Last Updated : 24 Mar, 2016 10:43 AM

Published : 24 Mar 2016 10:43 AM
Last Updated : 24 Mar 2016 10:43 AM

இதுதான் நான் 18: மணி சார் கையால் வாங்கிய ‘மணி’என் கேரியர் சினிமாதான்னு முடி வெடுக்கிறதுக்கு முன்னாடியே சில படங்கள்ல டான்ஸ் ஆடியிருக் கேன். அது உங்கள்ல பலருக்குத் தெரியுமா, தெரியாதான்னு எனக்குத் தெரியலை. பள்ளிக்கூடம் போறப்பவே பரதநாட்டியம் பயிற்சியில இருந்ததால நாலு மாசம், அஞ்சு மாச இடைவெளியில அப்பாவுடன் ஷூட்டிங் போய்வர ஆரம்பிச்சேன். அப்படி ஒரு தடவை ஊட்டிக்குப் போனப்போதான் ‘மௌன ராகம்’ஷூட்டிங் நடந்தது. மணிரத்னம், பி.சி.ராம், தோட்டாதரணி இவங்க மூணு பேரும் ஹோட்டல்ல இருந்தப்ப, ‘‘என் பையன் பரதநாட்டியம் நல்லா ஆடு வான்’’னு சொல்லி, அவங்க முன்னாடி என்னை ஆடிக் காட்டச் சொன்னார் அப்பா. நானும் ஆடிக் காட்டினேன். ‘‘பையன் நல்லா ஆடுறானே…’’ன்னு மூணு பேரும் பாராட்டினாங்க. இப்போ கூட தோட்டா தரணி சார், ‘‘டேய், எங்க முன்னாடி குட்டி பையனா வந்து ஆட்டத்தை ஆரம்பிச்சவண்டா நீ!’’ன்னு சொல்வார்.

‘மௌனராகம்’ படத்துல வர்ற ‘பனி விழும் இரவு’ பாட்டுல ஃபுளூட் வாசிக்கிற மாதிரி சின்னதா ரெண்டு பிட்ல வந்துட்டுப் போவேன். அந்தப் பாட் டுக்கு அப்பாதான் மாஸ்டர். என் முகம் திரைக்கு வந்த முதல் படம். ஷூட்டிங் முடிஞ்சதும் மணி சார் கூப்பிட்டு கையில ஒரு கவர் கொடுத்தார். அதில் 500 ரூபா இருந்துச்சு. என் வாழ்க்கையில் வாங்கிய முதல் சம்பளம். அதுவும் மணி சார் கையால வாங்கியது. அப்போ நான் எட்டாவது படிச்சிட்டிருந்தேன்.

அந்தப் பாட்டு முழுக்கவே மேஜிக் ஹவர்ஸுன்னு சொல்வோமே, அப்படிப் பட்ட அதிகாலையிலும் சூரியன் மறை யும் அந்தி நேரத்துலேயும் எடுத்தது. அதுக்காக காலையில் மூன்றரை மணிக் கெல்லாம் எழுந்து ஷூட்டிங் போயா கணும். அதேபோல மாலை வெயில் சாய்ந்ததும் போவோம். குளிர்ல ஒருநாள் எனக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு. அதைக் கேள்விப்பட்டு ரேவதி மேடம் அப்பாகிட்ட, ‘‘உங்க பையனுக்கு உடம்பு சரியில்லையாமே’’ன்னு மாத்திரை கொடுத்தனுப்புனாங்க. ஷூட்டிங்ல டான்ஸ் ஆடியது, 500 ரூபா பணம் சம்பாதிச்சதையெல்லாம் பெருசா எடுத்துக்காம, ஸ்கூல் வந்ததும் ஃபிரெண்ட்ஸ்கிட்ட, ஹீரோயின் ரேவதி மேடம் மாத்திரை கொடுத்தது பத்தி தான் பெருமையா சொன்னேன். ‘‘அப்படி யாடா!’’ன்னு எல்லாரும் ஆச்சர்யமா கேட்டானுங்க. இன்னைக்கு அதெல்லாம் ரேவதி மேடம் மறந்தே போயிருப்பாங்க.

‘காதல் பரிசு’னு ஒரு படத்தில் ‘கூக்கூ என்று குயில் கூவாதோ’ன்னு ஒரு பாட்டு. ஒருநாள் அப்பாவுடன் பேட்ச் வொர்க் நைட் ஷூட் போயிருந்தேன். என் குரு தர்மராஜ் மாஸ்டரும் உடன் இருந்தார். பாட்டோட சரணத்தில் ‘‘கூந்தல் பாய் போடு… தோளில் கை போடு… கண்ணில் மை போட்ட மானே’’ன்னு வரிகள் வரும். அந்த இடத்துக்கு அப்பா என்னை ஸ்டெப் போடச் சொன்னார். நான் அப்போ கத்துட்டிருந்த பரதநாட்டிய ஸ்டைல்ல மூவ்மெண்ட் போட்டேன். கமல் சார் உடனே ‘‘ரெடி மாஸ்டர்’’ன்னு அப்பாகிட்ட சொன்னார்.

என்ன இது கத்துக்கவே இல்லையே அதுக்குள்ள ‘ரெடி’ங்கிறாரேன்னு எங்க குரு தர்மராஜ் மாஸ்டரைப் பார்த்தேன். குரு சைலண்டா இருந்தார். கமல் சார் அந்த வரிக்கு ஆட ஆரம்பிச்சார். பாக்குறதுக்கு ரொம்ப ஸ்டைலா இருந்துச்சு. ‘சே…கலக்கிட்டாரே, நாம இப்படி ஸ்டைலா பண்ணலையே, இவருக்கு எப்படி இது தோணுச்சு’ன்னு மறுபடியும் என் குருவைப் பார்த்தேன். அப்போ அவர், ‘‘அதாண்டா பெரிய ஹீரோ. நமக்குன்னு ஒரு ஸ்டைல் வெச்சிக்கணும்!’’னு சொன்னவர், ‘‘கமலை பாரு எப்படி பண்றார்?’’னு தொடர்ந்து சொன்னார். அதுக்குப் பிறகு அந்தப் பாட்டு வரிக்காகவே பல தடவை அந்த பாட்டுக் காட்சியைப் பார்த்திருப்பேன்.

