Last Updated : 01 Oct, 2021 09:47 AM

 

Published : 01 Oct 2021 09:47 AM
Last Updated : 01 Oct 2021 09:47 AM

திருக்குறள் கதைகள் 40 - 41: முயற்சி

குறள் கதை 40: முயற்சி

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மூன்றெழுத்து ஏவிஎம். மேனா என்கிற அப்பச்சி மெய்யப்பன் அவர்களும், அவரது குமாரர் சரவணன் அவர்களும், மகன் குகனும் தொடர் ஓட்டம் போல ஏவிஎம் பேனரில் 73 ஆண்டுகள் நிலைத்து நின்று 175 படங்களுக்கு மேல் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள்.

1935-ல் முதல் படம் 'அல்லி அர்ஜூனா'. 2-வது படம் 'ரத்னாவளி'. 1938-ல் 'நந்தகுமார்'. மூன்றும் படுதோல்வி. தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடித்து 1941 -ல் 'பூ கைலாஸ்' தெலுங்குப் படம் எடுத்து வெற்றி கண்டார்.

1942-ல் நகைச்சுவை நடிகர்களை வைத்து ‘சபாபதி’ உள்பட பல படங்களைத் தயாரித்து இயக்கியவர்.

1945-ல் 'ஸ்ரீ வள்ளி' வெற்றிப் படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் குரலுக்கு இணையாக ருக்மணிக்கு பெரிய நாயகியைப் பின்னணி பாட வைத்தவர்.

காரைக்குடியில் 1945-ல் ஸ்டுடியோ நிறுவி 1947-ல் ‘நாம் இருவர்’ என்ற வெற்றிப் படத்தை எடுத்தவர்.

தந்தை வழியில் தனயன்

1947-ல் காந்தி அடிகள் பார்த்த சினிமா ‘ராமராஜ்யா’. அந்த இந்திப் படத்தை தமிழ்மொழி மாற்றம் செய்து வெளியிட்டு வெற்றி கண்டவர்.

பரதநாட்டியம் மட்டுமே படங்களில் ஆடும் லலிதா பத்மினியைத் தன் ‘வேதாள உலகம்’ படத்தில் முதன் முதல் ஆடச்செய்தவர்.

1949-ல் சென்னையில் 10 ஏக்கர் இடம் 37,500 ரூபாய்க்கு வாங்கி ஏவிஎம் ஸ்டுடியோவை உருவாக்கி முதலில் தயாரித்த படம் 'வாழ்க்கை'.

வைஜெயந்தி மாலாவை அறிமுகம் செய்த படம். ஏவிஎம் இயக்கத்தில் கடைசிப் படம். அண்ணா, கே.ஆர்.ராமசாமிக்கு எழுதிக் கொடுத்து ஹிட் ஆன நாடகம். ‘ஓர் இரவு’ 1950-ல் 10 ஆயிரம் ரூபாய் அண்ணாவுக்கு கொடுத்து ஏவிஎம் அதை வாங்கினார். ஒரே இரவில் திரைக்கதை வசனத்தை எழுதிக் கொடுத்து விட்டார் அண்ணா. கே.ஆர்.ராமசாமிதான் படத்திலும் ஹீரோ. படம் ஹிட்.

கடலூரில் கே.என்.ரத்தினம் என்ற நாடக முதலாளி பாவலர் பாலசுந்தரத்தின் கதையை, ‘பராசக்தி’ என்ற பெயரில் நடத்தி வந்தார். விநியோகஸ்தர் பி.ஏ.பெருமாள் முதலியார் ஏவிஎம் தயாரிப்பில் நாடகத்தில் நடித்த கணேசனே படத்திலும் நடிக்க பிஏபி வற்புறுத்த பல சோதனைகளைக் கடந்த 'பராசக்தி' மாபெரும் வெற்றி. 1952-ல் 'பராசக்தி' அதைத் தொடர்ந்து 'பெண்', 'அந்தநாள்', 'குலதெய்வம்' படங்கள் வந்தன. 1960-ல் 'களத்தூர் கண்ணம்மா'வில் கமல் என்ற அற்புதக் கலைஞனைச் சிறுவனாக இருக்கும்போது அறிமுகப்படுத்தினார்கள்.

எம்.ஜி.ஆர் அவர்கள் ஏவிஎம்மில் 1966-ல் நடித்த 'அன்பே வா' வண்ணப் படம் சூப்பர் ஹிட். 1968-ல் சிவாஜியின் 125-வது படம் ‘உயர்ந்த மனிதன்’ வெளிவந்தது. எனக்கு மிக அருமையான வேடம் கிடைத்து திரையுலகில் நிலைக்க உதவிய படம் அது.

இப்படியாக ஏவிஎம் அவர்கள் தன் காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்று மொழிகளிலும் 87 படங்கள் டப்பிங் உட்படத் தயாரித்து வெளியிட்டார்.

