Last Updated : 08 Nov, 2021 10:28 AM

 

Published : 08 Nov 2021 10:28 AM
Last Updated : 08 Nov 2021 10:28 AM

திருக்குறள் கதைகள் 62 - 63: காலம்

சினிமாவுடன் முதன்முதல் தொடர்பு வைத்துக் கொண்டவர் -தமிழ்நாட்டில் கோவையைச் சேர்ந்த சாமிக்கண்ணு வின்சென்ட் என்பதில் என்னைப் போன்று அந்த மண்ணில் பிறந்தவர்களுக்கு பெருமிதம் உண்டு.

அதேபோல் வெள்ளையர் ஆட்சி காலத்தில் நாடு சுதந்திரமடைவதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்னரே 1941-ல் சொந்தமாக பட்சிராஜா ஸ்டுடியோவை உருவாக்கி -தயாரிப்பாளர் -டைரக்டர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் ஸ்ரீராமுலு நாயுடு அவர்கள்.

‘ஆர்யமாலா’ -பி.யு.சின்னப்பாவை ஹீரோவாக வைத்து அவர் உருவாக்கிய படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின்னாளில் ‘காத்தவராயன்’- என்று பெயரை மாற்றி சிவாஜியை ஹீரோவாக்கி படம் எடுத்தனர்.

அதன் பிறகு 1944-ல் ‘ஜகதலப்ரதாபன்’- என்றபடத்தை உருவாக்கினார் நாயுடு. அந்தக் காலத்திலேயே பி.யு.சின்னப்பாவை ஆறு வேடங்களில் நடிக்க வைத்து புரட்சி செய்தவர்.

21 வருடங்களுக்குப் பிறகே சிவாஜி அப்படி 6 வேடங்களில் திருவிளையாடல் -படத்தில் நடித்தார்.

மலைக்கள்ளன் எம்ஜிஆர்

‘மலைக்கள்ளன்’ -படக்கதை நாமக்கல் கவிஞருடையது. அதை வாங்கி திரைக்கதை வசனம் எழுதி ஃபைலை எடுத்துக் கொண்டு சென்னை போய் சிவாஜியை சந்தித்தார். பராசக்தி- மனோகரா இரண்டிலும் வெற்றிச்சிகரத்தில் சிவாஜி வேகமாக ஏறிக் கொண்டிருந்த காலம்.

ஒரு நாளைக்கு 3 படங்களுக்கு - 3 விதமான ஒப்பனை செய்து 18 மணி நேரம் மூளை சோர்ந்து முழங்கால் வலி எடுக்க - ஓயாது அவர் நடித்துக் கொண்டிருந்த நேரம்.

எவ்வளவோ முயன்றும், கோவையில் படப்பிடிப்பு நடத்தும் ஸ்ரீராமுலு நாயுடுவுக்கு சிவாஜியால் தேதி ஒதுக்க முடியவில்லை.

எம்ஜிஆர் அவர்களும் ஒரு ஹிட் படம் தர காத்துக் கொண்டிருந்தார். மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி- இரண்டும் வெற்றிப்படங்கள் என்ற போதிலும் பெண்களை மையப்படுத்திய கதைகள்.

சிவாஜி-பத்மினி

நம்மைச்சுற்றியே கதை -நம்மை உயர்த்திக் கொள்ள ஹீரோ சப்ஜட் எப்போது வரும் என்று காத்திருந்தவருக்கு -நாயுடு சென்று மலைக்கள்ளன் -கதையைச் சொன்னார். இரட்டை வேடம்- அன்று புகழ்பெற்ற கதாநாயகி பானுமதி ஜோடி. கலைஞர் வசனங்கள் பேசப்பட்ட நாட்கள். கலைஞர் மு.க.தான் வசனம் எழுத வேண்டும் என்று கேட்டார் எம்.ஜி.ஆர். ஸ்ரீராமுலு நாயுடு சம்மதித்தார். படம் சூப்பர்ஹிட் ஆகி ஆறு மொழிகளில் படமாக்கினார்கள்.

மலைக்கள்ளனில் துவங்கி மதுரை வீரன், அலிபாபா, நாடோடி மன்னன் என்று வெற்றிப் படிக்கட்டுகளில் வேகமாக ஏற துணை நின்றது மலைக்கள்ளன். அதன் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு, நல்ல சந்தர்ப்பங்கள் வரும்போது அதை சரியாகப் பயன்படுத்தினால் எதையும் சாதிக்கலாம் என்கிறார் வள்ளுவர்:

‘ஞாலம் கருதினும் கைகூடும் -காலம்

கருதி இடத்தால் செயின்...’

