

தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அண்மையில் நடத்திய பள்ளி மாணவர்களுக்கான கலை விழாவில் சென்னை, மயிலாப்பூர் பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சக்தி முரளிதரன் வெற்றி பெற்றார்.
சென்னை மாவட்ட அளவில் 60 போட்டியாளர்களுடன் போட்டியிட்டுத் தேர்வானவர். தமிழக அளவில் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து தேர்வான 38 போட்டியாளர்களுடன் போட்டியிட்டுத் தமிழக அளவில் வென்றுள்ளார்.
சென்னை மாவட்ட அளவில் நடந்த சுற்றில் பாபநாசம் சிவன் அருளிய 'தணிகை வளர்' என்னும் பாடலையும், தமிழக அளவில் சேலத்தில் நடந்த போட்டியில் தியாகராஜர் அருளிய 'பக்கல நிலாபடி' கீர்த்தனையையும் பாடினார். இதன் மூலம் தமிழக மாநிலத்தின் கலா உத்சவ் விருதை சேலம் மாவட்டத்தின் கல்வி அதிகாரிகளிடம் இருந்து பெற்றார்.
டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கவிருக்கும் தேசிய அளவிலான கலா உத்சவ் போட்டிக்குத் தமிழகத்தின் சார்பாகப் பங்கெடுக்க இருக்கிறார். தற்போது இவர் சாத்தூர் லலிதா சந்தானம் மற்றும் அம்ரிதா முரளி ஆகியோரிடம் இசைப் பயிற்சி எடுத்துவருகிறார்.
சங்கரா டிவியின் சங்கீத சாம்ராட், யுவகலா பாரதி, யுவ கலாகர் ஆகிய விருதுகளை வென்றிருப்பவர் சக்தி முரளிதரன்.