‘ஒருமாதிரி’ வினா-விடை

‘ஒருமாதிரி’ வினா-விடை
Updated on
1 min read

‘திருமங்கலம் பார்முலா’ பற்றி சிறுகுறிப்பு வரைக.

விடை:

திருமங்கலம் பார்முலா என்பது மொத்தம் 3 விதிகளைக் கொண்டது.

தலைவிதி 1:

ஒரு பொருளின் மீது வெளிப்புற விசை செயல்படாத வரை, எந்த பொருளும் தனது நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக்கொள்ளாது.

விளக்கம்:

அதாவது, அரசியல் கட்சியினர் ‘கவனிக்காத வரை’ தங்கள் முடிவை மக்கள் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.

தலைவிதி 2:

ஒரு பொருளின் மீது விசை செயல்படுவதால் ஏற்படும் மாற்றம், அந்த விசை செயல்படும் திசையிலேயே அதற்கு நேரானதாக இருக்கும்.

விளக்கம்:

எவ்வளவுக்கு எவ்வளவு மக்கள் ‘அதிக விசையுடன்’ கவனிக்கப்படுகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அழுத்தமாக தங்கள் வாக்கை பதிவு செய்வார்கள்.

தலைவிதி 3:

எந்த விசைக்கும் அதற்கு சமமான நேர் எதிர் விசை உண்டு.

‘கவனிப்பதாக’ ஆசைகாட்டி கடைசி நேரத்தில் கட்சிக்காரர்கள் கண்டுகொள்ளாமல் போனால், மக்கள் தங்கள் எதிர்வினையை எதிர்க்கட்சிக்கு ஆதரவாக காட்டுவார்கள்.

இதுவே ‘திருமங்கலம் பார்முலா’ எனப்படுகிறது. சென்னை, மதுரை, டெல்லி போன்ற சில இடங்களில் வசித்த முட்லெர்ட் கட்லெர்ட் அழ்அக்இர்இ என்ற முதுபெரும் அறிஞர் இதை கண்டறிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் கண்டறிந்த காலத்தில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் ஏற்படுத்திய இந்த பார்முலா, அதன் பிறகு அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று, பின்னர், தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in