நூறாவது படவிழா தலைமை

அவர் செய்த மகத்தான காரியம் - பாரதியார் கவிதைகளை சுராஜ் மல் என்ற சேட்டு 600 ரூபாய்க்கு வாங்கி வைத்திருந்தார். அந்தப் பாடல் உரிமைகளுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்கி ‘நாம் இருவர்’ படம் உள்பட பாரதி பாடல்களைத் தன் படங்களில் பயன்படுத்தியவர் 1949-ல் ஓமந்தூரார் தமிழக முதல்வராக இருந்தபோது ஒரு பைசா கூட வாங்காமல் பாரதியின் பாடல்களை நாட்டுடமை ஆக்கக் கொடுத்ததுதான்.

மேனா அவர்களைத் தொடர்ந்து அவரது மகன்களில் ஒருவரான சரவணனும் அவர் குமாரர் குகனும் தொடர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டனர்.

1980-ல் ரஜனியை ஹீரோவாகப் போட்டு 'முரட்டுக்காளை' படத்தைத் தயாரித்து வெளியிட்டு 'போக்கிரி ராஜா', 'பாயும் புலி', 'நல்லவனுக்கு நல்லவன்', 'மிஸ்டர் பாரத்', 'மனிதன்', 'ராஜா சின்னரோஜா', 'எஜமான்' என்று ரஜினியின் ஹிட் படங்களைத் தயாரித்தனர்.

’சகலகலா வல்லவன்’, ’தூங்காதே தம்பி தூங்காதே’ என்று கமல் படங்களையும், ’மாநகரக் காவல்’, ’சேதுபதி ஐபிஎஸ்’ என்று விஜயகாந்த் படங்களையும், ’சம்சாரம் அது மின்சாரம்’, ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’, ’மின்சாரக் கனவு’ எனத் தொடர்ந்து சூர்யாவுக்கு ’பேரழகன்’, ‘அயன்’ படங்களில் வாய்ப்பளித்தனர். 73 ஆண்டுகளில் ரஜினியின் சூப்பர் ஹிட் படங்கள் ’சிவாஜி’ உள்பட 175 படங்களைத் தயாரித்துள்ளனர்.

என்னை 1965-ல் அறிமுகப்படுத்திய ஏவிஎம் அவர்களே 1979-ல் எனது 100-வது பட வெளியீட்டு விழாவுக்குத் தலைமை தாங்கி பெருமைப்படுத்தினார். அந்த விழாவில்தான் எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராகக் கலந்துகொண்டு 100 தயாரிப்பாளர்களுக்கும் என் சார்பில் கேடயம் வழங்கி சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கி வைத்தார்.

அயன்

அதே ஏவிஎம் நிறுவனம் என் மகன் சூர்யாவை 'பேரழகன்', 'அயன்' படங்களில் நடிக்க வைத்தனர்.

எப்போதும் எளிமையான தோற்றம். தொழிலில் நேர்மை, கடும் உழைப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக விடாமுயற்சி. இலக்கு இதுதான் என்று முடிவு செய்து விட்டால் அதை அடையும் வரை முயற்சி செய்துகொண்டே இருப்பார்.

ஏவிஎம்மின் லெட்டர் பேடில் இருக்கும் வாசகமே முயற்சி திருவினையாக்கும் என்பதாகும். இவருக்கு அப்பட்டமாகப் பொருந்தும் குறள்:

‘முயற்சி திருவினையாக்கும் -முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்!’

--

குறள் கதை 41: சொல்

வேலுமணியம்மாள் 1974, ஜூலையில் அவினாசியை அடுத்த தண்டுக்காரன் பாளையத்தில் கோயில் முன் 5 ஆயிரம் பேர் உட்கார வசதியாக பந்தல் போட்டு முன்னால் நின்று எங்கள் திருமணத்தை ஜாம்-ஜாம் என்று நடத்தி வைத்தது பற்றி முன்பே சொல்லியுள்ளேன்.

நான் பெறாத தாயாக என் மீது பாசம் காட்டியவர். தனக்கு மகன் வழி, மகள் வழி பேரன் பேத்திகள் இருந்தும் கூட சிறு வயது சூர்யா, கார்த்தி, பிருந்தா படங்களைத் தன் படுக்கை அறையில் தலைமாட்டில் வைத்திருந்தார்.

பிருந்தா 4 வயதுக் குழந்தையாக இருந்தபோது ஒரு நாள் காலை சிற்றுண்டிக்குச் சென்றிருந்தோம். வெங்கடேசலு நாயுடுவும், அம்மாவும் வரவேற்றனர். சிற்றுண்டியில் பிருந்தா அதிகமாக சட்னியை விரும்பிச் சாப்பிட்டதால் சட்னி பாப்பாயி என்று அவளுக்குப் பெயர் வைத்தார்கள்.

தென்னிந்தியாவிலேயே செயற்கைப்பட்டு தயாரிப்பில் முதலிடம் வகித்த மிகப் பெரிய நிறுவனம் சவுத் இந்தியா விஸ்கோஸ். இந்த கம்பெனியில் இந்த அம்மா பங்குதாரர் என்று கேள்விப்பட்டு, எங்கள் ஊர் இளைஞன் ஒருவனுக்கு அதில் வேலை வாங்கித் தரச் சொன்னேன்.

