Published : 29 Oct 2021 08:56 AM
Last Updated : 29 Oct 2021 08:56 AM

திருக்குறள் கதைகள் 56 - 57: கடன்

அறிஞர் அண்ணா காஞ்சீபுரத்தில் 1909 -செப்டம்பர் மாதம் -15-ந்தேதி பிறந்தவர். நெசவாளர் குடும்பம் அவர்களுடையது. ஏழ்மையான குடும்பம். பச்சையப்பா கல்லூரியில் படிக்கும்போதே குடும்ப கஷ்டத்தைப் போக்க முனிசிபல் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்தவர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1934-ல் பி.ஏ ஹானர்ஸ் பட்டம் பெற்றார். பின்னர் அதே கல்லூரியில் எம்.ஏ அரசியல், பொருளாதாரம் படித்து பட்டம் வாங்கினார்.

பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக கொஞ்ச நாள் வேலை பார்த்தார். பின்னர் அதை விட்டு, பத்திரிகை துறைக்கு வந்து விட்டார்.

1917-ல் பிராமணர் அல்லாதோர் துவக்கிய, ஜஸ்டிஸ் கட்சியில் அண்ணா 1935-ல் சேர்ந்தார்.

1937-ல் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராக பெரியார் பொறுப்பிலிருந்த சமயம், பெரியாரின் ‘விடுதலை’, ‘குடியரசு’ இதழ்களுக்கு ஆசிரியராக அண்ணா இருந்தார். குடியரசு இதழ் 1960-களில் எனக்கு இலவசமாக அனுப்பி வைத்தார்கள். பின்னர் திராவிடநாடு’- என்று அண்ணா சொந்தமாக காஞ்சியிலிருந்து ஒரு இதழ் கொண்டு வந்தார். பல மாதங்கள் அந்த இதழ்களும் எனக்கு வந்தது நினைவில் உள்ளது.

அண்ணாவுடன் எம்ஜிஆர்

1944-ல் ஜஸ்டிஸ் பார்ட்டிக்கு மாற்றுப் பெயராக திராவிடர் கழகம் என்று பெரியார் பெயர் சூட்டினார். அத்தோடு தேர்தலில் திராவிடர் கழகம் நிற்காது என்றும் தீர்மானமாக அறிவித்தார்.

அண்ணாவும் தம்பிகளும் தேர்தல் அரசியலில் இறங்குவது என்று முடிவெடுத்து விட்டனர். அத்தோடு தன்னை விட 40 வயது குறைந்தவரான மணியம்மையை மணக்க பெரியார் முடிவு செய்ததைக் காரணமாக வைத்து அண்ணா வெளியேறி கலைஞர், சம்பத், நெடுஞ்செழியன் போன்ற தம்பிகளுடன் 1949-ல் திராவிட முன்னேற்றக்கழகம் துவக்கினார்.

தன்னுடைய காந்தக்குரலில் அடுக்கு மொழி பேச்சாற்றலால் லட்சக்கணக்கான தொண்டர்களைக் கட்டிப் போட்ட அண்ணா, திரைப்படங்களுக்கு கதை- வசனமும், நாடகங்களும் எழுதினார்.

அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ -நாடகத்தில், சிவாஜி நடிப்பைப் பார்த்தே -‘சிவாஜி’ கணேசன் என்று பெரியார் பெயர் சூட்டினார்.

நல்லதம்பி, வேலைக்காரி, ஓர் இரவு - போன்ற படங்கள் பெரும் புரட்சி செய்தவை. ஏவிஎம் செட்டியார் ஓர் இரவுக்கு கொடுத்த பணத்தில்தான் சென்னையில் அண்ணா சொந்தமாக வீடு வாங்கினார் என்று சொல்வார்கள்.

நாடகம், சினிமா மூலம் சமூகப் புரட்சி செய்ய முடியும் என்று தமிழகத்தில் நிரூபித்த முதல் தலைவர் அண்ணா.

1967-ல் திராவிட முன்னேற்றக்கழகம் ஏகோபித்த மெஜாரிட்டியில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க அண்ணாவின் எழுத்துக்களும், பேச்சும் முக்கிய காரணம்.

அந்த தேர்தலில் காமராஜர் விருதுநகரில் சீனிவாசன் என்ற சட்டக்கல்லூரி மாணவரால் தோற்கடிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டு, ‘இனி ஆயிரம் ஆண்டுகளுக்கு காமராஜர் போல் ஒரு தலைவன் நமக்கு கிடைக்க மாட்டாரே!’ என்று கண்ணீர் விட்டுக் கலங்கினார்.

பதவி ஏற்றவுடன் சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். பெரியாரின் கனவுகளை நனவாக்க, இடம் ஒதுக்கீடு முறைகளை தீவிரமாக நிறைவேற்ற சட்டங்கள் இயற்றினார்.

முழுக்க முழுக்க கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும், அனைத்து மக்களையும் அரவணைத்து போக, ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்!’ என்ற திருமூலர் வரிகளை ஏற்றுக் கொண்டார். சுயமரியாதைத்

திருமணங்களை சட்டபூர்வமாக்கினார்.

‘நான் விபூதி பூசாத இந்து- சிலுவை அணியாத கிருத்துவன் -தாடியும், தொப்பியும் இல்லாத இஸ்லாமியன்’ என்று சொல்லுவார்.

பிள்ளையாருக்கு நான் தேங்காயும் உடைப்பதில்லை. பிள்ளையாரையும் உடைப்பதில்லை- என்று நகைச்சுவையுடன் சொல்லுவார்.

அண்ணா சாலையில் பாலாஜி பெட்ரோல் பங்கில் ஒரு கார் வந்து நின்று 10 லிட்டர் பெட்ரோல் போடச் சொன்னார்கள். பில் வந்ததும் டிரைவரிடம் 20 ரூபாய் குறைவாக இருந்தது.

