Last Updated : 15 Nov, 2021 08:56 AM

 

Published : 15 Nov 2021 08:56 AM
Last Updated : 15 Nov 2021 08:56 AM

திருக்குறள் கதைகள் 66 - 67: செயல்

ராஜாஜி

குறள் கதை 66: செயல்

ராஜாஜி 1878- டிசம்பர் 10-ம் தேதி சேலம் மாவட்டம் தொரப்பள்ளி கிராமத்தில் சக்கரவர்த்தி வெங்கடார்யா -சிங்காரம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

சிறுவயதில் ராஜாஜி மிகவும் மெலிந்து பலவீனமாக இருந்தார். எத்தனை நாளைக்கு உயிரோடு இருப்பார் என்று பயந்துகொண்டே இருந்தனர் பெற்றோர்.

தொரப்பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பயின்று 8 வயதுக்குப் பின் ஓசூர் ஆர்.வி. அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பெங்களூரிலுள்ள சென்ட்ரல் காலேஜிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் படித்து வழக்கறிஞரானார்.

19 வயதில் அலமேலு மங்களம்மாவை மணந்தார். முதல் குழந்தை பிறந்தபோது மனைவியின் வயது 12. 5 குழந்தைகள் பிறந்தன. 3 ஆண், 2 பெண். முதல் மகன் நரசிம்மன், மகள்களில் ஒருத்தி லட்சுமி. காந்திஜியின் மகன் தேவதாஸை மணந்து கொண்டவர்.

சேலத்தில் 1900-ல் வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்தார். 28 வயதில் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார்.

1917-ல் சேலம் முனிசிபாலிட்டி சேர்மன் ஆனார். தலித் ஒருவர் முனிசிபாலிட்டி மெம்பராகத் தேர்வாகக் காரணமாக இருந்தார்.

ராஜாஜி-படேல்- நேரு

ரெளலத் சட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தில் கலந்துகொண்டார். வ.உ.சி. சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி தொடங்கி இலங்கைக்கு 2 கப்பல்கள் விட்ட காலங்களில் ராஜாஜி அவருக்கு நண்பராக இருந்தார்.

1919-ல் காந்திஜி இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தபோது அவருடைய தொண்டனாகச் சேர்ந்தார்.

1924-25 காலகட்டங்களில் தீண்டாமையை எதிர்த்து வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1930-ல் காந்திஜி தண்டி யாத்திரை தொடங்கியபோது அரசு உத்தரவை மீறி உப்பு காய்ச்ச வேதாரண்யம் சென்று 6 மாதம் சிறை தண்டனை அனுபவித்தார்.

1937-ல் நடந்த தேர்தலில் வென்று இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அப்போது 59 வயதான ராஜாஜி பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வென்று முதல் காங்கிரஸ் உறுப்பினராக சட்டசபைக்குள் நுழைந்து தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றார்.

1939-ல் தலித் ஆலயப் பிரவேசம் செய்வதற்கான சட்டத்தைக் கொண்டுவந்தார். இந்தி திணிப்பைக் கொண்டு வந்ததனால் அவருக்கிருந்த பெருமை செல்வாக்கு குறைய ஆரம்பித்தது. பெரியார் இந்தித் திணிப்பை பள்ளிகளில் நடைமுறைப்படுத்தியதைக் கடுமையாக எதிர்த்தார்.

1946-ல் மத்திய மந்திரிசபையில் தொழில், கல்வி, நிதியமைச்சராக இருந்தார்.

1947-ல் நாடு சுதந்திரமடைந்த பிறகு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் -மேற்கு வங்காள கவர்னர் எனப் பல பதவிகள் வகித்து பாரத ரத்னா விருதை தொடக்கத்தில் பெற்றவர்.

சேலம் முனிசிபாலிட்டி சேர்மனாக இருந்தபோது அக்கிரஹாரத்துக்குள் தலித் ஆட்களை வைத்து தண்ணீர் குழாய் இணைப்பைத் துணிந்து நிறைவேற்றியவர்.

