Published : 22 Oct 2021 09:21 AM
Last Updated : 22 Oct 2021 09:21 AM

திருக்குறள் கதைகள் 52 - 53: குறைபாடு

கோவை ஞானி மார்க்சிஸ்ட் சிந்தனையாளர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல் பட்டம் பெற்றவர். கோவை பொள்ளாச்சி சாலையில் இருக்கும் குறிச்சியில் செங்கோட்டையா உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியைத் தொடங்கினார்.

அதே பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாகப் பணியாற்றிய இந்திராணி அம்மையாரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். பாரிவள்ளல் மூத்தவர். மாதவன் இளையவர். புகைப்படக் கலையில் இருவருமே மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள். மாதவன் சென்னையில் விளம்பரப் படங்கள், ஆவணப்படங்கள் உருவாக்குபவர்.

திருமணமானபின், குறிச்சி பள்ளியிலிருந்து மாற்றலாகி கோவை சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்து பணி ஓய்வு வரை அங்கேயே ஆசிரியராக இருந்தார்.

ஞானி

வாசிப்பின் மீது பேரார்வம் கொண்டவர். இரவு பகல் எந்நேரமும் ஓய்வின்றி வாசித்துக் கொண்டே இருப்பார். பிறவியிலேயே இவருக்கு ஒரு கண் பார்வைக் குறைவு உண்டு. அதோடு அதிகமாக கண்களுக்கு வேலை கொடுத்ததில் ஒரு கட்டத்தில் அவருக்கு நிரந்தரமாகப் பார்வையை இழக்கும் நிலை வந்துவிட்டது.

தனக்கு ஏற்பட்ட சோதனையை நினைத்து வருத்தப்படாமல் எம்.ஏ., பி.ஏ, படித்த மாணவர், மாணவிகளை உதவிக்கு வைத்துக்கொண்டு சீன மார்க்ஸியம், ஐரோப்பிய மார்க்ஸியம், சங்கத் தமிழ் வரலாறு, ஆயிரம் ஆண்டு முன் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை என்று தீவிரமாக ஆய்வுகள் மேற்கொண்டு 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். கொச்சி, சென்னை, கோவையில் மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இவ்வளவுக்கும், பார்வை இழந்த மனிதருக்கு காலைக் கடனை முடிக்க, குளியல் முடிக்க, உணவு உட்கொள்ள என்று நிழல் போல் இருந்தது வணக்கத்திற்குரிய இந்திராணி அம்மையார்.

2010-ல் ஞானி, இந்திராணி தம்பதியை முதன்முதல் சந்தித்தேன்.

‘தம்பி! பொதுவா பெண்கள் பூவோட, பொட்டோட போகணும்னு ஆசைப்படுவாங்க. அப்படியெல்லாம் நான் நினைக்கலே. அய்யாவை கடைசி வரைக்கும் நான் கூட இருந்து கவனிச்சுக்கணும். அதுவரைக்கும் நான் சாகமாட்டேன்!’ என்று சொன்னார் இந்திராணி அம்மையார்.

சபதம் செய்தால்தான் சோதனை வருமே. அடுத்த சில மாதங்களில், முழுமையாக சாதத்தை விழுங்க முடியாமல் அடைப்பு ஏற்பட்டது. தண்ணீர், மோர் போன்ற திரவ பதார்த்தம் உள்ளே போயிற்று. சாதம் உருண்டையாகப் போட்டால் விக்கிக் கொண்டது.

மாதவன் சென்னைக்கு அழைத்துப் போய் பரிசோதனை செய்தார். உணவுக்குழலில் ‘கேன்சர்’ என்று தெரிவித்தனர். முதல்கட்ட சிகிச்சை முடிந்து ஊருக்குப் போனார். அடுத்த 3 மாதத்தில் அதே நிலை.