விஜயகாந்த் சார் நடிச்ச ‘ஓர் இனிய உதயம்’ படத்தில் அமலா மேடம் ஹீரோ யின். அதில் வரும் ஒரு பரதநாட்டியம் பிட்டை என் குரு அமைச்சார். நான் உதவி யாளராப் போயிருந்தேன். அதே படத்தில் ‘ஆத்தா ஆச தாங்கல பார்த்தா’ன்னு ஒரு பாட்டுக்கு-சுருட்டை முடி இருந்த தால் என் உடம்பு, முகம் முழுக்க கருப்பு பெயிண்ட் அடிச்சி ஆப்பிரிக்க ஸ்டைல்ல ஆட விட்டாங்க. எனக்குக் கஷ்டமாவும் சோகமாவும் இருந்துச்சு. ஆனா, எங்கப்பாவுக்கு பயந்துட்டு நான் வாயை மூடிட்டு ஆடினேன். அதனால என்னவோ இப்போ கூட மேக்கப் போடுறதை நான் அவ்வளவா தவிர்க்கிறேன்.

9-வது படிக்கிறப்ப ஆழ்வார்பேட்டை யில இருந்த கார்த்திக் சாரோட கல்யாண மண்டபத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தோட ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’ பாட்டு ரிகர்சல் நடந்தது. கார்த்திக் சாரை அப்பா முரளின்னுதான் கூப்பிடுவார். அப்பா அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வெச்சார். அந்தப் பாட்டுல கார்த்திக் சாருக்குப் பின்னாடி நின்னு ஆடியிருப்பேன். எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்ல நைட் ஷூட் போவுது. அப்பாட்ட போய், ‘‘‘அப்பாஜி, நான் என்னோட பர்த்டேவுக்கு எடுத்த டிரெஸ்ஸைப் போட்டுக்கிறேன்’’ன்னு சொன்னேன். ‘‘தாராளமாப் போட்டுக்கோடா’’ன்னார். எனக்குப் பிடிச்ச பிளாக் பேகி பேண்ட், ப்ளோரிடா டி-ஷர்ட், அபெக்ஸ் ஷூவையும் போட்டுக்கிட்டேன். அது தான் நான் முதன்முதலா வாங்கிய காஸ்ட்லி ஷூ. எனக்கு ரொம்பப் பிடிச்ச ஷூவும்கூட.

ஆடுறப்ப ஹீரோவைப் பார்க் கணுமா? கேமராவைப் பார்க்கணுமா? டான்ஸர்களைப் பார்க்கணுமான்னே தெரியலை. அப்பாகிட்ட ஆடுறவங்க எல் லாம் ரொம்பப் பெரிய டான்ஸருங்க. எனக்கு இருந்த சந்தேகத்தை அவர் கள்ட்ட கேட்டேன். ‘‘நாங்க எங்களுக்கு ஸ்ட்ரைட்டா பார்க்குறோம். நீ உனக்கு ஸ்ட்ரைட்டா பாருன்னு சொன்னாங்க. சிரிக்கணுமா? வேண்டாமான்னு எனக்கு டவுட் இருந்துச்சு. அதையும் கேட்கலாமான்னா… திரும்பக் கேட்டா தப்பா நினைப்பாங்களோன்னு நினைச் சிக்கிட்டேன். இப்போ கூட பார்த்தீங் கன்னா, பாட்டு சீன்ல என் முகம் சீரியஸா இருக்கும்.

பாட்டுக்கு இடையில ‘‘பப்பப் பாப்பா’’ன்னு ஒரு மூவ்மெண்ட் வரும். அப்போ டிரெயின்ல இருந்து கேர்ள்ஸ் இறங்குவாங்க. அவங்களப் பார்த்து கிண்டலோட பாடிட்டு ஆடுற மாதிரி ஸ்டெப் வரும். ஆடி முடிச்ச பிறகு நாம இப்படி கேர்ள்ஸைப் பார்த்து பாடி நடிச்சுட்டோமேன்னு கூச்சமா இருந்துச்சு. அந்தப் பாட்டு டிவியில வர்றப்ப யார் பக்கத்துல இருந்தாலும் ஒரே கூச்சமா இருக்கும். அஞ்சாறு வருஷம் அப்படி இருந்துச்சு.

படங்கள்ல பெரும்பாலும் வர்ற பிரேக் டான்ஸ் மாதிரி ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’ பாட்டு டான்ஸ் இருக்காது. முழுக்க அப்பாவோட தனி ஸ்டெப் ஸ்டைல் தெரியும். அந்த பாட்டுல ‘நெஞ்சம் விளையாடுது நித்தம் இசைபாடுது’ன்னு வரிகள் வர்ற இடத்துல ஒரு வேவ்ஸ் ஸ்டெப்பை நான் போட்டேன். பாட்டு ஷூட்டிங் முடிஞ்சதும் சரியா ஆடினோமா, இல்லையான்னு யோசிச்சிட்டே இருந்தேன். முழு பாட்டு ரெடியானதும் நான் போட்ட அந்த வேவ்ஸ் ஸ்டெப்பைப் பார்த்துட்டு அப்பா அப்செட் ஆகிட்டார். ஏன்?

- இன்னும் சொல்வேன்…

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x