Last Updated : 29 Nov, 2021 09:19 AM

 

Published : 29 Nov 2021 09:19 AM
Last Updated : 29 Nov 2021 09:19 AM

திருக்குறள் கதைகள் 74-75: வதந்தி

உறுதிமொழி -படம் ஆர்.வி. உதயகுமார் டைரக் ஷனில் தேக்கடியில் 1990 -ஏப்ரல் 18-ந்தேதி படமாகிக் கொண்டிருந்தது. பிரபு அதில் ஹீரோ. எனக்கு கனமான குணச்சித்திர வேடம். தேக்கடி பகுதி கேரள எல்லைக்குள் உள்ளது. வனவிலங்குகள் குறிப்பாக யானைகள், காட்டெருமைகள், சாம்பார்-புள்ளி மான் வகைகள், சிறுத்தைகள் சாதாரணமாகப் பார்க்கலாம்.

இன்று எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. சிவாஜி, தன் துணைவி, பேரன், பேத்திகளுடன் தேக்கடிக்கு வந்தார். 20-ம் நூற்றாண்டில் உலக அளவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். என் மனைவி குழந்தைகளை அழைத்துப் போய் அறிமுகம் செய்து வைத்தேன்.

தமிழ் திரையுலகில் நடிப்புச் சக்கரவர்த்தியாக புகழ்பெற்று அகில இந்திய அளவிலும் உள்ள மாஜி மன்னர்கள், ஜமீன்தார்கள், வடநாட்டு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், சிவாஜியுடன் நட்பு வைத்துக் கொள்வதை பெருமையாக நினைத்த நாட்களை நான் அறிவேன்.

எல்லோரும் சென்ற பின்னர் என் தோளிலே கைபோட்டு தனியே அழைத்துச் சென்றார். மலைச்சரிவில் நடந்தவாறு, ‘டேய் சிவா! தேக்கடிக்கு சிவாஜிகணேசன் கெஸ்டா வந்திருக்கேண்டா’ என்று குரல் கம்ம சொன்னபோது அவர் கண்களில் இரண்டு முத்துக்கள் திரண்டிருந்தது.

சிவாஜியின் தீவிர ரசிகர் என்பதை விட அவருடைய பக்தன் நான். ‘என்னண்ணே பேசறீங்க. நீங்க போகாத அவுட்டோர் லொகேஷனா? நீங்க மிதிக்காத புல்வெளிகளா? நீங்கள் போடாத வேஷமா? நீங்க பேசாத தமிழா? நீங்க பார்க்காத புகழா? நாங்கல்லாம் -நீங்க சாப்பிட்டு எழுந்த பிறகு அந்த எச்சிலையில் சாப்பிட்டவர்கள். உங்களை யாருடனும் ஒப்பிடாதீர்கள்!’’ என்று ஆறுதல் வார்த்தை சொன்னேன்.

மறுநாள் காலை என் மகள் பிருந்தா பத்து வயதுச்சிறுமி -பார்க்கில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள். சிவாஜி வாக்கிங் போயிருக்கிறார். ‘குட்மார்னிங் அங்கிள்’- என்று அவள் சொல்ல, ‘ஏ குட்டி! உங்கப்பா எனக்குத் தம்பி -நான் உனக்குப் பெரியப்பா- பெரியப்பான்னு கூப்பிடு!’ என்று சொன்னாராம்.

இதே ஆண்டு 1990 -நவம்பர் முதல் வாரம் கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிவாஜி மற்ற கலைஞர்களுடன் சிங்கப்பூர் சென்றார். கதாநாயகனாக உச்சகட்ட புகழை அனுபவித்தவர். இப்போது வயதான வேடங்களில் ஒன்றிரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரம்.

5000-க்கும் மேற்பட்டோர் கூட்டம். சிங்கப்பூரில் அரங்கம் நிரம்பி வழிந்தது. திரை மின்னியது. ‘‘கிஸ்தி, திரை, வட்டி, வேடிக்கை. வானம் பொழிகிறது. பூமி விளைகிறது -உனக்கேன் கொடுப்பது கிஸ்தி’’ என்று கட்டபொம்மனாக சிவாஜி கர்ஜிக்கும் காட்சி, ரசிகர்கள் ஆரவாரமாக கை தட்டினர்.

