Last Updated : 11 Oct, 2021 10:28 AM

 

Published : 11 Oct 2021 10:28 AM
Last Updated : 11 Oct 2021 10:28 AM

திருக்குறள் கதைகள் 46 - 47: சினம்

1968 -நவம்பர் 3-ம் தேதி சிவாஜி மகள் சாந்தி திருமணம். திருமால் பெருமை, கலாட்டா கல்யாணம், தில்லானா மோகனாம்பாள், உயர்ந்த மனிதன் படங்கள் வழியாக புகழின் உச்சத்தில் சிவாஜி இருந்த சமயம்.

ஆபட்ஸ்பரியில் (இப்போது HAYATT HOTEL) பிரம்மாண்டமாக நடைபெற்றது. பெரும் பெரும் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைப்படக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் என்று பெருந்தலைகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

நான் அப்போது ரூ.7 ஆயிரம் சம்பளம் வாங்கும் நடிகன். ஆகவே வாடகை வீடு, வாடகைக்கார் என்று வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்த நேரம். தேனாம்பேட்டையிலிருந்து ஆபட்ஸ்பரி தாண்டி அப்போதைய ஜெமினி ரவுண்டானா வரை தமிழகமெங்கும் இருந்து ரசிகர்கள் படை படையாக வந்து குவிந்திருந்தனர்.

ஒரு ஓட்டை டாக்ஸி பிடித்து திருமண மண்டபத்துக்குள் இந்த பெருங்கூட்டத்தைத் தாண்டிப் போகவே சிரமப்பட்டேன்.

திருமணம் முடிந்த பிறகும் வெளியில் உள்ள கூட்டம் நட்சத்திரங்களை வேடிக்கை பார்க்க ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்தது.

டாக்ஸியை அப்போதே அனுப்பியாகி விட்டது. பெரிய ஆட்கள் கார்கள் ஒவ்வொன்றாக கிளம்பிக் கொண்டிருந்தன. எப்படி இந்தக் கூட்டத்தைக் கடந்து போகப் போகிறோம் என்று புழுங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கை தோளைத் தொட்டது. பின்னணிப் பாடகர் பி.பி.சீனிவாஸ். உச்சஸ்தாயியில் சீர்காழியும், டி.எம்.எஸ்ஸும் பாடி தமிழ்த் திரையில் ஆட்சி செய்த காலகட்டத்தில் தென்றல் போல இனிய எளிய குரலில் நம் இதயத்தில் இடம் பிடித்தவர் பி.பி.சீனிவாஸ்.

பி.பி. சீனிவாஸ்

காலங்களில் அவள் வசந்தம்

கலைகளிலே அவள் ஓவியம்

மாதங்களில் அவள் மார்கழி

மலர்களிலே அவள் மல்லிகை

- என்று கவிதை மலர்களைக் குரல் வழியே தூவியவர்.

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா

வாழ்க்கையில் நடுக்கமா!

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல்தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

- என்ற பாடல் வரிகள் எத்தனை ஆயிரம் பேரைத் தற்கொலையிலிருந்து காப்பாற்றியிருக்கும்? போதுமடா சாமி சென்னை வாழ்க்கை என்று ஸ்ரீரங்கம் புறப்பட இருந்த கவிஞர் வாலியைப் பிடரியில் தட்டி, ‘உனக்கொரு வாழ்க்கை சென்னையில் காத்துக் கொண்டிருக்கிறது. எங்கே ஓடுகிறாய்?’ என்று கேட்ட பாடல் அல்லவா அது?

இப்படி எத்தனையோ இனிய பாடல்களைப் பாடியவர் பி.பி. சீனிவாஸ். ஆந்திரப் பிரதேசம் காக்கி நாடாவில் பிறந்திருப்பினும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, கொங்கனி, இந்தி எனப் பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியவர். அன்றிருந்த டிரைவ் இன் உட்லண்ட்ஸில் பேடும், பேனாவுமாக ஏதாவது கவிதைகளை எழுதிக் கொண்டே இருப்பார். எல்லோர்க்கும் இனியவர். ‘நிலவே என்னிடம் நெருங்காதே -நீ நினைக்கும் இடத்தில் நானில்லை- என்ற பாடல் ஜெமினி கணேசனுக்குப் பாடியது போல, பின்னாளில் -தென்றலே நீ பேசு, உன் கண்களால் நீ பேசு’ என்று எனக்கும் ஒரு படத்தில் பாடியுள்ளார். அவர் தோளில் கைபோட்டு காரில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டுப்போனார்.

சாந்தி -நாராயணசாமி திருமணம்

29 ஆண்டுகள் ஓடிவிட்டன. 180 படங்களில் நான் நடித்து முடித்து விட்ட சமயம். சென்னையில் இறக்குமதி கார்கள் அனுமதி இல்லாத காலம். டொயோட்டா -கரோல்லா கார் சென்னையில் நானும் இன்னும் ஒருவர் மட்டும் வைத்திருந்தோம்.