மதுவிலக்கைக் கட்டாயப்படுத்தி, நஷ்டத்தை ஈடுகட்ட விற்பனை வரியைக் கூட்டச் சொன்னார்.

தமிழ் மக்களுக்கு ராமாயணம், மகாபாரதம் -காவியங்களைத் தமிழில் எளிமையாக எழுதி வழங்கிய முதல் இலக்கியவாதி.

இவரைப் போன்றோரை கெளரவப்படுத்த வள்ளுவர் எழுதி வைத்த குறள்:

‘பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல்’

----

குறள் கதை 67: கேட்டல்

‘பராசக்தி’ படம் இரண்டு அற்புதக் கலைஞர்களைத் தமிழ் மண்ணுக்கு அடையாளம் காட்டியது. ஒருவர் கலைஞர் மு.க., இன்னொருவர் சிவாஜி கணேசன்.

‘ராஜகுமாரி’ படத்தில் தொடங்கி, தன் நெருப்புப் பொறி பறக்கும் வசனங்களால் படிப்படியாக முன்னேறிய கலைஞரைத் தமிழ்நாடே திரும்பிப் பார்க்க வைத்தது ‘பராசக்தி’ படம்தான். சிவாஜி கணேசனுக்கு கோர்ட் சீன் வசனங்களை எப்படி அழுத்தம் திருத்தமாக உச்சரிக்க வேண்டும் என்று உடன் இருந்து சொல்லிக் கொடுத்தவர் கலைஞர். படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இருவரும் இணைபிரியா நண்பர்களாகி விட்டனர்.

திமுகவை வளர்க்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு கலைஞருக்கும் இருந்ததால் பிரச்சார நாடகங்கள் எழுதி சிவாஜியை நடிக்கவைத்து தானும் அதில் ஒரு வேடம் ஏற்று நடிப்பார்.

நாத்திகம் பேசும் படம் ‘பராசக்தி’ என்று கோபித்துக்கொண்டு ஒரு தினசரி, விமர்சனம் எழுதும்போது இது பராசக்தி அல்ல பரப்பிரம்மம் என்றும், கதை வசவு குணாநிதி என்றும் குறிப்பிட்டிருந்தது.

சிவாஜி-பீம்சிங்

அந்த பரபிரம்மத்தையே நாடகத்தின் தலைப்பாக வைத்து ஒரு பிரச்சார நாடகம் எழுதி சிவாஜியை நடிக்க வைத்தார் கலைஞர்.

சிவாஜி வசனத்தாளைக் கையில் வாங்கிப் படித்து, நான் என்றுமே பார்த்ததில்லை. கிட்டத்தட்ட 16 படங்களில் அவரோடு நடித்திருக்கிறேன். உதவி இயக்குநர், டயலாக் பேப்பரைக் கையில் வைத்துக்கொண்டு நிதானமாகப் படிக்கப் படிக்க - அப்படியே மனதில் அதை உள்வாங்கிக் கொள்வார். இரண்டு அல்லது மூன்று முறை படித்ததும் அவரே அதைச் சொல்லிக் காட்டுவார். ஒருசில வார்த்தைகள் விட்டிருந்தால் அதை மட்டும் சரிசெய்து கொண்டு கேமரா முன்னால் நேரடியாக நின்று நடிக்கப் போய்விடுவார்.

மற்ற நடிகையருடன் வசனங்களை அவர் சொல்லிப் பார்த்துத் தயாரானதே இல்லை.

கலைஞர், சிவாஜி

படிக்கும்போது -கண்களுக்கு வேலை தருகிறோம்- பிறகு கண் வழியே அது மூளைக்குப் போகிறது. திரும்பப் படிக்கும்போது வாய்க்கு வேலை தருகிறோம். இப்படி எந்த சிரமமும் ஏற்படாமல், பாட்டிலில் ரப்பர் மாட்டி குழந்தை வாயில் வைத்தால், பால் நேராகத் தொண்டை வழி வயிற்றுக்குப் போவது போல -இன்னொருவர் படிக்கும்போது எளிதில் மனதில் பதிய வைத்துக்கொள்ளும் பழக்கம் சிவாஜியிடம் இருந்தது.