அடுத்து, ‘ஆரம்பமாவதும் பெண்ணுக்குள்ளே -அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே -ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே -ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே!’ -தங்கப்பதுமை’யில் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் வரிகள். சிதம்பரம் ஜெயராமன் குரலில். விசில் சத்தம் காதைப் பிளந்தது. ‘நல்லதொரு குடும்பம்- பல்கலைக்கழகம் -தங்கப்பதக்கம் போலீஸ் அதிகாரி செளத்திரியாக சிவாஜி -விஜயாவுடன் கைகோர்த்து பாடி ஆடும் காட்சி -மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆரவாரமும், கைதட்டலும் விசிலும் விண்ணைப் பிளந்தது.

ஒரு கலைஞனுக்கு- நெடுநாள் இப்படி ஆரவார வரவேற்புக்கு ஏங்கிய கலைஞனுக்கு, இந்த விநாடியே உயிர் போய் விடக்கூடாதா என்ற எண்ணம் சத்தியமாக வரும்.

சிவாஜிக்கும் வந்தது. அப்படியே நெகிழ்ச்சியில் மயங்கி விழுந்து விட்டார். அவ்வளவுதான். நிகழ்ச்சிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவசரமாக அவரைத்தூக்கி வண்டியில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் விட்டனர்.

நாடு நகரமெல்லாம் -சிங்கப்பூரில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழ்பேசும் அத்தனை நாடுகளிலும் பதட்டம். சிவாஜி எப்படி இருக்கிறார்? சென்னையில் ஜெயலலிதா அரசு அப்போது. ஒரு பெரிய அதிகாரி சவப்பெட்டி செய்வதாக தகவல் தந்தார். ஒரு விநாடி இதயம் நின்று விட்டது. சுதாரித்து சிங்கப்பூர் டிரங்கால் போட்டு, அய்யாக்கண்ணு என்ற பெரியவரிடம் -மருத்துவமனை போய் சரியாக விசாரித்து எனக்கு நிலைமையை சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

சிவாஜி பற்றி வீட்டில் பேசியதைக் கேட்ட -என் மகள் பிருந்தா, ‘‘பெரியப்பாவுக்கு ஒண்ணும் ஆகாதப்பா. சீக்கிரமே வந்துடுவார்!’’ என்றாள்.

பத்து வயதில் பிருந்தா

தெய்வ வாக்காக அதை ஏற்றுக் கொண்டேன். 15 நாள் கழித்து உடம்பில் புதுரத்தம் ஏற்றப்பட்டு, 5 வயது இளமை கூடியவராக வந்திறங்கினார் சிவாஜி. நானும் என் துணைவியும், மகள் பிருந்தாவும் ஒரு பூங்கொத்து வாங்கிப் போய்க் கொடுத்து காலத் தொட்டு வணங்கித் திரும்பினோம்.

இந்த மாதிரி சூழ்நிலைகளுக்கு வள்ளுவர் எழுதிய குறள்:

‘எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்- அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு’

---

குறள் கதை 75 கிருமி

நாடு சுதந்திரமடைவதற்கு முன்னால் இந்தியாவில் பிளேக், காலரா கொள்ளை நோய் மக்களை கதிகலங்க அடித்துக் கொண்டிருந்த காலம். இவ்வளவு நாகரீகம், மருத்துவ வசதி இருந்தும், கொரானா வைரஸ் சென்ற ஆண்டிலிருந்து சுமார் 2 ஆண்டுகள் உலகத்தை நடுநடுங்க வைத்தது அல்லவா அதுபோலத்தான்.

10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பை பொள்ளாச்சியிலுள்ள என் மாமா வீட்டில் தங்கிப்படித்த என் அண்ணன் சண்முகம் - என்னை விட 12 வயது மூத்தவன்- அப்போது எனக்கு 4 வயது. அம்மா, அம்மிச்சியைப் பார்க்க லீவில் எங்கள் கிராமத்துக்கு வந்திருந்தான்.

எனக்கு என் அண்ணனைப் பற்றிய நினைவு ரொம்ப மங்கலாகவே உள்ளது. 16 வயதிலேயே நெடு, நெடுவென்று வளர்ந்திருந்தான். நல்ல சிவப்பு நிறம். சுருட்டை முடி. முகம் அம்மா சாயல். ஒரு நாள் என்னை இடுப்பில் கட்டிக் கொண்டு 6 அடி கால்வாயை தாண்டியது லேசாக நினைவில் உள்ளது.

