

பாராட்டுகளும், விருதுகளும் எல்லாக் கலைஞர்களுக்கும், அறிஞர்களுக்கும் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே கிடைத்துவிடுவதில்லை. தங்களின் தன்னிகரற்ற செயல்களால் கருத்துகளால் தாங்கள் வாழும் காலத்தில் கொண்டாடப்படாவிட்டாலும், தங்களின் மறைவுக்குப் பின்னால் நாடே கொண்டாடும் நிலைக்கு உயர்கிறார்கள்.
அண்மையில் கிருஷ்ண கான சபாவில் நடந்த முப்பெரும் விழாவில், ‘ரசிகாஸ் கலை மற்றும் பண்பாட்டு அமைப்பு’ பாரதி நினைவு நூற்றாண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93ஆவது பிறந்த நாள், திரைப்பட உலகில் பின்னணிப் பாடகியாக வாணி ஜெயராமின் 50 ஆண்டு நிறைவு ஆகிய மூன்று முக்கியமான தருணங்களையும் நினைவுகூரும் வகையில் நடத்தியது.
விழாவில் மகாகவி பாரதியாரின் வாரிசு டாக்டர் ராஜ்குமார் பாரதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், வாணி ஜெயராம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
மூன்று துறை சார்ந்த ஆளுமைகளையும் பெருமைப்படுத்தும் விழாவை நடத்த வேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்தது என்று ‘ரசிகாஸ் கலை மற்றும் பண்பாட்டு அமைப்பி’ன் நிறுவனர் தென்காசி கணேசனிடம் கேட்டோம்.
“கலைஞர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். அதைச் செயல்படுத்துவதுதான் எங்களின் முக்கிய நோக்கம். ரசிகாஸ் அமைப்பு 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கிய வருடத்தில் ‘மெல்லிசை மன்னர்’ ராமமூர்த்திக்கு ‘மெல்லிசை மன்னர்’ விஸ்வநாதன் தலைமையில் மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்தினோம்.
தொடர்ந்துவந்த வருடங்களில், இயக்குநர் ஸ்ரீதர், பின்னணிப் பாடகர்கள் டி.எம்.எஸ்., பி.பி. ஸ்ரீனிவாஸ், இயக்குநர்கள் முக்தா சீனிவாசன், சி.வி. ராஜேந்திரன், சித்ராலயா கோபு, எழுத்தாளர் ஜெயகாந்தன் உள்ளிட்ட மாபெரும் கலைஞர்களுக்குப் பாராட்டு விழாக்கள் நடத்தியிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த விழாவைப் பார்க்கிறோம்” என்றார்.
பாரதிய வித்யா பவன் நிர்வாக இயக்குநர் கே.என்.ராமஸ்வாமி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இசைக்கவி ரமணன், அண்ணாதுரை கண்ணதாசன், குமாரி சச்சு, கிருஷ்ண கான சபா செயலர் பிரபு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சிவாஜி கணேசன் நடித்த படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் பாடல்கள், திரைப்படங்களில் வாணி ஜெயராம் பாடிய பாடல்களை யு.கே.முரளியின் உதயராகம் இசைக் குழுவினர் பாடி ரசிகர்களை அந்தக் கால நினைவுகளில் மூழ்க வைத்தனர். குறிப்பாக வாணி ஜெயராம் பாடிய முத்தான பாடல்கள் பலவற்றைக் குழுவின் பாடகி குமாரி அல்கா சுரேஷ் பாடிய விதமும், அவரின் குரல் வளமும் பலரின் கவனத்தை ஈர்த்தது.