உவமைக் கவிஞர் சுரதா: எழுத இடம் இல்லை என்று பெயரை மாற்றியவர் 

உவமைக்கவிஞர் சுரதா | கோப்புப் படம்.
உவமைக்கவிஞர் சுரதா | கோப்புப் படம்.
Updated on
2 min read

சுரதாவின் 101-வது பிறந்த நாள் இன்று...

ஓர் அஞ்சலட்டையின் இறுதியில் சுப்புரத்தினதாசன் என்று தம் பெயரை எழுதுவதற்கு இடம் போதவில்லை என்று அதனைச் சுருக்கி சு.ர.தா. என்று எழுதியவர், காலப்போக்கில் அவ்வாறே தம் பெயரை எழுதத் தொடங்கினார். பெயரெழுத்துகளுக்கு நடுவில் ''எதற்கு இந்தத் தேவையில்லாத ஆணிகள்?'' என்று கருதியவர் அவற்றைப் பிடுங்கிவிட்டார். ஆணி பிடுங்கப்பட்ட அப்பெயரே 'சுரதா' என்று நிலைத்தது.

''ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர் நொடிக்குள் ஓடப்பர் உடையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ'' என்பவை பாரதிதாசனின் புகழ்பெற்ற வரிகளைக் கேட்ட இராசகோபாலன் அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக 'சுப்புரத்தினதாசன்' ஆனார்.

நாகப்பட்டினத்தை அடுத்த பழையனூரில் 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாளில் சுரதா பிறந்தார்.

பாரதிதாசனிடம் பணி

பாரதிதாசனின் இருப்பிடம், தமிழ், கவிதை, இலக்கியம் முதலான துறைகளில் ஆர்வமுடைய இளைஞர்களின் வேடந்தாங்கலாக விளங்கியது. புதிது புதிதாக இளைஞர்கள் வருவதும் தங்குவதும் போவதுமாக இருப்பார்கள். சுப்புரத்தினதாசனாகிய இராசகோபாலனும் பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துகொண்டார். இருபது ரூபாய் திங்களூதியம் பெற்றுக்கொண்டு பாவேந்தரிடம் இரண்டாண்டுகள் பணியாற்றினார்.

பெரும்பாலும் கவிஞர்கள் பிறரைப் பின்பற்றி எழுதும் வழக்கமுடையவர்கள். அதை சுரதா விரும்பாதவர். "தனக்கு அதில் உடன்பாடில்லை, "அந்த நிழல் வழி வாசலை' விட்டு நீங்கி எழுதும் கவிஞன் நான். இவரையோ, அவரையோ பின்பற்றி எழுதப் பிரியப்படாதவன்'' என்று மார்தட்டிக் கொள்வதில் தவறில்லை என்பதை நிரூபித்தவர்.

அரசியலில் பெரியாரையும், கவிதையில் பாரதிதாசனையுமே சுரதா வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டார். ஆனாலும், தனது எழுத்தியக்கத்தில் உள்ளடக்கம், வடிவம் என எதிலும் அந்தத் தாக்கம் வந்துவிடாதவாறு கவனமாகவும் இருந்தார்.

சுரதாவின் முதலாவது கவிதைத் தொகுப்பிற்கு 'சாவின் முத்தம்' என்று பெயரிட்டார். முதல் தொகுப்பிற்கே இப்படிப் பெயர் வைக்கலாமா என்று நண்பர்கள் வினவியுள்ளனர். இளமையிலேயே பகுத்தறிவுக் கொள்கைப் பற்றாளர் என்பதால் அது குறித்து அஞ்சியதேயில்லை. ''கவிதை என்பது வரப்பிரசாதமில்லை. கற்றுக்கொண்டு உழைத்தால் வருவது'' என்பதில் உறுதியான கருத்துடையவர். தம்மை 'மொழிப்பற்றாளர்' என்று கூறுவதையும் அவர் ஏற்கவில்லை.

