

இசையரசர் எம்.எம்.தண்டபாணி தேசிகர் மற்றும் அவரிடம் இசை படித்தவரும் தமிழிசைக் கல்லூரியில் நீண்ட காலம் ஆசிரியராகப் பல மாணவர்களுக்குத் தமிழிசையைக் கற்றுக் கொடுத்தவருமான முத்துக்குமாரசாமி ஆகியோரின் பிறந்த நாளையொட்டி இசை விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது இசைத் தமிழ் மையம்.
சென்னையை அடுத்துள்ள கோவூரில் மாணவர்களுக்கு இசைச் செல்வத்தைக் கொண்டுசேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அமைப்பு இசைத் தமிழ் மையம். இம்மையம் ஆண்டுதோறும் இளம் கர்நாடக இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இசை விழாவை நடத்தும். இதன் நிறுவனர் சுப.சரவணன் இந்த ஆண்டு மயிலாப்பூர் லட்சுமிகிரி கன்வென்ஷன் அரங்கத்தில் இசை விழாவை அண்மையில் நடத்தினார்.
வி.கிருஷ்ணசாய், வி.முகுந்தசாய், சி.முத்தழகு, ராஜலட்சுமி பாஸ்கரன், கோவூர் கிரிஷ் மியூசிக் அகாடமி மாணவர்கள், தென்னிந்திய நாட்டிய இசைப் பள்ளி மாணவிகள் ஆகியோர் கர்நாடக இசைக் கச்சேரிகளையும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தினர். மாலையில் இசைத்தமிழ் மையத்தின் காலாண்டு மாத இதழை கிரி டிரேடிங் உரிமையாளர் டி.எஸ்.சீனிவாசன் வெளியிட்டார். தமிழிசைக் கல்லூரி முதல்வர் வே.வெ.மீனாட்சி, சென்னை சமூகப் பணிக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் சி.ஆர்.மஞ்சுளா உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சி குறித்து சுப.சரவணன் பேசும்போது, “இசையரசர் எம்.எம்.தண்டபாணி தேசிகர் மற்றும் அவரின் மாணவரான ப.முத்துக்குமாரசாமி ஆகியோரின் பிறந்த நாளை ஒட்டி, முழுக்க முழுக்க இளைஞர்களுக்காக இந்த இசை விழா நடத்தப்பட்டது. தேசிகர் மற்றும் இசை ஆசான் முத்துக்குமாரசாமி ஆகியோரின் பன்முகத் தன்மையைப் பல ஆளுமைகள் பெருமையுடன் பேசும் கட்டுரைகளின் தொகுப்பையும் நூல் வடிவில் வெளியிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.