Last Updated : 22 Nov, 2021 09:40 AM

 

Published : 22 Nov 2021 09:40 AM
Last Updated : 22 Nov 2021 09:40 AM

திருக்குறள் கதைகள் 70 - 71: நிறைகுடம்

சிறுவயதிலிருந்தே எனக்குப் பிடித்த ஜோடி சிவாஜி-பத்மினி. ஒரு கட்டத்தில் பத்மினி எம்ஜிஆருடன் மதுரை வீரன் -படத்தில் நடித்தார் என்றறிந்து 2 வருடங்கள் பத்மினி நடித்த படத்தை நான் பார்ப்பதை தவிர்த்தவன்.

ஜெமினியின் விளையாட்டு பிள்ளை, தேரோட்டம் போன்ற படங்களில் அவருக்கு மகனாக நடித்திருக்கிறேன்.

வினீத் என்ற ஹீரோ -பத்மினிக்கு உறவு முறை. அவரது திருமண வரவேற்புக்கு நான் போன போது, விசேஷமாக ஒரு பார்சல் கூட எடுத்துச் சென்றேன். பத்மினியிடம் அதைக் காட்டி, ‘பப்பிம்மா! இதுக்குள்ளே என்ன இருக்கு சொல்லுங்க பார்ப்போம்!’ என்றேன். ‘GUESS’ பண்ண முடியலேப்பா. நீயே சொல்லிடு!’’ என்றார்.

1958-ல் மோகன் ஆர்ட்ஸில் நான் பயிற்சி ஓவியனாக இருந்தபோது ‘பொன்னு விளையும் பூமி’ என்ற திரைப்படத்தில் பத்மினி நடித்தபோது எடுத்த புகைப்படத்தை பார்த்து ‘வாஷ் டிராயிங்’ முறையில் புகைப்படம் போல வரைந்து வைத்திருந்தேன். அந்தப் படத்திற்கு இப்போது கண்ணாடி சட்டம் மாற்றி எடுத்து வந்திருந்தேன்.

படத்தைப் பார்த்து விட்டு, ‘‘இவ்வளவு அழகா நான் இருந்தேனா?’’ என்று கேட்டார். ‘‘இதை விட அப்ப அழகா இருந்தீங்கம்மா!’’ என்றேன்.

‘‘இப்படத்தை நான் வச்சுக்கலாமா?’’ என்றார்.

‘‘உங்களுக்காகத்தான் கொண்டு வந்தேன்!’’ என்றேன்.

சின்னக்குழந்தை மாதிரி -அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பத்திரிகையாளர்களை -புகைப்படக்காரர்களை அழைத்து, ‘சிவகுமார் என்னை வரைஞ்ச படம் பாருங்க!’’ என்று காட்டினார். எங்கள் இருவரையும் படத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

அடுத்த சில மாதங்களில் சூர்யா -ஜோதிகா திருமணம். செப்டம்பர் 11- 2006-ல் நடைபெற்றது. அடையாறு பார்க் ஓட்டல் வந்து மணமக்களை ஆசீர்வதித்து சென்றார். செப்டம்பர் 24-ல் இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்டார்.

பத்மினி

நடிகை சோபனா வீட்டில் இறுதி மரியாதை செய்யப் போனேன். வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் -எல்லாவற்றையும் அனுபவித்து விட்ட நிம்மதி, சாந்தம் கண்ணாடி பேழைக்குள் இருந்த அந்த முகத்தில் நிலவியது. தலைமாட்டில் குத்து விளக்கேற்றி அதனருகே என் ஓவியம் வைக்கப்பட்டிருந்தது. அந்த சோகத்திலும் ஓர் இன்ப அதிர்ச்சி.

பப்பியம்மாவுக்கு ரஷ்யமொழி பேசத் தெரியும். தமிழ் தெலுங்கு மலையாளம், இந்தி -பேசுவாங்க. உலக நாட்டியப் பேரொளி-ன்னு பட்டம் வாங்கினவங்க. தில்லானா மோகனாம்பாள், வஞ்சிக் கோட்டை வாலிபன் படங்கள் அவர் நாட்டிய திறமைக்கு சாட்சி சொல்லும் படங்கள். 400 படங்களுக்கு மேல அனைத்து மொழிகளிலும் நடித்தவர். ஒரு நாள் கூட தான் பெரிய டான்ஸர் என்றோ, பெரிய ஹீரோயின் என்றோ, என்னைப் போல பல மொழிகள் பேசி பல மொழி ஹீரோக்களுடன் நடித்த நடிகை யாரும் இல்லை என்றோ அவர் வேடிக்கையாகக் கூட சொன்னதில்லை.. அப்படி ஒரு நிறைகுடம்.

இந்த அம்மாவின் குணத்தைப் போற்ற வள்ளுவர் எழுதிய குறள்:

‘பெருமை பெருமிதமின்மை-சிறுமை

பெருமிதம் ஊர்ந்து விடல்!’

---

குறள் கதை 71 அகமுகம்

கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ. ஜூபிடர் பிக்சர்ஸ் ராஜகுமாரி படப்பிடிப்பு சமயம். எம்ஜிஆர் மாதச்சம்பளம் வாங்கும் நடிகர். பக்கத்தில் ராமநாதபுரம் பகுதியில் உடற்பயிற்சி நிலையம் வைத்து தானும் கடுமையாக உடற்பயிற்சி செய்வதுடன் மற்றவர்களுக்கும் பயிற்சியளித்தார் திரு சாண்டோ சின்னப்பா தேவர்.

கட்டான உடலுக்கு சொந்தக்காரரான எம்ஜிஆர் அடிக்கடி தேகப்பயிற்சி நிலையத்திற்கு செல்வார். தேவரும், எம்ஜிஆரும் நண்பர்களானார்கள்.

