

ஒருமுனை மின் இணைப்பை மும்முனை இணைப்பாக மாற்ற முடியுமா?
முடியும். தங்களது வீடு அல்லது கட்டிடத்தில் உள்ள மின் இணைப்பு திறன் 4 கிலோவாட்டுக்கு அதிகமாக இருந்தால், அதற்கேற்ற வயரிங் செய்து, மின் வாரிய உதவிப் பொறியாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இலவச மின்சாரம் யார் யாருக்கு வழங்கப்படுகிறது?
தமிழகத்தைப் பொறுத்தவரை நிபந்தனைகளுக்கு உட்பட்டு விவசாயிகளுக்கும் குடிசைவாசிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
குடிசைக்கு மின் இணைப்பு பெற என்ன செய்ய வேண்டும்?
குடிசைகளுக்கு தமிழக அரசு இலவசமாக மின் இணைப்பு தருகிறது. அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. அதற்குரிய பணத்தை அரசே மானியமாக மின் துறைக்கு வழங்கிவிடுகிறது. குடிசை மின் இணைப்புக்கான தனி விண்ணப்பத்தில் 5 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி, விண்ணப்பிக்க வேண்டும்.
குடிசை இணைப்பு யாருக்கு அனுமதிக்கப்படுகிறது?
கிராம பஞ்சாயத்து, சிறப்பு நிலை கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், நகர்ப்புற குடிசைகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. ஜவஹர் வேலைவாய்ப்பு திட்டம், தாட்கோ, காமராஜர் ஆதி திராவிட திட்டத்தின் கீழ், கட்டப்படும் வீடுகளுக்கும் வழங்கப்படுகிறது.
குடிசை இணைப்பில் என்ன பயன்படுத்தலாம்?
குடிசை இணைப்பில் முதலில் ஒரு 40 வாட்ஸ் பல்பு பயன்படுத்த மட்டுமே அனுமதிக்கப்பட்டது. பின்னர் திமுக ஆட்சியில் இலவச தொலைக்காட்சி வழங்கப்பட்டபோது, கூடுதலாக அதற்கும் 70 வாட்ஸ் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அதிமுக ஆட்சியில் அரசு வழங்கிய இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குடிசை மின் இணைப்புக்கான வீடு எப்படி இருக்க வேண்டும்?
மின் இணைப்பு பெறும் வீடு 250 சதுர அடி பரப்புக்குள் இருக்க வேண்டும். குடிசையானது களிமண், ஓலைக்கூரை, ஓடு, சிமென்ட் தகடு (ஆஸ்பெஸ்டாஸ்) கொண்டதாக இருக்கலாம். தகர குடிசையாகவும் இருக்கலாம். ஆனால் ஓர் அறை மட்டுமே இருக்க வேண்டும்.
இலவச குடிசை மின்சாரத்துக்கு ஏதேனும் நிபந்தனை இருக்கிறதா?
மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால், மின் கட்டணம் செலுத்தத் தயாராக இருக்கிறேன் என்று விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். குடிசையை விற்கவோ, குடிசையை காலி செய்யவோ நேர்ந்தால், ஒரு மாதம் முன்பு மின் துறைக்கு அறிவிப்பு கொடுத்து, மின் இணைப்பை விலக்கிக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. வேறு வகையிலான பயன்பாட்டுக்கு மின் இணைப்பை பயன்படுத்தக் கூடாது.
குடிசை இணைப்புக்கு மீட்டர் உண்டா? கணக்கீடு உண்டா?
குடிசை இணைப்புக்கு பெரும்பாலும் மீட்டர்கள் பொருத்தப்படுவது இல்லை. கணக்காளரும் செல்லமாட்டார்.