Last Updated : 05 Nov, 2021 10:29 AM

5  

Published : 05 Nov 2021 10:29 AM
Last Updated : 05 Nov 2021 10:29 AM

திருக்குறள் கதைகள் 60 - 61: உத்தரவு

காமராஜர்

குறள் கதை 60 - உத்தரவு

அன்று காலையில் முதலமைச்சர் காமராஜ் கோபமாக இருந்தார்.

‘‘என்னய்யா! கண்டவனெல்லாம் பியூன் வேலைக்கு வந்திடறானுங்க. எதிலும் ஒரு ஒழுங்கு இல்லே. பியூன் வேலை பாக்கறவங்க குறைஞ்சது 8-ம் வகுப்பு படிச்சிருக்கணும்னு உத்தரவு போடுங்க..!’’ என்றார்.

மாலைப் பத்திரிகைகளில் முதலமைச்சரின் அறிவிப்பு கட்டம் கட்டி வெளியிடப்பட்டிருந்தது. பேப்பரைக் கையில் எடுப்பவர்கள் அந்தப் பகுதியைப் படிக்காமல் தவிர்க்க முடியாது. பெரிய எழுத்துகளில் அவை அச்சிடப்பட்டிருந்தன.

எம்.எல்.ஏ., ஹாஸ்டலில் ஒரு பியூன் அந்தச் செய்தியைப் படித்ததும் பதறிவிட்டார். தலையில் இடி விழுந்தது போல் அலறினார்.

எனக்கு 54 வயசு ஆகுது. இன்னமும் 4-5 வருஷம்தான் சர்வீஸ் இருக்கு. இந்த வயசில இனிமே எழுதப்படிக்க கத்துக்கிட்டு 8-வது படிக்க முடியுமா? இதை நம்பிக் கல்யாணம் பண்ணி 2 பொட்டைப் புள்ளைங்களை வேறு பெத்திட்டேன். அதுகளுக்கும் இன்னமும் கல்யாணம் ஆகலே. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தினா ஆத்துல, குளத்தில விழுந்து சாகறதைத் தவிர வேற வழியில்ல!’ என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

அதே எம்.எல்.ஏ., ஹாஸ்டலில் இருந்த மூக்கையா தேவர் -சட்டப்பேரவை உறுப்பினர் -பியூனை வரவழைத்து, ‘எதற்கு இப்படி கூப்பாடு போடறே? காமராஜர் மக்கள் தலைவர் நம்ம குறைகளைச் சொன்னா பொறுமையா கேட்டுக்குவார்!’’ என்றார்.

‘‘முதலமைச்சர்கிட்ட நான் எப்படிங்க போய் இதை நேர்ல போய் சொல்ல முடியும்?’’

‘‘கிறுக்குத்தனமா பேசாதே. அவருக்குப் பி.ஏ., செக்கரட்டரின்னு பல பேர் இருப்பாங்க. நான் நம்பர் தர்றேன். அவங்ககிட்ட பேசி உன் நிலமையைச் சொல்லு!’ என்று ஒரு எண் கொடுத்தார்.

‘தலைக்கு மேல் வெள்ளம் போயிருச்சு. இனி ஜாண் போனா என்ன முழம் போனா என்ன. போன் பண்ணிப் பாத்துக்குவோம்!’ என்று அந்த டெலிபோன் எண்ணுக்கு போன் செய்தான் பியூன்.

மக்கள் குறை கேட்பில் காமராஜர்

‘‘யாருப்பா?’’

‘‘நான் எம்.எல்.ஏ., ஹாஸ்டல் பியூன் பேசறேங்க!’’

‘‘என்ன விஷயம்?’’

‘‘இன்னிக்கு காலையில சிஎம் அய்யா ஒரு செய்தி சொல்லி பேப்பர்ல வந்திருக்குங்க!’’

‘‘என்ன செய்தி?’’

‘‘பியூன் வேலை பாக்கறவங்கல்லாம் 8-ங்கிளாஸ் நிச்சயம் படிச்சிருக்கணும்னு. ஐயா எனக்கு ரிட்டயர்டு ஆகற வயசு நெருங்கிடுச்சு. இந்த கவர்மெண்ட் வேலையை நம்பிக் கல்யாணம் பண்ணி, 2 பொட்டைப் புள்ளைகளையும் பெத்துட்டேன். இன்னும் அதுகளுக்கு கல்யாணம் பண்ணலே!

இந்த வயசில படிப்பு மண்டையில ஏறுங்களா? சி.எம். ஐயா இந்த உத்தரவைப் போட்டார்னா -ஆத்துல குளத்தில விழுந்து சாகறதைத் தவிர எனக்கு வேற வழி தெரியலீங்க!

சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்க. 6-ங்கிளாஸ் படிச்சவரல்லாம் நம்ம நாட்டுக்கு முதலமைச்சரா இருக்கறப்போ- என்னை மட்டும் 8-ங் கிளாஸ் படிக்கச் சொல்றாரே. இது நியாயம்ங்களா?’’

‘‘யாருடா நீ?’’

‘‘அதான் சொன்னங்களே எம்.எல்.ஏ., ஹாஸ்டல் பியூன். நீங்க யாருய்யா பேசறது?’’