ஒரு நாள் திரு.தேவர் எம்ஜிஆர் குடியிருந்த வாடகை வீட்டு வழியே நடந்து வந்தபோது, அவர் தாயார் சத்யபாமா, ‘‘சம்பளம் வாங்கிட்டு வர கம்பெனிக்குப் போன ராமச்சந்திரனை இன்னும் காணோமேப்பா. மத்தியான சாப்பாட்டுக்கு மளிகைக் கடைக்கு போக நேரமாயிருச்சு!’’ என்று அங்கலாய்த்தார்.

‘‘ இதோ வர்றேம்மா’’ என்று புறப்பட்ட தேவர் தன் வீட்டில் இருந்து ஒரு பாக்கட்டில் அரிசியும், இன்னொரு பாக்கட்டில் பருப்பும் எடுத்து வந்து சத்யபாமாவிடம் கொடுத்தார்.

பகல்வேளை எம்ஜிஆர் வீட்டுப் பக்கம் வந்தபோது சமையல் கட்டிலிருந்து வாசனை வந்தது. உள்ளே சென்றார். ‘‘தேவர் தம்பிதாம்பா இன்னிக்கு சமைக்க அரிசி பருப்பு கொண்டாந்து குடுத்தது!’’ என்று சத்யபாமா கூறினார்.

சின்னப்பாதேவர்- எம்ஜிஆர்

இந்த சம்பவத்துக்குப் பிறகு இருவருக்கும் நட்பு இறுகியது. ‘‘நான் திரைப்படம் எடுத்தால் நீங்கதான் ஹீரோ இப்பவே சொல்லீட்டேன்!’’ என்றார் தேவர்.

காலம் கனிந்தது. நண்பர்களிடம் கொஞ்சம் காசு வாங்கி ஒரு தொகை சேர்த்து சென்னை வாகினி ஸ்டுடியோ நாகிரெட்டியாரைச் சந்தித்து, ‘‘இதை வைத்துக் கொண்டு படம் முடியும் வரை நீங்கள் எனக்கு உதவ வேண்டும்!’’ என்று கேட்டுக் கொண்டார்.

முதல் படம் ‘தாய்க்குப் பின் தாரம்’- தேவர் தயாரிப்பில் எம்ஜிஆர்-பானுமதி நடிப்பில் வெளி வந்து சக்கை போடு போட்டது. துரதிருஷ்டவசமாக தேவர் எம்ஜிஆர் இடையே மனக்கசப்பு தோன்ற இருவரும் விலகி விட்டனர்.

செங்கோட்டை சிங்கம், நீலமலைத் திருடன், யானைப் பாகன்- போன்று சில படங்களை தயாரித்தார். பலத்த அடி.

எம்ஜிஆர் சீர்காழியில் ‘இன்பக்கனவு’- நாடகம் நடத்தியபோது ஒரு காட்சியில் குண்டுமணி என்ற பயில்வானை தலைக்கு மேல் தூக்கி சுற்றி கீழே போட்டபோது, கணக்குத் தவறி தன் முழங்கால் மீது அவரைப் போட எலும்பு முறிந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

மீண்டும் ஊருக்கே போய் ஏதாவது தொழில் செய்யலாம் என்று முடிவு செய்து நாகிரெட்டியாரிடம் விடைபெறப் போனார் தேவர். ‘‘அங்கு போய் என்ன செய்யப் போகிறாய்? ஒரு பாடல் ஒலிப்பதிவு செய். நான் பார்த்துக் கொள்கிறேன்!’’ என்றார் நாகிரெட்டியார்.

வாஹினி தியேட்டரில் ரிகர்சல் பார்த்து ஒலிப்பதிவு துவங்குகிறது. சீர்காழியில் கால் ஒடிந்து சிகிச்சை பெற்று வந்த எம்ஜிஆர் சரித்திரம் முடிந்தது என்று திரையுலகினர் முணுமுணுத்தனர். ஆனால் 6 மாதங்களில் எலும்பை ஒட்ட வைத்து, அதே குண்டுமணியை தோளில் தூக்கி வைத்து பத்திரிகையாளர்களுக்கு வாஹினி ஸ்டுடியாவில் ‘போஸ்’ கொடுத்துக் கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆர்- சின்னப்பா தேவர்

செய்தி கேள்விப்பட்டு தேவர் வந்தார். ‘‘எம்ஜிஆர் கதை முடியலேண்ணே. இதோ வந்திட்டேன்!’’ என்றார் எம்ஜிஆர்.

‘‘ஆமா, நீங்க என்ன பண்றீங்க?’’

‘‘SONG ரிக்கார்டிங் பண்றேன்!’’

‘‘கேக்கலாமா?’’

‘‘வாங்க!’’

போனார். கேட்டார்.

‘‘பாட்டு நல்லா வந்திருக்கு. யாரு ஹீரோ?’’

‘‘ எனக்கு எந்த ஹீரோ கிடைப்பான். ஒரு கன்னட நடிகரை பேசிட்டிருக்கேன்!’’

‘‘ஏண்ணே! நான் இல்லையா?’’ -எம்ஜிஆர்

இருவரும் கட்டிப்பிடித்து கண்ணீரால் தங்கள் கர்வத்தை கழுவிக் கொண்டனர். அதன் பிறகு 16 படங்களில் தேவருக்காக எம்ஜிஆர் நடித்துக் கொடுத்தார்.

அகத்தில் சிரிக்கும் சிரிப்பே உயர்ந்த நட்பின் அடையாளம் என்கிறார் வள்ளுவர்:

‘முகம் நக நட்பது நட்பன்று-நெஞ்சத்து

அகம் நக நட்பதே நட்பு’

--

கதை பேசுவோம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x