Last Updated : 04 Oct, 2021 09:58 AM

 

Published : 04 Oct 2021 09:58 AM
Last Updated : 04 Oct 2021 09:58 AM

திருக்குறள் கதைகள் 42 - 43: வாழ்வு

காமராஜர் 1903-ல் ஜூலை 15-ந்தேதி விருதுநகர் குமாரசாமி-சிவகாமி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார்.

தனது 6-வது வயதில் தந்தை மரணமடைந்தார். 12 வயதில் 6-வது வகுப்புடன் பள்ளிக்கு செல்வதை நிறுத்திக் கொண்டார். 1919-ல் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை அவரை அரசியலில் இறங்கத் தூண்டியது. 1920-ல் தமுக்கடிக்கும் அடிப்படைத் தொண்டனாக காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார்.

1921-ல் மகாத்மா காந்தி மதுரை வந்த சமயம் அவரை முதன்முதல் நேரில் பார்த்தார். 1930-ல் உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டு 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தார். 1937-ல் தனது 34-வது வயதில் சாத்தூர் தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

சென்னை மாகாண கவர்னர் இரண்டாம் உலக யுத்தத்திற்கு யுத்த நிதி திரட்டியபோது, மக்களிடம் போய், ‘அந்த நிதி தராதீர்கள்!’ என்று காமராஜ் பேசினார். தேச விரோத சட்டத்தைப் பயன்படுத்தி அவரைக் கைது செய்து 1940-ல் வேலூர் சிறையில் அடைத்தனர்.

ராஜாஜியுடன் காமராஜர்

1942-ல் வெள்ளையேனே வெளியேறு முழக்கத்தில் கலந்து கொள்ள பம்பாய் சென்றார். பம்பாய் கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக 1942-45 வரை சிறையில் அடைக்கப்பட்டார்.

1954- ஏப்ரல் 13-ந்தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். பதவி ஏற்பு விழாவுக்கு சிவகாமி அம்மையார் விருதுநகரிலிருந்து வந்தார். விழா முடிந்ததும் அம்மா விருப்பப்படி திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிக்க கார் கொடுத்தனுப்பினார்.

மறுநாள் அம்மா திரும்பியதும் கையிலே விருதுநகர் புறப்பட ரயில் டிக்கட் கொடுத்தார்.

‘தம்பி! நீ தனியா இருக்கே. உனக்கு சமைச்சு போட்டு கூடவே நான் இருக்கேன்!’ என்றார் அம்மா.

‘‘நீ இங்க இருந்தேன்னா, உன் கூடப் பொறந்ததுங்க அது வேணும், இதுவேணும்னு கொடைச்சல் குடுப்பாங்க. நீ கிளம்பு!’’ என்று விரட்டி விட்டார்.

விருதுநகரில் அம்மா தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதைப் பார்த்து காங்கிரஸ் அரசின் முனிசிபாலிடி ஆட்கள், வீட்டுக்குள் கனெக்சன் கொடுத்து வசதி செய்து கொடுத்தனர்.

செய்தி கேள்விப்பட்டதும், ‘‘அரை மணி நேரத்தில் அந்த கனெக்சனை கட் பண்ணச் சொல். சீப் மினிஸ்டர் அம்மா உசத்தி இல்லே. ஊர் மக்களோடு நின்று அவங்களும் தண்ணீர் பிடிக்கட்டும்!’’ என்று உத்தரவு போட்டு விட்டார்..

நாகம்மாள் என்ற ஒரு சகோதரி மகன் ஜவகருக்கு திருமணம் நடந்தது. ‘பெண்களுக்கு வசதியாக இருக்கட்டும் என்று 4 அடிக்கு 4 அடி சதுரத்தில் டாய்லட் கட்டிக் கொள்ள அனுமதி கேட்டனர். ‘முடியாது. காமராஜ் பங்களா கட்ட பர்மிஷன் குடுத்திட்டான்னு சொல்லுவாங்க!’ என்று மறுத்து விட்டார்.

