே, கைகளை கீழே இறக்குங்கள். முதல் வேலையாக, ‘‘நானும் யோகிதான்.. நானும் யோகிதான்..’’ என ஸ்டேட்டஸ் போடுங்கள்.
பலன்: மார்பு விரிவடைந்து முழு சுவாசம் கிடைக்கிறது. தொடை, கால் தசை வலுவாகிறது. கவனச் சிதறல் குறைகிறது. முக இறுக்கம் மறைகிறது. உயரம் கூடும். மூட்டுவலி, குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கலாம்.
நாளை – ‘முட்டிக்கு முட்டி தட்டலாம்’