

‘‘என்ன சத்தம்?’’ என்று கேட்டபடியே விசாரணைக் கூடத்துக்கு வந்தார் மன்னர்.
பிராது கொடுக்கும் இடத்தில் நின்றிருந்தார் ஒரு மந்திரி. ‘‘மன்னா! எனக்கும் மாமனாருக்கும் ஒரு பிரச்சினை. ஆயிரம் வராகனுடன் என்னிடம் வந்தார் மாமனார். உலகமகா பொய்யை சொன்னால் அந்த ஆயிரம் வராகனை தருவதாக அடம் பிடிக்கிறார். நானும் கடந்த நாலைந்து மாதங்களில் விதவிதமாக, புதுசு புதுசாக பொய் சொல்லிப் பார்த்துவிட்டேன். மசியமாட்டேங்குறார். உலகமகா பொய் சொல்லு.. உலகமகா பொய் சொல்லு என்று தினம் தினம் வந்து உசுரை வாங்குறார்’’ என்றார் மந்திரி.
வாதத்தை கேட்ட மன்னர், ‘‘கற்றவர் நிறைந்த சபைக்கு இந்த கொற்றவனின் வணக்கம்!’’ என்று ரைமிங்காக உரையைத் தொடங்கினார். ‘‘பாலாறும் தேனாறும் நம் நாட்டிலே ஓடுகிறது. இங்கு வளம் கொழியோ கொழி என்று கொழிப்பதால் வெளிநாடுகளில் இருந்தெல்லாம் இங்கு வருகிறார்கள். நாடு சுபிட்சமாகவும், அமைதியாகவும் இருக்கிறது. நாம் வாரி வழங்கும் இலவசங்களை வாங்கிக்கொண்டு மக்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
எமது தந்தையார் விட்டுச் சென்ற வழியிலே அரசுப் பணிகளை வெகு சிறப்பாக செய்துவரும் நான், நீதி பரிபாலனத்திலும் இளைத்தவன் இல்லை. இந்த நேரத்திலே வித்தியாசமான வழக்கு வந்திருக்கிறது. உலகமகா பொய் சொல்லுமாறு கூறி மந்திரிக்கும் அவரது மாமனாருக்கும் வழக்கு உருவாகி இருக்கிறது. இந்த நாட்டிலேயே பொய்க்கு இடமில்லை.
இங்கு யாரும் பொய்யர்கள் இல்லை. பொய் என்றால் என்னவென்றே எனக்கும் தெரியாது. அப்படியாப்பட்ட சூழ்நிலையிலே..’’ என்று மன்னர் கூறிக்கொண்டிருக்கும்போதே, பிராது வைத்த மந்திரியின் மாமனார், ‘‘உலகமகா பொய் கிடைத்துவிட்டது’’ என்று கூறிவிட்டு, ஆயிரம் வராகனை மன்னரின் காலடியில் போட்டுவிட்டு தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தார்.