எழுத்தாளர் சாவி விருதுநகர் சென்ற போது சிவகாமி அம்மையாரைச் சந்தித்திருக்கிறார். தான் பத்திரிகையாளர் என்று அம்மாவிடம் சொல்ல -மெட்ராஸ் போயி காமராசை சந்திச்சீன்னா, மாசாமாசம் அவர் அனுப்பற 120 ரூபாய் போதலே. வடநாடு, ஆந்திரா, மைசூர் பக்கங்கள்ளேருந்து என்னைப் பார்க்க வர்றவங்களுக்கு சோடா, கலர் வாங்கித்தர காசு பத்தலே. 20 ரூபாய் சேர்த்து அனுப்பச் சொல்லு என்று கேட்டிருக்கிறார்.

சிவகாமி அம்மையார்

காமராஜர் இதைக் கேட்டதும், ‘‘அம்மாவைப் பார்க்கத்தான் அவங்க வர்றாங்களே தவிர, இவங்க குடுக்கற சோடா கலர் குடிக்க யாரும் வர்றதில்லே. அதிகமா காசு அனுப்பினா, கோயில் குளம்னு போய் விழுந்து செத்துப் போகும். போதும்!’ என்று சொல்லி விட்டார்.

இறக்கும்போது நாலு ஜோடி சட்டை, வேட்டி, 5-6 புத்தகங்கள், இரண்டு ஜோடி செருப்பு, தலையணையடியில் 140 ரூபாய் சில்லறை.

அவர் வாழ்ந்த வீட்டை வீட்டுக்காரன் எடுத்துக் கொண்டான். அவர் பயன்படுத்திய காரை காங்கிரஸ் அலுவலகம் எடுத்துக் கொண்டது. அவர் பூதவுடலை நெருப்பு எடுத்துக் கொண்டது. அவரது மகத்தான வாழ்வை வரலாறு எடுத்துக் கொண்டது. இவரைப் போன்ற தன்னலங்கருதாத தலைவருக்கு வள்ளுவர் எழுதிய குறள்:

‘‘குணநலம் சான்றோர் நலனே- பிறநலம்

எந்நலத்து உள்ளதூஉம் அன்று’

---

குறள் கதை 43 குலவிளக்கு

சேலம் அக்ரஹாரம். 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த இளைஞன். இரவு நேரம் டீ கடைக்கு வந்து டீ குடித்து விட்டு கடைக்கு வெளியே வந்து நின்றான். மெயின் ரோட்டில் வந்த லாரி, வலதுபறம் அல்லது இடது புறம் திரும்பிச் செல்ல வேண்டும். பிரேக் பிடிக்காததால் நேரே கடைக்குள் புகுந்து விட்டது. இளைஞன் மல்லாந்து தரையில் கிடக்கிறான். தலைக்கு மேலே MDS -3968 -நம்பர் பிளேட். இருபுறமும் ராட்சத சக்கரங்கள். 5 அடி தூரத்தில் ஏதோ கிடந்தது. என்ன அது என்று கேட்டான். அது உன் கால் என்றனர். மயக்கமாகி விட்டான்.

மருத்துவமனை கொண்டு சென்றார்கள். தொடையில் நடுப்பகுதியில் உள்ள எலும்பு உடைந்து கால் தனியே போய் விட்டது. செயற்கைக்கால் பொருத்த -பந்து கிண்ண மூட்டிலிருந்து கீழே வரும் தொடை எலும்பில் இன்னும் கொஞ்சம் அறுத்து எடுத்துவிட்டு காலைப் பொருத்தினார்கள். பி.ஏ., முடித்து சி.ஏ., முடித்து ஆடிட்டர் வேலை பார்த்தான்.