அது ஒரு வெள்ளிக்கிழமை நாளாக இருக்க வேண்டும். சூலூர் சந்தைக்கு மூட்டைகளை சிலர் வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அண்ணா சென்று மூட்டைகளை முதுகில் ஏற்றி வைத்து வண்டியில் அடுக்க உதவி செய்தான்.

பிறகு அடுத்த தெருவில் இருந்த என் அத்தை வீடு சென்றான். அப்பாவுடன் பிறந்த சகோதரிகள் இருவர். ஒருத்தி இறந்து விட்டார். இந்த அத்தை பெயர் மசாத்தாள். நிலபுலன் எதுவுமில்லை. கணவன் கூலி வேலைக்கு -கிணறு வெட்டப் போவார். அத்தை காடுகளில் களையெடுத்தல், கதிர் அறுத்தல், களத்தில் அவற்றை காயப்போட்டு எருதுகளை வைத்து தாம்பு ஓட்டி -கதிரிலிருந்து தானியங்களைப் பிரித்து, மேற்கிலிருந்து வீசும் காற்றில் தூற்றி, பொட்டு நீக்கி மூட்டை கட்டுதல் என்று எல்லா வேலையும் செய்வார்.

என் அண்ணன் சண்முகன்

அன்று அத்தை ராகிக்களி கிளறியிருந்தார்- கொத்துமல்லி சுண்டாங்கியும், ராகிக்களியும் அப்படி ஒரு காம்பினேஷன். இரண்டு உருண்டை ராகிக்களியை கொத்த மல்லி சுண்டாங்கி தொட்டு முழுங்கி விட்டு வீட்டுப் பக்கம் வந்தான் அண்ணன்.

12 மணி வாக்கில் லேசாக காய்ச்சல் அடித்திருக்கிறது. அம்மா வேப்பிலைக் கொளுந்து பறித்து வந்து அம்மிக்கல்லில் வைத்து அரைத்து தொடை இடுக்கில் கோலிக்குண்டு அளவு வீங்கியிருந்த பகுதியில் தடவினாள். பிளேக் அறிகுறி அந்த வீக்கம். பிற்பகல் காய்ச்சல் கடுமையாக அடிக்க ஆரம்பித்தது. வேறு மருந்து அதற்குக் கிடையாது.

முந்தைய நாள், நாங்கள் குடியிருந்த வீட்டின் மேல் பக்கமிருந்து சாமி படத்திற்கு கீழே ஒரு பெருச்சாளி செத்து விழுந்து கிடந்தது. காட்டு வேலை முடித்து வந்த அம்மா, கெரோசினை அந்த பெருச்சாளி மீது தெளித்து நெருப்பு பற்ற வைத்து அதைத் தூக்கிப் போய் கொல்லைப்புற குப்பை மேட்டில் போட்டார்.

பெருச்சாளி செத்த வீட்டில் பிளேக் கிருமிகள் இருக்கும் என்பதால் எங்கள் வீட்டிற்கு தெற்குப்புறமுள்ள செல்லக்கா வீட்டில் ஒரு அறையில் குடியேறினோம்.

மின்சாரமோ, தெருவில் எண்ணெய் விளக்குகளோ இல்லாத கும்மிருட்டு காலம். காடுகரையில் வேலை பார்த்து ஓய்ந்து போய் வந்த மக்கள் -பொழுது சாய்ந்ததும் வீட்டில் ஏதாவது ராகி தோசையோ, பாசிப்பருப்பு, கொள்ளு வேக வைத்து தாளித்து சுண்டல்போலவோ சாப்பிட்டு விட்டு கட்டையைச் சாய்த்து விடுவார்கள்.

என் தாய்

8 மணிக்கெல்லாம் ‘கொர், கொர்’ சத்தம் வீதியில் போவோருக்கு கேட்கும். நானும் என் அக்காவும் எதையோ சாப்பிட்டு தாழ்வாரத்திலுள்ள திண்ணையில் கம்பளி போர்த்து படுத்திருந்தோம்.

நடு இரவு. ‘ஐயோ ராசா இப்படி தலையில கல்லைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டியேப்பா!’’- என்று என் தாயார் அலறிய குரல் கேட்டு ‘விருக்’கென்று எழுந்தேன். அக்காவும் கண் விழித்து -மலங்க, மலங்க என்னைப் பார்த்தாள். தவழ்ந்து கொண்டே வீட்டுத் திண்ணையிலிருந்து அந்த வீட்டு நிலைப்படியைத் தாண்டினோம்.

