

1967-ம் ஆண்டு தமிழகச் சட்டசபைத் தேர்தல். அப்போது நான் ஒண்டிக்கட்டை. தி. நகரில் ஒரு வீட்டு மாடியில் குடியிருந்தேன். தேர்தலில் தி. நகர் தொகுதியில் போட்டியிட்ட ஒரு சுயேச்சை வேட்பாளரின் சின்னம் சிட்டுக்குருவி. அவர் ஒரு திறந்த காரில் ஒலிபெருக்கியைப் பொருத்திக் கொண்டு, “குத்து குத்து! குருவியிலே குத்து” என்று கூறியபடி பிரச்சாரம் செய்துவந்தார். தனது கொள்கை பற்றி அல்லது மற்ற கட்சிகள் பற்றி ஒரு வார்த்தை கூடக் கிடையாது. ஒரே கோஷம், ‘குத்து குத்து குருவியிலே குத்து’. அது ஒன்றுதான்!
தேர்தல் நாள் வந்தது. கீழ் போர்ஷனில் இருந்த குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் பெண்களும் தங்கள் தாயிடம் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை வலியுறுத்தி அனுப்பினர். அந்த அம்மையார் ஓட்டுப் போட்டு விட்டுத் திரும்பினார். அனைவரும் அந்த அம்மையாரை சூழ்ந்து கொண்டு ’யாருக்கு ஓட்டுப் போட்டே’ என்று கேட்டனர். “நீங்க எல்லாரும் சொன்ன கட்சிக்குத் தான்” என்று சொல்லிவிட்டு அந்த அம்மையார் பேச்சை மாற்ற முயன்றார். சந்தேகம் எழுந்ததால் அனைவரும் ”உண்மையைச் சொல்லு” என்று வற்புறுத்தினர். அந்த அம்மையார் கடைசியில் “குருவிக்குதான் போட்டேன்’ என்று உண்மையை ஒப்புக்கொண்டார். “உன்னை யாரு குருவிக்கு ஓட்டு போடச் சொன்னது?” என அனைவரும் அவரை உலுக்கி எடுத்தனர். ”ஓட்டுச் சீட்டைப் பார்த்தேன். குருவி என்னையே பார்த்தது. எனக்குப் பாவமா இருந்தது. குருவியிலே குத்தினேன்” என்றார் அந்த அம்மையார்.
ஓட்டுச்சீட்டில் இருந்த குருவிச் சின்னத்தைப் பார்த்தபோது அந்த அம்மையாருக்கு கொள்கை, கட்சிகள், வேட்பாளர்கள், தலைவர்கள் என எதுவும் நினைவுக்கு வரவில்லை. குருவி அவரைப் பார்த்து கெஞ்சுவதாகவே அவருக்குத் தோன்றியது. அவரது காதுகளில் ”குத்து, குத்து குருவியிலே குத்து” கோஷம்தான் ஒலித்துக் கொண்டிருந்தது. குருவிச் சின்ன சுயேச்சை வேட்பாளர் அந்தத் தேர்தலில் மூவாயிரத்துக்கும் அதிகமாக ஓட்டுகளைப் பெற்றார் என்று ஞாபகம்.