சீனுவுடன்

சேலம் அமெச்சூர் ஆர்ட்ஸ் என்ற ஒரு சபாவின் செயலாளராக அவன் இருந்தபோது -1967-ல் அம்மன் தாலி நாடகத்தை சென்னையில் நான் அரங்கேற்றி விட்டு, இரண்டாவது நாடகமாக சேலத்தில் நடத்த ஒப்பந்தம் செய்ய வந்தான். அவன்தான் சீனிவாசன். அவன் கதையை கேட்டு அவனுக்கு எப்படியும் திருமணம் செய்து வைத்து விடுவது என்று முயற்சித்தேன். காரைக்கால் அம்மையார் - படத்தில் நானும் ஸ்ரீவித்யாவும் நடித்த சமயம் அது. ஸ்ரீவித்யாவின் தோழி அவனை மணக்க முன் வந்தாள். பெற்றோர் மறுத்து விட்டனர்.

ஒரு கட்டத்தில் அவனே வெறுத்துப் போய், ‘எனக்கெல்லாம் பொண்ணு கிடைக்காது. விடுடா!’ என்று சொன்னான்.

6 மாதம் கழித்து சீனு போன் செய்து, ‘ஒரு பெண் கிடைத்து விட்டாள். எங்கள் அக்ரஹாரத்தில் எங்கள் தெருவிலேயே பக்கத்து வீட்டில் வசிக்கிறாள்!’ என்றான்.

அளவற்ற சந்தோஷத்தில் சேலம் போனேன். அந்தப் பெண் பெயர் உஷா. திருமணத்திற்கு முன்பே தைரியமாக சீனு வீட்டிற்கு வந்து எங்களுக்கு பகல் உணவு பரிமாறினாள். ‘நீ வேலுநாச்சியார் போன்ற வீராங்கனை உஷா!’ என்றேன். ‘போங்க சார்!’ என்று வெட்கப்பட்டுச் சிரித்தாள்.

சேலம், சங்ககிரி சிமெண்ட் தொழிற்சாலை பள்ளியில் 11-ம் வகுப்பு வரை படித்த உஷா பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளில் நிறைய பரிசுகள் வாங்கியவர். மிகுந்த தைரியசாலி.

சீனு - உஷா திருமணம் 5-3-1981

பின்னர் சேலம் சாரதா மகளிர் கல்லூரியில் ‘ப்ரி-யுனிவர்சிட்டி’ முடித்து, தட்டச்சு, சுருக்கெழுத்து, ஆங்கிலம் - தமிழில் அடிக்கப் பயிற்சி எடுத்து -சேலம் பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 4 ஆண்டுகள் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு சுருக்கெழுத்து ஆசிரியராக பணியாற்றினார்.

பின்னர் கைத்தறி மற்றும் துணி நூல் (TEXTILE) துறையில் சுருக்கெழுத்தாளராகவும், அதைத் தொடர்ந்து கைத்தறி அலுவலராக 22.2.1979 முதல் 25.5.1999 வரை பணிபுரிந்தவர். சீனுவை மணந்து, வேலைக்கும் சென்று கொண்டு குடும்பமும் நடத்தி ஒரு பெண், ஒரு பிள்ளை பெற்றனர். பெண் ஐஸ்வர்யா- கணவன் குழந்தைகளுடன் அமெரிக்காவில் உள்ளார்.

40-வது திருமண ஆண்டு

மகன் மணிகண்டனுடன் சீனு, உஷா சென்னையில் வசிக்கிறார்கள்.

உஷா என்ற பெண்மணி வராமல் இருந்தால் சீனு வாழ்க்கை பட்ட மரமாகப் போயிருக்கும். மனைவி குல விளக்காக அமைந்தால் குடும்ப வாழ்க்கை சொர்க்கம் என்கிறார் வள்ளுவர்:

‘இல்லதுஎன் இல்லவள் மாண்பானால் -உள்ளதுஎன்

இல்லவள் மாணாக் கடை’

--

கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x