அகல் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அண்ணன் கைகளை தூக்கிக் கும்பிட்டவாறு குப்புறப்படுத்திருந்தான்.

அகல் விளக்கின் ஒளி உட்கார்ந்திருந்த என் அம்மாவின் தாடையின் அடிப்பாகம், மூக்கின் அடிப்பாகம், புருவத்துக்கு கீழே உள்ள பகுதியில் மட்டும் பரவி இருக்க, மற்ற முகம் இருட்டில் மறைந்திருந்தது. அம்மாவுக்கும் சுருட்டை முடி. வேப்பிலைக் கொளுந்து அரைக்க வைத்திருந்த குழவிக்கல்லை எடுத்து தலையில் அடித்து அழுததால் நெற்றியின் மேற்புறமிருந்து குபு, குபுவென்று ரத்தம் கொட்டியது. விரிந்த தலைமுடியுடன் அம்மா ஆடி அசைந்து அழுத போது -அவர் நிழல் பின்னால் இருந்த, சுவற்றில் ஏதோ பேய் வந்து அழுவது போன்ற பிரமையை 4 வயது சிறுவனான எனக்கு ஏற்படுத்தியது.

‘அம்மா ஏங்க்கா அழுகறாங்க?’ -என்று கேட்டேன். ‘அண்ணன் செத்துப் போயிட்டாண்டா’ -என்றாள் அக்கா. அந்த வயதில் சாவு பற்றி என்ன தெரியும்? எல்லோரும் அழுகிறார்கள். நானும் அழுதேன்.

எப்படியோ தூங்கிப் போய் விட்டேன். மறுநாள் அண்ணனை வீட்டில் காணவில்லை. எடுத்துப் போய் புதைத்து விட்டார்களாம். இது நடந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையிலிருந்து கிராமத்திற்கு சென்ற போது - செஞ்சேரி மலையில் சைக்கிள் கடை வைத்திருந்த என் பெரிய அத்தை மகன் சுப்பையா மாமா நடந்தவற்றைச் சொன்னார்.

சுப்பையா மாமா

‘‘பிளேக்குன்னு தெரிஞ்சதும், வேட்டுச் சத்தம் கேட்டு காக்கைகள் பறப்பது போல ஊர்ச்சனம் கண்மூடி முழிப்பதற்குள் ஊரைக் காலி செய்து விட்டு பறந்து விட்டனர். காலையில பத்து மணிக்கு வந்து பார்த்தேன். அம்மாவும், அம்மிச்சியும் செத்துப் போன அண்ணன் பக்கத்தில பரிதாபமா உட்கார்ந்திருந்தாங்க. நிலமையைப் புரிஞ்சிட்டு சுடுகாட்டுக்கு கடப்பாறை மண் வெட்டி எடுத்துட்டு நானே போய் 6 அடி நீளம், 6 அடி ஆழம் குழி தோண்டினேன். வீட்டுக்கு வந்தேன். முந்தினநாள் ராத்திரி 12 மணிக்கு உயிர்போனது. இப்ப 10 மணி. உடம்பு விறைத்துப் போய் மரக்கட்டை மாதிரி ஆகியிருந்தது. நான் ஒருவனே ஏணியைத் தூக்கி தோளில் வைப்பது போல சண்முகன் உடம்பைத் தூக்கிப் போய் அடக்கம் பண்ணினேன்!’’ என்று கூறினார்.

எப்படிப்பட்ட காலம். எப்படிப்பட்ட வேதனையான நேரம். பிளேக் நோய் -காற்றில் பட்டாலே பரவும் என்னும்போது -பிளேக்கில் இறந்து போன உடம்பைத் தொட்டுத் தூக்கி எடுத்துப் போய் ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள சுடுகாட்டில் புதைத்த அந்த சூதுவாது, தெரியாத பாசக்கார மனிதர்களையெல்லாம் இந்தக் காலத்தில் எங்கு போய் தேடுவது...?

இந்த மனித ஆத்மாக்களை கெளரவப்படுத்த வள்ளுவர் எழுதிய குறள்:

‘பயன்தூக்கார் செய்த உதவி -நயன்தூக்கின்

நன்மை கடலினும் பெரிது’

----

கதை பேசுவோம்..

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x