ஏவிஎம் நிறுவனம் தனது 50 ஆண்டு விழாவை கலைஞர் முதல்வராக இருந்த சமயம் 1997 மார்ச் 8-ந்தேதி ஏவிஎம் ஸ்டுடியோவில் நடத்தியது. கலைஞர், சிவாஜி, கமல், கே.பி, பாரதிராஜா, சோ. ஜெமினிகணேசன், திருலோக்சந்தர், வாலி, நாகேஷ், பானுமதி, செளகார்ஜானகி, சரோஜாதேவி, மனோரமா என்று திரையுலகமே கூடியிருந்தது.

டொயோட்டா கார்

நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர் என அனைத்துத் தரப்பினரும் குழுமியிருந்தனர்.

முதலில் என்னைத்தான் பேசச் சொன்னார்கள். கலைஞர் சங்கத்தமிழ் பாடல்களைத் தழுவி திரைப்பட வசனங்கள் எழுதிய அழகை மூன்றரை நிமிடத்தில் பேசி முடித்தேன்.

என் மகள் திருமணத்தில் பி.பி.எஸ்.

நிகழ்ச்சி முடிய இரவு 10 மணியாகி விட்டது. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து கடைசியில் ஒரு உருவம். காலி சேர்களுக்கு நடுவில் தடுமாறிக் கொண்டிருந்தது. அவர் தோளைத் தொட்டு அழைத்துப் போய் வீட்டில் இறக்கிவிட்டேன்.

‘உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலே!’ என்றார்.

‘29 ஆண்டுகளுக்கு முன்னாடி ஏற்கெனவே இதை நீங்க செஞ்சுட்டீங்க!’ என்றேன். ஆம். அதே பி.பி.சீனிவாஸ். இந்த நிகழ்வுக்குப் பொருந்தும் குறள்:

‘நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று’

---

குறள் 47 சினம்

ஒரு மனிதன் உணர்ச்சிவசப்பட்டு கோபித்துக் கொண்டால் அவன் தாய் அதைப் பொறுத்துக் கொள்வாள். காரணம் அவள் பெற்ற மகன் என்பதனால்...

அன்பான மனைவியும் அவன் கோபத்தைத் தாங்கிக் கொள்வாள். தாலி கட்டிய கணவன் ஆயிற்றே என்று.

பெற்ற பிள்ளைகளும் பொறுத்துக் கொள்வார்கள். ஆயிரம் இருந்தாலும் அப்பா என்ற எண்ணத்தில்.

ஒருவனின் கோபத்தை யாரெல்லாம் தாங்கிக் கொள்கிறார்களோ அவர்களிடம் தன் கோபத்தைக் காட்டாமல் இருப்பவன்தான் வணங்கத்தக்க மனிதர் என்கிறார் வள்ளுவர்.

2018 அக்டோபர் 28-ம் தேதி எங்கள் உறவுக்காரப் பெண் டாக்டர் சந்திரலேகாவின் ஐஸ்வர்யா மகப்பேறு மருத்துவமனை கருத்தரிப்பு மையம் திறப்பு விழாவுக்கு மதுரை சென்றேன். காரிலிருந்து மருத்துவமனை கட்டிடம் 20 அடி தூரம் கூட இராது. வண்டியிலிருந்து இறங்கியதும் 6 அடி உயரம் தாண்டிய சத்யராஜ் போல கம்பீரமான -பலசாலிகளான 5- 6 இளைஞர்கள் என்னை நகர விடாமல் வழிமறித்து செல்ஃபி எடுத்துக் கொண்டே இருந்தனர்.

டாக்டர் சந்திரலேகாவுடன்

2 நிமிடம் 3 நிமிடம் கழித்தும் அவர்கள் அன்புத் தொல்லையிலிருந்து விடுபட முடியவில்லை. பாதுகாப்புக்கு வந்திருந்த BLACK CAT ஆட்களை இடித்துத் தள்ளிவிட்டு செல்ஃபி எடுப்பதில் குறியாக இருந்தனர்.

ஒரு கட்டத்தில் பொறுமை போய் -போதுமய்யா வழியை விடுங்கள் என்று என் பலம் கொண்ட மட்டும் அவர்களைத் தள்ளிவிட்டு முன்னால் போனால், அங்கே ஒரு 18 வயது இளைஞன் ஒருவன் தன்னுடைய போனில் ‘செல்ஃபி’ எடுத்துக் கொண்டிருந்தான்.

‘போதும் வழியை விடுப்பா!’ என்று தள்ளியவுடன் அவன் ஐ போன் கீழே விழுந்துவிட்டது.

அவ்வளவுதான். கண் இமைக்கும் நேரத்தில் நான் ‘செல்ஃபி’ சிவகுமார் என்று உலக மக்களால் அறியப்பட்டேன். வாழ்க்கை முழுக்க சம்பாதித்த நல்ல பெயரை அந்த நொடியில் இழந்துவிட்டேன்.

வாழ்த்துரை

எனக்குக் கோபம் வந்தது நியாயம் என்றால் அந்த கோபத்தை பலசாலிளான 6 அடி மனிதர்களிடம் காட்டியிருக்க வேண்டும். அதை விட்டு அப்பாவி இளைஞன் மீது காட்டியிருக்கக் கூடாது. நானும் ஒரு சராசரி மனிதன்தானே? என்னைப் போன்றோருக்காக வள்ளுவர் எழுதிய குறள்:

‘செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்- அல்லிடத்துக்

காக்கின் என் காவாக்கால் என்’

--

கதை பேசுவோம்..
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x