''இது மொழிப்பொறுப்பு. பற்று வைத்தல் இன்னொன்றைச் சிறப்பாகக் கண்டவுடன் மாறிவிடக்கூடியது'' என்றார்.

சொந்தப் பதிப்பகம்

தனது பெயரிலேயே பதிப்பகம் ஒன்றையும் தொடங்கி நடத்தினார் சுரதா. 'அமுதும் தேனும்', 'தேன்மழை' உள்ளிட்ட அவரது கவிதைத் தொகுப்புகள் மட்டுமின்றி, முக்கியமான சொற்பொழிவுகளையும் மேற்கோள்களையும் தொகுத்து வெளியிட்டார்.

'வெட்டவெளிச்சம்' என்ற தலைப்பில் அவர் தொகுத்து வெளியிட்ட தகவல்கள், முகிலின் 'அகம் புறம் அந்தப்புரம்' புத்தகத்துக்கெல்லாம் முன்னோடி முயற்சி. தமிழ்ச் சொல்லாக்கம் குறித்த அவரது குறிப்புகளின் தொகுப்பு அகராதியியலாளர்களுக்கும் மொழியியலாளர்களுக்கும் நல்லதொரு ஆவணம். அவர் தொகுத்து வெளியிட்ட குறிப்புகளின் வழியே, அவருடைய பல்துறை ஆர்வத்தையும் பரந்துபட்ட வாசிப்பையும் புரிந்துகொள்ள முடியும்.

எதனைப் பற்றியும் அஞ்சாமல் தடாலடிக் கருத்துகளைக் கூறுபவர் சுரதா. அவற்றில் உண்மையும் இருந்ததால் மறுப்பதும் கடினம். ''புதுக்கவிதைக்கு வடிவம் இல்லையே, வடிவம் இல்லாதது எப்படி நிலைக்கும்?'' என்றார். ''மரபு வடிவம் இல்லாமல் இருப்பதால் இப்போதைக்குப் புதிதாகத் தெரிகிறது'' என்பது அவரது கணிப்பு. அது உண்மையும்கூட. தற்போது தம் புதுமையை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்ற இக்கட்டில் புதுக்கவிதையுலகம் இருக்கிறது.

இதழ்களின் ஆசிரியர்

தம் வாழ்நாள் முழுவதும் இலக்கியம், தமிழ், கவிதை சார்ந்து ஓயாது ஊக்கமுடன் இயங்கிக்கொண்டிருந்தவர் சுரதா. எழுதுபவர்களைவிடவும் பதிப்பிப்பவர்களும், இதழ் நடத்துபவர்களும் தமிழுக்குச் சிறந்த தொண்டு செய்கிறார்கள் என்று கருதினார்.

''காவியம், இலக்கியம், ஊர்வலம், விண்மீன், சுரதா'' ஆகிய பெயர்களில் இதழ்களை வெளிக்கொணர்ந்தார். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். சுரதாவின் கவிதைகளில் மூன்றாம்பால் கூறுகள் தூக்கலாக இருக்கும்.

''எனக்குப் பொடிபோடும் பழக்கத்தைத் தவிர வேறெந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. அதனால் நான் நோயினால் சாகமாட்டேன்.'' என்று உறுதியாக நம்பினார். அவர் நம்பியதற்கொப்பவே நீண்ட வாழ்க்கையை வாழ்ந்தார்.

தமிழக அரசு கவிதைக்கென்று வழங்கத் தொடங்கிய பாரதிதாசன் விருதினை முதலாமவராகப் பெற்றவர் சுரதா. எண்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து சூன் 20ஆம் நாள் 2006ஆம் ஆண்டு மறைவுற்றார்.

"பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்"
- சுரதா

கட்டுரையாளர்: வேல்.ஷாருக்

டிஜிட்டல் மாணவப் பத்திரிகையாளர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in