‘ராஜாராணி’ படத்தில் ஓரங்க நாடகம் ஒன்று சேர்த்தால் சுவையாக இருக்கும் என்று டைரக்டர் பீம்சிங் சொல்ல, சிவாஜி ஏற்கெனவே ‘பரப்பிரம்மம்’ நாடகத்தில் புறநானூற்றுத் தாய் பற்றி பேசியிருக்கிறார். அதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று போனில் தெரிவித்தார் கலைஞர்.

கலைஞருடன் நானும் என் துணைவியும்

இதைக் கேட்ட சிவாஜி கடும்கோபம் கொண்டார். ‘பரப்பிரம்மம்’ நாடகத்தில் நான் பேசிய அந்த வசனத்தை எஸ்.எஸ்.ஆர். நடித்த ‘அம்மையப்பன்’ படத்தில் எனக்குத் தெரியாமல் கலைஞர் அவருக்குக் கொடுத்து - அவர் பேசி படமெடுத்துப் படம் சரியாகப் போகவில்லை. அதே வசனத்தை நான் பேச வேண்டுமா? முடியாது என்று சொல்லவே -செய்தி கேள்விப்பட்டு கலைஞர் கோபாலபுரத்திலிருந்து பதறியடித்துக் கொண்டு வாஹினி ஸ்டுடியோ வந்தார். காரில் வரும்போதே இன்னொரு புறநானூற்றுப் பாடல் ‘ஒக்கூர் மாசாத்தியார்’ எழுதியது, ‘அதற்கான வசனத்தை எழுதிக் கொடுத்து விடலாம்’ என்று வந்தார்.

எஸ்.எஸ்.எல்.சி., எழுதி பாஸ் ஆகாத ஒரு இளைஞன் பயன்படுத்திய ஒக்கூர் மாசாத்தியார் பாடல்:

‘கெடுக சிந்தை கடிதிவள் துணிவே

முதின் மகளிர் ஆதல் தகுமே

மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்ஐ

யானை எறிந்து களத்தொழிந்தனனே

நெருநெல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்

பெருநிரை விலங்கி ஆண்டு பட்டனனே

இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி

வேங்கை கொடுத்தும் வெளிதுவிரித்துடீ இப்

பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி

ஒரு மகன் அல்லது இல்லோள்

செருமுகம் நோக்கி செல்கென விடுமே!’

யுத்தம் நடக்கிறது. தந்தையார் அந்த யுத்தத்தில் இறந்து விடுகிறார். ஊரிலிருந்து வந்த கணவனிடம் விவரம் சொல்லி, அவரைப் போருக்கு அனுப்புகிறாள். நாலு நாள் தொடர்ந்த போரில் அவரும் வீரமரணம் அடைந்து விடுகிறார். நாடு இருந்தால்தானே நாம் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியும் என்று 10 வயதுப் பாலகனுக்குத் தலைவாரி பூச்சூடி ரத்தக்காவி படிந்த வாள் கொடுத்து மகனே நீயும் போருக்குப் போ என்று அனுப்புகிறாள் அந்த வீரத்தாய். இது கவிதையின் பொருள்.

இந்தப் பாடலுக்கான உரையை 2 மணி நேரத்தில் ஒரே மூச்சாக கலைஞர் எழுதிக் கொடுத்தது சாதனை என்றால் நாலரை நிமிடம் வரும் அந்த நீண்ட வசனத்தை 4 முறை கேட்டுவிட்டு ‘டேக்’ என்று சிங்கம் போல் கர்ஜித்து ஒரே டேக்கில் சிவாஜி பேசி நடித்தது இன்று வரை ஒரு ரெக்கார்டு.

எல்லா செல்வங்களையும் விடச் சிறந்தது -காதால் கேட்கும் கேள்வி ஞானம் என்பதைத்தான் வள்ளுவர்:

‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை’

என்று எழுதினார்.

----

கதை பேசுவோம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x