Last Updated : 21 Mar, 2016 03:45 PM

 

Published : 21 Mar 2016 03:45 PM
Last Updated : 21 Mar 2016 03:45 PM

யூடியூப் பகிர்வு: அசரீரி குறும்படம் - ஐ.டி. கணவனும் நிலைகுலையும் இல்லறமும்

கணவன் - மனைவிக்கிடையே உள்ள ஊடல்கள் தேவையான ஒன்றுதான். ஆனால் புரிதல் சரியில்லையென்றால் அதனால் ஏற்படும் குழப்பங்கள் ஊடலையும் கடந்து எல்லையைக் மீறிவிடும் என்கிறது 'அசரீரி' குறும்படம்.

கணினி தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் கணவன் வீட்டில் எப்படி நடந்துகொள்கிறான். அவனுக்கு இருக்கும் தலையாயப் பிரச்சனைகள், அவையெல்லாம் அவனை எந்த எல்லைக்கு தள்ளிவிடுகின்றன என்பதும் இப்படத்தில் விரிவாக பேசப்பட்டுள்ளது.

வீட்டில் இருக்கும்போதுகூட செல்பேசியில் சதா அலுவலகப் பேச்சுதான் பிரதிக்கிற்கு. அனு தன் பிரச்சனைகளை எடுத்துச்சொல்ல எவ்வளவோ முயன்றும் அதை பிரதிக் காதில் வாங்கிக்கொண்டமாதிரி தெரியவில்லை. பலமுறை அவனிடம் மன்றாடியிருக்கிறாள். ஸ்கேன் டெஸ்ட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஒருமுறை அதுவும் தவறிவிடுகிறது. அந்த அளவுக்கு சார் ரொம்ப பிஸி.

பிரதிக் நேரம்காலம் தெரியாமல் கணினித்துறையில் பணியாற்றியது ஒரு புதிய 'ஆப்'பை (செயலி) கண்டுபிடிக்கத்தானாம். ஒருவரின் மூளையில் உள்ள நினைவுகளை டவுன்லோடு செய்துகொண்டு அவர் இல்லையெனினும், அந்த நினைவுகளைக் கொண்டு குறிப்பிட்ட மூளையின் கேரக்டர் எப்படி யோசிக்கும் எப்படி பதிலளிக்கும் என்றெல்லாம் யோசித்து அதற்கேற்ப இந்த 'ஆப்பைத் தயாரித்திருக்கிறானாம் பிரதிக்.

எதிர்பாராதவிதமாக அப்படிப்பட்ட கணவனை இன்னொருமுறை வாழ்வில் காண முடியாதநிலைக்குத் தள்ளப்படுகிறாள் அனு. அதன்பின் எப்போதும் அவன் நினைவுகளிலேயே கரைந்துவிடுகிறாள். அவனிடம் சண்டை போடும்போதெல்லாம் இவனைவிட்டு பிரிந்துவிடலாம் என நினைத்தது நடந்துவிட்டபோது நிலைகுலைந்துவிடுகிறாள். அவன் இனி வாழ்வில் இல்லாமல் போனதற்கும் தானே காரணம் என நினைத்து அழுகிறாள்.

கோபம், ஆற்றாமை, பரிதவிப்பு, ஏக்கம், மனவலி போன்ற வீட்டுப் பெண்கள் வெளிப்படுத்தும் பல்வேறு உணர்ச்சிகளை அனுவாக வந்த ஜான்சியின் நடிப்பு மிகச் சிறப்பு. 'ராயல் லுக்' பங்களாவும் இக்கால தொழில்நுட்ப ரசனைக்குகந்த வீட்டு உபயோகப் பொருட்களையும் திரையில் பயன்படுத்தியவிதம் நம்மை பிரமிக்க வைக்கின்றன. நவீன தொழில்நுட்பம் சார்ந்த கவனமும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது. இப்படத்தில் நடித்த ஜான்சி உள்ளிட்டோர் வெளிப்படுத்தியுள்ள நடிப்புத்திறமை என்பது இயக்குநர் எண்ணியதைவிட சிறப்பாகவே அமைந்துவிட்டது எனலாம்.

ஆனால் ஒரு சிறிய விமர்சனமும் இப்படத்தின் மீது நாம் வைக்கவேண்டியிருக்கிறது. இன்றைய பெண் சார்ந்த புரிதலும் இல்லாததாக இருக்கிறது இப்படம். உதாரணமாக திரும்பத் திரும்ப வேலைக்குப் போகும் கணவனின் நிலைதான் பெரியது, வீட்டிலிருக்கும் பெண் அதை ஏற்றுக்கொண்டு பொறுத்து வாழ வேண்டும் என்பதாகவும் அவளுக்கு இருக்கும் சின்னச் சின்ன விருப்பங்கள், ஆசைகள், கவலைகள் போனறவற்றிற்கு தீர்வைநோக்கி இக்குறும்படம் நகரவில்லை. மேலும் பிரதிக்கின் துயர முடிவும் முடிவுக்குக் பிறகான திருப்பங்களும் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ராடன் குறும்பட போட்டியில் பங்கேற்ற படங்கள் பலவற்றிலும் சிறந்த பல முயற்சிகளைக் காணமுடிந்தது. முதல் பரிசு பெற்ற இந்தப் படமும் அவ்வகையிலானதுதானா என்ற கேள்வியும் நமக்கு எழாமல் இல்லை.

உணர்ச்சிப் பீறிடல்கள் மிக்க டிவி சீரியல்களுக்கான இயக்குநராக கணேஷ் கார்த்திக் கிடைத்துவிட்டார் என்றுதான் இப்படத்தை பார்த்தவகையில் சொல்ல தோன்றுகிறது. அதேபோல இவர் போன்றவர்கள் படம் செய்வதற்கும் இங்கு வாய்ப்புகள் அதிகம் காத்திருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

அசரீரி குறும்படத்தைப் பார்க்க > >RSFF FINALISTS | TITLE WINNER | GANESH KAARTHICK | ASARIRI

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x