---

குறள் கதை 63: கவரி

கோபிசெட்டிபாளையம் பகுதி. பெரியவர் பத்து ஏக்கர் வயல்காடு வைத்திருந்தார். நெல் அறுவடைக் காலம். காலையில் 9 மணிக்கு வயலுக்கு வந்து குடையைப் பிடித்துக் கொண்டு அறுவடை ஒழுங்காக நடைபெறுகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்.

உச்சிவெயில் மண்டையை பிளக்கிறது. அந்த வெயிலிலும் பெண்கள் குனிந்த தலைநிமிராமல், நெற்றி வேர்வை நிலத்தில் விழ அதைத் துடைக்கக்கூட நேரமில்லாமல் அறுவடையைத் தொடர்ந்தார்கள்.

பெரியவருக்கு மனசு கேட்கவில்லை. ‘போதும்மா! வெயில் கொளுத்துது. எல்லோரும் போய் சாப்பிட்டு, வெய்யத்தாழ வந்து செய்யுங்க!’ என்று அனுப்பி வைத்தார்.

75-ஐ தாண்டிய வயது. நெடிய உருவம். ஒடிசலான உடம்பு. 4 மணி நேரம் நின்றதில் கால்கள் ஓய்ந்து விட்டன. தொண்டை வறண்டு விட்டது. பேச நா எழவில்லை. வீட்டுக்குப் போனார். முதலில் தாகசாந்தி செய்தாக வேண்டும்.

மருமகள் மணிமேகலையை அழைத்தார். ‘‘தாயி! தாளிச்ச மோரு ஒரு டம்ளர் குடும்மா. தொண்டை காஞ்சு போச்சு. சித்தநேரம் கழிச்சு சாப்பிடலாம்!’’ என்றார்.

மாமியார், மருமகள் சண்டை யுகம், யுகமாக நடைபெறுவதுதான். தலைமுறை இடைவெளி. ஒன்றும் செய்ய முடியாது. ‘என் புருஷன் சம்பாதிச்சுப் போடறதைத் தின்னுட்டு கிழவிக்கு லொள்ளு!’ என்று கறுவிக் கொண்டிருப்பாள் மருமகள்.

பெரியவர்

‘‘நான் பையன் பெத்துக்குடுக்காட்டி இவளுக்கு புருஷன் எங்கிருந்து கிடைச்சிருப்பான். வாயைப் பொத்திக்க!’’ என்று மாமியார் பதிலுக்குச் சீறுவாள்.

ஏதோ ஒன்று அன்றைய தினம் அரை மணிநேரம் முன்பே மோதல் -முட்டல் நடந்திருக்கிறது. அந்த சமயம் பார்த்து பெரியவர் வந்து மோர் கேட்கிறார்.

‘‘நாக்கு அப்படியெல்லா ஒணத்தியா (ருசியா) கேக்குதா. மூத்திரத்தை புடிச்சுக் குடியுங்க!’’ -என்றாள் மருமகள்.

அவ்வளவுதான். பெரியவர் சிலையாகி விட்டார். ஈஸிசேரில் சாய்ந்தார். உடம்பெல்லாம் காய்ந்து விட்டது. பையன் வந்தான். ‘‘அப்பா அவ சின்னஞ்சிறிசு கிடக்கறா. வாங்க சாப்பிடலாம்!’’ என்றான். அப்பா பேசவில்லை.

மனைவி வந்தாள். ‘‘பச்சைத் தண்ணி கூட குடிக்காம பிடிவாதம் பிடிக்காதீங்க. எழுந்து வாங்க சாப்பிடலாம்!’’ என்று அழைத்தார். பெரியவர் அசைவில்லை.

உயிர்நீத்தகவரி

இரவு 8 மணி. விபரீதம் நடந்து விடப் போகிறது என்று பயந்த மருமகள் ஓடி வந்து காலைப் பிடித்து, அவசரத்தில் அப்படி பேசிவிட்டேன். மன்னியுங்கள் மாமா- என்று கண்ணீரால் கால்களை நனைத்தாள்.

பெரியவர் அன்னந்தண்ணி எதுவும் எடுக்காமல் 2 நாள் அப்படியே இருந்து கண்ணை மூடி விட்டார்.

சம்பந்தப்பட்டவரின் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியிடுவது நாகரீகமில்லை.

இந்த மனிதரின் உணர்வை வெளிப்படுத்தும் குறள்:

‘‘மயிர்நீப்பின் வாழாக்கவரிமா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின்’’

---

கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x