‘‘நான்தான்டா காமராஜ் பேசறேன்!’’

‘‘சாமி, சாமி உங்ககிட்டயே இப்படி பேசீட்டனுங்களா?’’

‘‘உடனே புறப்பட்டு வா!’’

‘‘சாமி, சாமி மன்னிச்சுடுங்க சாமி!’’

போன் கட். அரை மணி நேரத்தில் அரசு ஜீப் வந்து அவரை ஏற்றிக் கொண்டு கோட்டைக்குப் போயிற்று.

முதலமைச்சரைப் பார்க்க ஒரு க்யூ நின்றது. கடைசி ஆளாக பியூன் நின்றார். உள்ளே போனார்.

‘‘யாருப்பா?’’

‘‘எம்.எல்.ஏ ஹாஸ்டல் பியூனுங்க!’’

‘‘ஓ... நாமதான் போன்லயே பேசினவரா? உட்காரு!’’ தயங்கினான்.

ஒரு சோபாவைக் காட்டி அதட்டி - உட்கார் அதில... நடுங்கிக் கொண்டே உட்கார்ந்தான் பியூன்.

அவன் பக்கத்தில் உட்கார்ந்து தோள் மீது கைபோட்டு, சாந்தமாகி, ‘‘அவசரப்பட்டு பேசிட்டேன். மன்னிச்சுக்க. இனிமேல் பியூன் வேலைக்கு விண்ணப்பிக்கறவங்க 8-ம் வகுப்பு படிச்சிருக்கணும்ங்கிற உத்தரவை மாத்திப் போடறேன்!’’ என்றார்.

நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் என்றான் கண்ணதாசன்.

இவரைப் போன்ற மகாமனிதர்களுக்கு பொருந்தும் குறள்:

‘பணியுமாம் என்றும் பெருமை -சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து!’

---

குறள் கதை 61 - வாழ்வு

சென்னை தாம்பரம் சானடோரியம் டி.பி நோயாளிகளுக்கு என்று தனியே உள்ள மருத்துவமனை. காசநோயாளிகள் தங்கும் வார்டை சுத்தம் செய்யும் அம்மாவுக்கு 55 வயதிருக்கும். நோயாளிகளுக்கு மருத்துவமனை வழங்கும் ரொட்டி பால் மீந்து போனால் அந்த அம்மா சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டினாள்.

அவருக்கு ஒரு மகன். சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் செக்யூரிட்டி வேலை பார்த்தான்.

காலை 8 மணிக்கு தாம்பரம் டி.பி. சானிடோரியம் சென்றால் வேலை முடிந்து 5 மணி வாக்கில் தன் குடிசைக்குத் திரும்புவாள் அம்மா.

தாம்பரம் காசநோய் ஆஸ்பத்திரி

அன்று இரவு 7 மணி ஆகியும் மகன் வரவில்லையே என்று பஸ் பிடித்து சைதாப்பேட்டை கோர்ட் வளாகம் போனார்.

சாலை விபத்தில் -சைக்கிளில் வந்த மகன் அடிபட்டு பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகச் சொன்னார்கள்.

அங்கிருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் செல்லும் பஸ் பிடித்து, அங்கு போய் எதிரில் உள்ள பொது மருத்துவமனைக்குள் சென்று விசாரித்து தீவிர சிகிச்சை வார்டு சென்றார்.

பையன் பெயரைக் கேட்டுவிட்டு உள்ளே சென்ற நர்ஸ், சோகமாகத் திரும்பி வந்தார்.

துப்புரவுப் பெண்

‘உங்கள் மகன் இங்குதான் இருக்கிறான். சொல்ல ரொம்ப சங்கடமா இருக்கும்மா. உங்க மகனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருக்கு. அதாவது அவன் மூளை செயல் இழந்துவிட்டது. இனி அவன் எழுந்து நடமாடுவது கஷ்டம். கேக்கறேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்க. நீங்க மனசு வச்சா, உங்க மகன் மூலம் 4 பேருக்கு மறுவாழ்வு தர முடியும்!’’ என்று உறுப்பு தானம் செய்வது பற்றிப் பொறுமையாக நர்ஸ் விளக்கினார்.

‘வயசான காலத்தில் கஞ்சி ஊத்த ஒரு மகனாவது இருக்கான்னு நெனைச்சேன். இது கூட கடவுளுக்குப் பொறுக்கலே. இவ்வளவு சீக்கிரமா அவனைக் கூட்டிட்டுப் போயிட்டாரு’’ என்று அழுதவள், மனசு தேறி - ‘என் மகனால 4 பேருக்கு இன்னொரு வாழ்க்கை கிடைக்குதுன்னா உங்க விருப்பப்படியே செய்யுங்க!’ன்னு சொன்னாங்க.

விபத்து

உயிர் வாழத் தகுதியானவனுக்கு உதவுபவனே உயிர் வாழ்பவன் மற்றவரெல்லாம் இறந்தவனாகவே கருதப்படுவான் என்கிறார் வள்ளுவர்:

‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்; மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்’

---

கதைகள் பேசுவோம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x