அண்ணாவுடன் கலைஞர்

‘எவ்வளவு காசு இருக்குன்னு பாத்து பெட்ரோல் போடலாம்ல?’ என்று பங்க் உரிமையாளர் சத்தம் போட -இது முதலமைச்சர் அண்ணா கார் என்று டிரைவர் சொன்னார். அதிர்ச்சியடைந்த பங்க் உரிமையாளர் மீதி பணத்தையும் திருப்பிக் கொடுத்து, ‘அண்ணா காருக்கு 10 லிட்டர் பெட்ரோல் போட்ட சந்தோஷமே இருக்கட்டும் போய் வா!’ என்றார்.

கடைசி காலத்தில் கடனுடன் இறந்தவர் அண்ணா. இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் மக்கள் நடந்து சென்றது உலக ரெக்கார்டு என்கிறது கின்னஸ்.

இவருக்கு பொருந்தும் வள்ளுவர் குறள்:

‘காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்’

----

குறள் கதை 57 பசி

‘உதவும் கரங்கள்’ -அமைப்பு 1983-ம் ஆண்டு முதல் ஆதரவற்றோர் முதியவர்கள் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் இவர்கள் அனைவருக்கும் வேடந்தாங்கலாக இருந்து வருகிறது.

இதன் நிறுவனர் 2000-க்கும் மேற்பட்ட கைவிடப்பட்டோருக்கு கடவுளாக விளங்குபவர் வித்யாகர் என்ற அற்புத மனிதர்.

1953-ல் மங்களூரில் பிறந்த வித்யாகருக்கு தாய் தந்தையர் இல்லை. ஆனாலும் இத்தனை மக்களுக்கு தாயும், தந்தையுமாக இருந்து வருகிறார்.

மங்களூரில் பிறந்து கர்நாடகா கொள்ளேகால் பகுதியில் வளர்ந்தவர். தனது 13 வயதில், விபத்தில் அடிபட்டு தவித்த ராமகிருஷ்ணன் என்பவரைக் காப்பாற்றினார். இருவரும் தொடர்பில் இருந்தனர். 5 ஆண்டுகள் கழித்து வித்யாகர் சென்னை வந்து அவருடனே தங்கி அவரால் உருவாக்கப்பட்டு சமூக சேவை பயிற்சி எடுத்தார்.

உதவும் கரங்கள் வித்யாகருடன் நான்

மனோதத்துவத்தில் பயிற்சி எடுத்தார். உடல் ரீதியான பிரச்சனைகளுக்கும் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க்ஸ் அமைப்பில் ஆலோசனை வழங்கினார். 30 வயதாகும் முன் என்.எஸ்.கே நகரில் தன்னார்வ ஆலோசனைக்கூட்டம் துவங்கினார்.

1980-களில் என்.எஸ்கே. நகர் என்ற ஏழை மக்கள் வாழும் பகுதி சென்று அவர்களுடனே தங்கி அவர்களின் குறைகளைக் களைய ஆரம்பித்து அவர்களின் இதயத்தில் இடம் பிடித்தார்.

1983-ல் சினிமா தியேட்டரில் இரண்டாம் காட்சி முடிந்த போது ஒரு குழந்தை குறுகி, சுருண்டு போன உடம்பில் நீர்ச்சத்து இல்லாத நிலையில் அழுது கொண்டிருந்த ஆண் குழந்தை ஒன்றை ரிக்சாக்காரன் பார்த்து எடுத்து வந்து இவரிடம் கொடுத்தான்.

யாருமே அந்த குழந்தையை கேட்டு வரவில்லை. அதை தானே வளர்ப்பது என்று முடிவெடுத்து ஒரு வீடு பிடித்து குழந்தைகளைக் காக்க ஒரு காப்பகமாக பதிவு செய்து கொண்டார். அதுதான் உதவும் கரங்கள் அமைப்பு. பின்னர்

அதை விரிவுபடுத்த நிறையபேர் உதவிக்கரம் நீட்டினார்கள்.

1990-ல் திருவேற்காடு பகுதியில் புது இடம் கட்டப்பட்டு 1997 முதல் இலவசக்கல்வி தரும் பள்ளியாக அது செயல்படுகிறது.

தற்போது கோவையில் இதன் கிளை துவக்கப்பட்டு செயல்படுகிறது. 2000 பேருக்கு மேல் புனர் வாழ்வு மாணவர்கள் கல்வி, பெரியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு தனியே குடியிருப்புகள் உள்ளன. சுனாமி காலகட்டத்தில் வித்யாகரின் மனிதாபிமானச் செயலுக்கு உலக அளவில் விருதுகள் குவிந்தன.

வித்யாகருடன் சூர்யா

சூர்யா, கார்த்தி, பிருந்தா பிறந்தநாளை அவர்கள் சிறுவயதிலிருந்த போது உதவும் கரங்களில்தான் கொண்டாடினோம். அத்தனை பேருக்கும் பகல் விருந்து கொடுக்க ஆகும் செலவை 2 நாள் முன்னதாகவே அனுப்பி விடுவோம். 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கு பகல் 12 மணி அளவில் சென்று சூர்யா, கார்த்தி, பிருந்தா உணவு பரிமாறுவார்கள்.

யாருமற்ற குழந்தைகள் வித்யாகரை ‘பப்பா’ (PAPPA) என்று அழைக்கும்போது நம் கண்களில் நீர் சுரந்து விடும். இந்த தாயுமானவருக்கு வள்ளுவர் எழுதிய குறள்:

‘அற்றார் அழிபசி தீர்த்தல்- அஃது ஒருவன்

பெற்றான் பொருள் வைப்பு உழி’

---

கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x