Published : 07 Mar 2016 10:46 AM
Last Updated : 07 Mar 2016 10:46 AM

டேவிட் பால்டிமோர் 10

நோபல் பெற்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர்

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளரும், கல்வியாளரு மான டேவிட் பால்டிமோர் (David Baltimore) பிறந்த தினம் இன்று (மார்ச்7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l அமெரிக்காவின் நியூயார்க் நகரில் (1938) பிறந்தார். பள்ளிப் பருவத் தில் கணிதத்தில் சிறந்து விளங்கி னார். உயர்நிலைப் பள்ளிப் பருவத் தில் ஜாக்சன் நினைவு ஆய்வுக்கூடத் தின் உயிரியல் ஆய்வுத் திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தபோது இவரது ஆர்வம் அறிவியல் பக்கம் திரும்பியது.

l உயிரியல், வேதியியல் பாடங் களை ஸ்வார்த்மோர் கல்லூரியில் கற்றார். 1960-ல் பட்டம் பெற்றார். படிக்கும் காலத்திலேயே, கோல்டு ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வுக்கூடத்தில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். மூலக்கூறு உயிரியல் பற்றிய ஆராய்ச்சிகளில் அதிக ஆர்வத்தோடு ஈடுபட்டார்.

l மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (எம்ஐடி) உயிரி இயற்பியல் பயின்றார். 1964-ல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1965-ல் சால்க் உயிரியல் கல்வி நிறுவனத்தில் இணை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்.

l எம்ஐடி பேராசிரியராக 1972-ல் நியமிக்கப்பட்டார். புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளராக சேர்ந்தார். வைரஸ்களின் அமைப்பு, வைரல் ஆர்என்ஏ தொகுப்புகள், வைரஸ்களின் சுய இனப் பெருக்கம், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நோய் எதிர்ப்பு அமைப்பு களில் அவற்றின் தாக்கம் ஆகியவை குறித்து ஆராய்ந்தார்.

l நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும் புரோட்டீன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டறிவதற்கான ஆராய்ச்சிக் குழுவில் முக்கிய பங்காற்றினார். வைரஸ் வகைகள் மற்றும் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகளுக்காக உடல் இயங்கியல் மற்றும் மருத்துவத்துக்கான நோபல் பரிசை ஹோவர்டு எம்.டெமின், ரெனட்டோ டல்பெக்கோ ஆகியோருடன் இணைந்து 1975-ல் பெற்றார்.

l மாணவர்களுக்காக ஏராளமான கருத்தரங்குகள் நடத்தி அவர்களது கற்கும் திறனை மேம்படுத்தினார். மாணவர்கள் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வழிநடத்தினார். 1997-ல் கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ஸ்டெம்செல் ஆராய்ச்சிகளை ஆதரித்தார்.

l அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத் தலைவராக 2007-ல் நியமிக்கப்பட்டார். எலும்பு மஜ்ஜையில் உள்ள ஸ்டெம்செல்களை மரபணு மாற்ற தொழில்நுட்ப உதவியுடன் ஹெச்ஐவி வைரஸ்களுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் பி-செல்களாக மாற்ற முடியும் என 2009-ல் நிரூபித்தார்.

l இவரது இந்த ஆய்வு முனைப்பை அடிப்படையாகக் கொண்டு உயிரணு மருந்து தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யக்கூடிய பி-செல்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகளும் நடக்கின்றன. குழந்தைகளைத் தாக்கும் என்சைம் குறைபாட்டு நோய் சிகிச்சைக்கும் இது பயன்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

l ‘குஸ்டவ் ஸ்டென்’, ‘வாரன் ட்ரையனியல்’, ‘கெயிர்டனர்’, ‘எல்லி லில்லி’ உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றார். அமெரிக்காவின் உயரிய அறிவியல் விருதான ‘நேஷனல் மெடல்ஸ் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’ விருது 2000-ல் இவருக்கு வழங்கப்பட்டது.

l நோய் எதிர்ப்பியல், நச்சு உயிரியல், புற்றுநோய் ஆய்வு, உயிரித் தொழில்நுட்பம், டிஎன்ஏ என பல்வேறு துறைகளில் மகத்தான பங்களிப்பை டேவிட் பால்ட்டிமோர் வழங்கியுள்ளார். 78 வயதாகும் இவர், பல அறிவியல் அமைப்புகளில் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x