Last Updated : 10 Mar, 2016 11:45 AM

 

Published : 10 Mar 2016 11:45 AM
Last Updated : 10 Mar 2016 11:45 AM

இதுதான் நான் 16: மனசாட்சிக்கு கனெக்ஷன் கொடுப்பவர்!

கஷ்டமான சூழ்நிலையைவிட லைஃப்ல நல்லது நடக்கும்போது தான் நான் அதிகமா சாமியை நினைச்சிப்பேன். அதுவும் நல்ல விஷயங்களோட பலனா கிடைக்கிற வெற்றியை எப்போதுமே மூளைக்கு ஏத்திக்கக் கூடாதுன்னு சாமிகிட்ட வேண்டிப்பேன். ஒரு விஷயம் நல்லா பண்ணிட்டா வெளியில பாராட்டுவாங்க. நாளைக்கு அதே மாதிரி இன்னொரு விஷயத்தைத் தொடும்போது சொதப் பிட்டா, அவங்களே திட்டவும் செய் வாங்க. எப்படி பாராட்டுறப்போ ஹேப்பியா எடுத்துக்குறோமோ, அப் படித்தான் திட்டும்போதும் அதை கூலா ஏத்துக்குற மனநிலை வரணும்னு கடவுள்கிட்ட போய் நின்னிருக்கேன்.

நல்லது எல்லாமே அம்மா, அப்பா கிட்ட இருந்துதான் கத்துக்கிறோம். நான் சாமி கும்பிட ஆரம்பிச்சதும் என்னோட அம்மாவைப் பார்த்துதான். எனக்குத் தெரிஞ்சு வாழ்க்கையில ஒருநாள்கூட சாமி கும்பிடாம எந்த வேலையையும் அம்மா தொட்டதே இல்லை. நானும் இதுவரைக்கும் பார்த்ததும் இல்லை. என் அம்மாவுக்கு சாமிதான் முதல்ல. அப்புறம்தான் மத்ததெல்லாம்.

‘‘நீங்க நல்லா டான்ஸ் ஆடுறீங்க’’ன்னு பலரும் சொல்றாங்க. நான் நல்லா டான்ஸ் ஆட முடியுமான்னு பலமுறை நானே நினைச்சிருக்கேன். இப்பவும் ஆடி முடிச்சதும் கடவுள்தான் நம்மை ஆட வெச்சிருக்காருன்னு நினைச்சிப்பேன். கடவுள் தந்த கிஃப்ட்தான் என்னோட டான்ஸ்!

பள்ளிக்கூட நாட்கள்ல சாமிகிட்ட சாக்லேட் வேணும், ஐஸ்கிரீம் வேணும், இன்னைக்கு மழை வரணும், அப்போதான் ஸ்கூல் லீவு விடுவாங்க, எக்ஸாம் இருக்கக் கூடாது இப்படியெல் லாம் வேண்டிப்பேன். ஆனா, இப்போ அப்படியே மாறி புகழ் வேணும், பணம் வேணும், பேர் வேணும்னு வேண்டிக் கிறேன். வயசுக்கு தகுந்த மாதிரி மனசும் மாறுது. எப்பவுமே ஒரே மாதிரி வேண்டிக்கிறதுபோல மனசு இருந்துட்டா நல்லா இருக்கும்!

சின்ன வயசுல அம்மா நிறைய ஸ்வீட்ஸ் வெச்சி சாமி கும்பிடுவாங்க. எப்படா இந்த சாமியை கும்பிட்டு முடிப்பாங்க. அப்போதான் நமக்கு சீக்கிரம் ஸ்வீட்ஸ் கிடைக்கும்னு அப்படியே நிப்பேன். இப்போ வளர்ந்து பெருசா ஆயிட்டேன். இன்னைக்கும் அப்படித்தான். ஸ்வீட்ஸ் எல்லாம் சாப்பிட்டுட்டு சாமி கும்பிடலாமேன்னு தோணுது. இதுக்கெல்லாம் சாமிகிட்ட ஸாரி கேட்டுப்பேன்.

கடவுள் எப்பவுமே மன்னிக்கக் கூடியவர். எல்லா விஷயத்துலயுமே அவர்கிட்ட சரண்டர் ஆயிட்டா பெட்டர். இன்னைக்கு நாம சாமி கும்பிடலை யேன்னு நினைப்பு வர்ற அன்னைக்குத் தான் ‘சாமி கும்பிடணும்... சாமி கும்பிடணும்…’ன்னு அதிகமா சாமியை நினைச்சுக்கிட்டே இருப்பேன். எனக்கு சாமி அவ்வளவு முக்கியம். இங்கே சிலர் சாமி இல்லைன்னு சொல்வாங்க. ஆனா, அவங்க அன்பை கொடுப்பதிலும், பெறுவதிலும் மகிழ்ச்சி அடைஞ்சிடுறாங்க. சிலர் அப்பா, அம்மாவை சாமியா நினைப்பாங்க. சிலர் செய்ற வேலையைத் தெய்வமா நினைப்பாங்க. மொத்தத்துல நாம ஏதோ ஒண்ணுக்குக் கட்டுப்பட்டு பயபக்தியோட இருக்கணும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்துல பவர் இருக்கும். எனக்கு அது சாமி கும்பிடும்போது கிடைக்குது. ஒரு நாள்ல அரை மணி நேரம் சாமியை நினைக்கும்போதோ, சாமிக்கிட்ட இருக்கும்போதே இந்த உலகத்துல இருக்குற யாருக்கும் தொல்லை கொடுக்காம இருக்கிறோம். அந்த நேரத்துல சந்தோஷம், நல்லதை மட்டுமே நினைப்போம். அதேபோல நம்மோட தோல்வி, கஷ்டம், தப்பு இது எல்லாத்தையும் சாமிகிட்டத்தான் ஒத்துப்போம். அதுவே நம்மை சுத்தி இருக்குற மத்தவங்ககிட்ட நம்மோட கஷ்டத்தை, தப்பை அவ்வளவு ஈஸியா சொல்லத் தோணுறதில்லை. கடவுள் மட்டும்தான் எப்பவுமே மனசாட்சிக்கு கனெக்‌ஷன் கொடுப்பவர்.