கார்த்தி திருமண வரவேற்பில் ஞானி-இந்திராணி அம்மையார்

2011-ஜூலை 3-ல் என் மகன் கார்த்திக்கு கோவையில் திருமணம் நடக்கவிருந்த செய்தி அறிந்து கார்த்தி திருமணம் பார்த்துவிட்டு வருகிறேன் என்றார். அவ்வளவு நாள் தாங்காது என்று வற்புறுத்தி சென்னைக்கு அழைத்துப் போய் சிகிச்சை செய்தனர். ஞானியின் நண்பர் ஆசிரியர் மனோகர் சென்னையில் கார்த்தி திருமண வரவேற்பு உள்ளதைத் தெரிவித்தார். மூக்கில், கைகளில் மாட்டியிருந்த ட்யூப்களை கழட்டச் சொல்லி வற்புறுத்தி இந்திராணி அம்மையார் ஞானியுடன், வரவேற்புக்கு வந்தார்.

‘இதென்ன சிக்கன் பிரியாணி. இதென்ன எறா வறுவல். அது ஃப்ரூட் சாலட். கடைசியில் ஐஸ்கிரீம்- எல்லாம் தேடித்தேடி ரசித்து சாப்பிட்டு விட்டு மேடை ஏறி இருவரும் நெஞ்சார புதுமணத் தம்பதியை வாழ்த்திவிட்டு கோவை சென்றனர். அடுத்த 3 மாதங்களி்ல இந்திராணி அம்மையார் ஞானியை விட்டுப் போய்விட்டார்.

காலையில் கண் விழித்ததிலிருந்து, இரவு படுக்கப் போகும் வரை அம்மையார் உதவியுடன் செயல்பட்ட ஞானி திக்குமுக்காடிப் போய் விட்டார். அதற்குப் பிறகும் 9 ஆண்டுகள் உதவியாளரை வைத்து நூல்களைப் படிக்கச் சொல்லி ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர் 2020-ஜூலை 22 அன்று அவரும் விடைபெற்றுக் கொண்டார்.

புலன்குறைபாடு ஒன்றும் பெரிய விஷயமில்லை. மூளை இருந்தும் அதனைப் பயன்படுத்தாமல் முட்டாள்களாகவே வாழ்கிறோமே அதுதான் கொடுமை என்கிறார் வள்ளுவர்:

பொறியின்மை யார்க்கும் பழியன்று- அறிவறிந்து

ஆள்வினை இன்மை பழி.

------

குறள் கதை 53: உதவி

பொள்ளாச்சி பகுதியில் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையக்குளம், ஊத்துக்குளி என்று ஜமீன்தார்கள் அந்தக் காலத்தில் கொடிகட்டிப் பறந்தனர்.

ஒரு ஜமீன்தார் அவருடைய செல்ல மகள் அபர்ணா அமெரிக்காவில் பி.ஆர்க் -கட்டிடக் கலையின் மேற்படிப்பு படித்துவிட்டு இந்தியா திரும்பினார். சரியான கார் பைத்தியம். கார் ரேஸ்களில் கலந்துகொண்டு ‘கப், மெடல் எல்லாம் வாங்கியவர்.

ஒரே மகள் என்பதால் அவள் பாதுகாப்பு கருதி, ஒரு டிரைவர் ஏற்பாடு செய்தார் அப்பா. செல்ஃப் டிரைவ் செய்து பழகிவிட்டவர்களுக்கு 80 வயதானாலும் தானே கார் ஓட்ட வேண்டும் என்ற விருப்பமும் பிடிவாதமும் இருக்கும். அதேபோல டிரைவிங் தெரிந்த முதலாளி பக்கத்தில் உட்கார்ந்திருந்தால் டிரைவர் நடுங்கிப் போய் விடுவான். காரணம் -‘மெதுவா போ -ஏன் பறக்கறே?’ என்று சொல்வார்கள். மெதுவாக ஓட்டினால், ‘என்னது மாப்பிள்ளை ஊர்வலமா போறே- வேகமா போய்யா!’ என்பார்கள். ஓவர் டேக் பண்ண யோசித்தால் ஏன் பயப்படறே; ஓவர் டேக் பண்ணு!’ என்று எதிரில் வரும் வண்டி பற்றிக் கவலைப்படாமல் சொல்வார்கள். டிரைவர் சுயமாக முடிவெடுத்து, நிம்மதியாக கார் ஓட்ட முடியாது.

