

மந்திரிகள்,
தளபதிகள், மக்கள் என ஹவுஸ்ஃபுல்லாக இருக்கிறது அரசவை.
மகாமந்திரி பேசத் தொடங்கும் நேரத்தில், ஒருவன் ஓலை எடுத்து வந்து படிக்க ஆரம்பிக்கிறான், ‘‘மன்னர் சமூகத்துக்கு வணக்கங்கள்!’’
டென்சனாகும் மகாமந்திரி வெடுக்கென்று அவனிடம் இருந்து ஓலையைப் பிடுங்குகிறார். ‘‘அய்ய.. காலங்கார்த்தால மன்னர் மூட அப்செட் பண்ணிடுவ போலருக்கே. ஓல கீலயெல்லாம் அப்புறம் படிக்கலாம். முக்கியமான மேட்டருக்கு வருவோம். இப்போது மாமன்றத்திலே மன்னர்வாள் உரையாற்றுவார்.’’
இனி மன்னரின் உரை..
‘‘ஒரு தந்தை. அவருக்கு 3 மகன்கள். ஒருநாள் மூவரையும் அழைத்து ஆளுக்கு 100 வராகன் கொடுத்தார் தந்தை. இந்த 100 வராகனைக் கொண்டு உங்கள் இஷ்டத்துக்கு எது வேண்டுமானாலும் வாங்கலாம். ஒரு அறை முழுவதும் நிறைக்க வேண்டும் என்றார். முதல் மகன் 100 வராகனுக்கும் வைக்கோல்களை வாங்கிவந்து அறை முழுவதும் அடுக்கினான். 2-வது மகன் 100 வராகனுக்கும் விறகுக்கட்டைகளை வாங்கிவந்து அடுக்கினான். 3-வது மகன் ஒரே ஒரு வராகன் கொடுத்து ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் வாங்கி வந்தான். அதை கூடத்தின் நடுவே கொளுத்தி வைத்து, அந்த அறை முழுவதும் ஒளியால் நிரம்பச் செய்தான். மனம் மகிழ்ந்த தந்தை தனது வாரிசாக 3-வது மகனை நியமித்தார். அந்த 3-வது மகன் யார் தெரியுமா? உங்கள் மன்னராகிய நான்தான்!’’ என்று கூறிவிட்டு கம்பீரமாக மக்களைப் பார்த்தார்.
கரகோஷம் விண்ணைப் பிளந்து ஓய்ந்தது.
அடுத்ததாக, ஓலை கொண்டுவந்த ஆளைக் கூப்பிட்டார் மகாமந்திரி. ‘‘உன் ஓலய இப்போ படி!’’ என்றார்.
‘‘மன்னர் சமூகத்துக்கு வணக்கங்கள்! 100 வராகனில் மெழுகுவர்த்திக்கான ஒரு வராகன் தவிர, மீதி 99 வராகனை ஆட்டயப் போட்டதுக்காக மன்னர் விசாரணை கமிஷனில் ஆஜராக உத்தரவிடப்படுகிறது......’’