இப்போ ஒரு வாரத்துக்கு முன் அப்பா, அம்மாவோடு இருக்கிறதுக்காக மைசூர் போயிருந்தேன். பெங்களூருல இருந்து கார்ல புறப்பட்டேன். மதிய நேரம். எப்பவுமே போகிற வழியில சாலையோரக் கடைகள்ல இளநீர், ஆரஞ்சு ஜூஸ், கரும்பு ஜூஸ் இப்படி ஏதாவது ஒண்ணு வாங்கி குடிச்சுக்கிட்டே போவது வழக்கம். இந்தமுறையும் அப்படித்தான். போகிற வழியில இருந்த கரும்பு ஜூஸ் கடைக்கு கொஞ்சம் முன்னாடி நிறுத்தி டிரைவரைப் போய் ஜூஸ் வாங்கி வரச் சொன்னேன். கார்ல அமர்ந்து தென்கச்சி சுவாமிநாதனோட ‘இன்று ஒரு தகவல்’ தொகுப்பை கேட்டுட்டிருந்தேன். அப்போ திடீர்னு ஒரு பெரியவர் கார் பக்கம் வந்தார். 75 வயசு இருக்கலாம். ஏதோ என்னிடம் கொடுத்த வெச்ச மாதிரி சிரிச்சுக்கிட்டே உரிமையோட காசு கேட்டார். அந்த தொணியே வித்தியாசமா இருந்தது. நானும் பணம் கொடுத்தேன். அது ஹைவே சாலை. பணத்தை வாங்கிய அவர் காரை கடந்த 30-வது செகண்ட்ல ஆளையே காணோம். அவ்வளவு சீக்கிரம் மறைகிற மாதிரி வழிகள் இல்லாத ஹை வே சாலை அது. ஏன்னே தெரியலை. அவர் என் கண்கள்ல இருந்து மறைந்தார். இதுவும் ஒரு எக்ஸ்பீரியன்ஸுன்னு காரை எடுத்துக் கிட்டு கிளம்பினோம்.

சாமியை நினைத்து கும்பிடும்போது இன்னைக்கு சாமிகிட்ட எதுவும் கேட்கக் கூடாதுன்னு நினைச்சுப்பேன். ஆனா, இருக்குற எல்லாத்தையும் ஒண்ணுவிடாம கேட்பேன். நானும் சராசரி மனுஷன்தானே. ஆனா, சாமிக் குத் தெரியும். நமக்கு என்ன கொடுக் கணுங்கிறது. அதனாலதான் கேட்குறதுல என்ன தப்புன்னு கேட்டுக்கிட்டே இருப் பேன். கோயிலுக்குப் போறப்ப அங்கே இருக்கிற கடவுளைக் கும்பிடுவேன். சர்ச் மேலயும் நம்பிக்கை இருக்கு. நான் படிச்சது கிறிஸ்டியன் ஸ்கூலு. தர்ஹா மேலயும் நம்பிக்கை இருக்கு. ‘நினைச்சது நடக்கும்’னு சமீபத்துல என்னை புனே பக்கத்தில் இருக்குற ஒரு தர்ஹாவுக்குப் போய் வேண்டிக்க சொன்னங்க. நானும் வேண்டிக்கிட்டேன். நினைச்சது நடந்தது. அதேபோல, குருத்வாராவுலயும் நம்பிக்கை இருக்கு.

சாமி எனக்கு நிறைய புகழும் கொடுத்திருக்கார். அதுக்கு தகுந்த மாதிரி கஷ்டத்தையும் கொடுத்திருக் காரு. கஷ்டம் வரும்போதும் சாமியை வேண்டிப்பேன். எப்படின்னா, ‘உன் னோட இஷ்டம். ஏதோ பண்ற நீ, பார்த்துக்கோம்மா?’ன்னு வேண்டிப் பேன். அதுவும் ‘திருவிளையாடல்’ படத்துல தருமி கதாபாத்திரத்தில் நாகேஷ் சார், ‘எவ்வளவு பிழை இருக் கிறதோ, அதுக்கு தகுந்த மாதிரி குறைத்து பரிசுப் பொருளைக் கொடுங்கள்’ என்பாரே. அதேபோல, சாமிகிட்ட கேட்குறப்ப, ‘‘கஷ்டம் கொடு. அதை தாங்கிக்கிற அளவுக்கு சக்தியையும் கொடு’’ன்னு வேண்டிப்பேன். எனக்கு டான்ஸ், அம்மா, அப்பா எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சாமியும்.

இப்போ வரைக்கும் சாமி கும்பிடுறதை என்னோட வாழ்க்கையில ஒரு அங்கமாவே வெச்சிருக்கேன். அதே போல என்னோட வாழ்க்கையில நாலு ஃபிரண்ட்ஸுங்க ரொம்ப முக்கியமானவங்களா இருக்காங்க. அவங்க யாரு? அப்படி என்ன அவங்க முக்கியமானவங்க?

- இன்னும் சொல்வேன்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x