விபத்து

இதே மனோபாவம் உள்ள பெண். ஜமீன்தாரின் மகள். ‘‘அப்பா 3 வருஷம் அமெரிக்காவில் நானேதானே ஓட்டினேன். டிரைவர் எதுக்குப்பா?’’ என்றாள்.

‘‘அமெரிக்கா வேறு. நம் ஊர் வேறு. இங்கு டிராஃபிக் ரூல்ஸ் எவனும் மதிக்க மாட்டான். ஆடு எப்போ வரும்; மாடு எப்போ குறுக்கே வரும் எதுவும் தெரியாது. பேசாமல் டிரைவர் வச்சுக்கோம்மா!’’ என்று கெஞ்சினார்.

‘‘பிராமிஸா வேகமா இந்த ஊர்ல ஓட்ட மாட்டேன். ப்ளீஸ் டிரைவர் வேண்டாம்பா!’’ என்று கெஞ்சினாள்.

கோவையிலிருந்து ஒரு மாலை நேரம். பொள்ளாச்சிக்கு காரில் போய்க் கொண்டிருந்தாள் அபர்ணா.

கிணத்துக்கடவு ரயில்வே கேட்டைத் தாண்டி வலது பக்கம் திரும்பும்போது குடிகாரன் ஒருவன் ஓட்டி வந்த லாரி, காரைத் தட்டிவிட்டது. கண் இமைக்கும் நேரத்தில் அபர்ணா முன்கதவு வழியே வெளியே தூக்கி எறியப்பட்டாள்.

எதிரில் வந்த கார்க்காரர்கள் -பெண்ணைத் தூக்கி தங்கள் காரில் போட்டுக்கொண்டு போய் கோவை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

கோவை மெடிக்கல் ஆஸ்பத்திரி

உடலின் மேல்பக்கம் ஏற்பட்ட காயங்கள் அதிகமில்லை. ஆனால், கிட்னி பகுதி அடிபட்டு பிரச்சினை ஏற்படுத்தியது. கிட்னி டோனர் கிடைத்தால் மகளைக் காப்பாற்றி விடலாம் என்றனர் டாக்டர்கள்.

சொந்தக்காரர், நண்பர்கள் குடும்பத்தில் பலரைப் பரிசோதித்தனர். அபர்ணா கிட்னிக்கு மேட்ச் ஆக எதுவும் இல்லை.

பல இடங்களில் தேடி தன்னுடைய பண்ணையில் வேலை பார்த்த சுப்பன் மகள் 10-ம் வகுப்பு படிக்கும் பெண் சிறுநீரகம் பொருந்தும் என்று ரத்தப் பரிசோதனையில் தெரிந்தது.

சுப்பன் குடிசைக்குப் போய் அவர் மகளை தனியே சந்தித்து அம்மா இது உன் கை இல்லை. கால் என்று நினைத்துக் கொள். என் மகளுக்கு உயிர்ப் பிச்சை கொடு என்று கதறினார்.

தெய்வமே

ஒரு மனிதர் சராசரியாக 80 ஆண்டு வாழக்கூட ஒரு சிறுநீரகம் ஆரோக்கியமான சிறுநீரகம் போதும் -ஒன்று பாதுகாப்புக்காக ‘எக்ஸ்ட்ரா’வாக கடவுள் படைத்துள்ளார் என்று மருத்துவமனையில் தகப்பனுக்கும், மகளுக்கும் டாக்டர்கள் விளக்கிச் சொல்ல அபர்ணா மாற்றுச் சிறுநீரகம் பெற்று மறுபிறவி எடுத்தாள்.

நாம் எந்த உதவியும் செய்யாத போதும் நமக்கு ஒரு மனிதன் செய்யும் உதவிக்கு இந்த மண்ணும், விண்ணும் ஈடாகாது என்கிறார் வள்ளுவர்:

‘செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.

--

கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x