வெங்கடேசலு -அம்மா

‘தம்பி! நாளைக்கு வந்து என்னைப் பாரு!’ என்று சொல்லி அனுப்பினார். நான் சென்னை வந்து விட்டேன்.

6 மாதம் கழித்து ஊர் சென்றபோது அந்தத் தம்பி, கண்ணீருடன் என் முன்னால் நின்றான்.

‘‘நாளைக்கு வந்து பாருப்பா’ன்னு உங்க முன்னாடி சொன்னாங்கன்னு மறுநாள் போய் அம்மாவைப் பார்த்தேன். விஸ்கோஸ் ஜெனரல் மேனேஜரைப் பாருன்னாங்க. அவரு பி.ஏ.வைப் பாருன்னு கை காட்டினாரு. பி.ஏ.,முதலாளியை நேர்ல பார்த்து கேளுன்னாரு. முதலாளியைப் பார்க்க வாட்ச்மேன் விடவே இல்லை!’’ என்றான்.

ஆக, அந்த இளைஞனுக்கு வேலை கிடைக்கவில்லை. இதைக் கேட்டதும் என் ரத்தம் கொதித்தது. இளம் வயது. மானம் ரோஷமுள்ள வயது. உடனே அம்மாவுக்கு போன் போட்டேன்.

‘‘ அம்மா! நீங்க பெரிய ஆலமரம். அதில் ஆயிரம் பறவைகள் குடியிருக்கும். நான் ஒரு சிட்டுக்குருவி. இந்தக் குருவி அந்த ஆலமரம் முழுதும் எனக்கு சொந்தம்னு நெனைக்கறது எப்படி முட்டாள்தனமோ அப்படி உங்களைப் பெரிசா நெனைச்சது என் தப்பு. ஆயிரம் இருந்தாலும் நீங்க முதலாளி வர்க்கம். நாங்கல்லாம் உங்ககிட்ட வேலை பாக்கற தொழிலாளி வர்க்கம். உங்ககிட்ட இதை எதிர்பார்த்தது தப்புதான்!’’ என்று கோபத்தில் திட்டிவிட்டு போனை வைத்துவிட்டேன்.

தன் பேரக் குழந்தைகளாக

ஒரு வாரம் கழித்து அம்மாவிடமிருந்து போன். நீ திட்டினதும் எனக்கு ‘செகண்ட் அட்டாக்’ வந்திருச்சு. ஆஸ்பத்திரியிலிருந்து இன்னிக்குத்தான் வீடு வந்தேன்.

‘‘பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லும்பாங்க. டேய்! விஸ்கோஸ்ல என்னுடைய ஷேரைப் பிரிச்சு வாங்கிட்டோம். அதில் எனக்கு இப்ப எந்த உரிமையும் இல்லை. இந்த 2 வருஷ காலத்தில, வேலுமணி அம்மா சிபாரிசுல ஒரு காக்கா குருவி விஸ்கோஸ்ல சேர்ந்ததா நீ நிரூபிச்சேன்னா, நான் மெட்ராஸ் வந்து ஒரு மாசம் உன் வீட்டு வாசலைப் பெருக்கி கோலம் போடறேன். உன் குழந்தைங்க டாய்லெட் போனா கழுவி உடறேன்!’’

போன் கட்.

என் இருதயம் ஒரு விநாடி நின்றுவிட்டது. உள்ளங்கை வேர்த்துவிட்டது. மூச்சு அடைப்பது போல ஒரு பிரமை. யாரிடமும் இதைச் சொல்ல முடியாது. 2 நாள் கழித்து நான் போன் செய்தேன்.

‘‘அம்மா மன்னிப்பாயா?’’

‘‘மன்னித்தேன்!’’.

அந்தப் பக்கம் போன் கட்.

ஒரு மாதம் கழித்து அம்மா சென்னை வந்து போன் செய்தார்.

‘‘கருமாரியம்மன் கோயிலுக்குப் போயிகிட்டிருக்கேன்...!’’

‘‘மத்தியான சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வாங்கம்மா!’’

‘‘வர்றேன்!’’

மணி பிற்பகல் 2..., 3.., மூன்றரைக்கு அம்மா போன்..

‘‘இப்பத்தான் கோயில்லருந்து வந்தேன். நெஞ்சு வலிக்குது. நீங்க சாப்பிட்டீங்களாப்பா? சாப்பிடுங்க. நான் 4 மணிக்கு மேல வர்றேன்!’’

வந்தார். 2 ஆளுயர மாலை.. எங்க ரெண்டு பேர் கையிலும் கொடுத்தார். ‘‘நீ அவ கழுத்துல போடு; நீ இவன் கழுத்தில போடும்மா- கால்ல விழுங்க...!’’

‘என்னம்மா?’’

‘‘இன்னிக்கு உங்க கல்யாண நாள்டா. நான்தானே கல்யாணமே பண்ணி வச்சேன்?’’

கண்ணீருடன் பாதம் தொட்டோம். இரண்டு 500 ரூபாய் நோட்டுகளைக் கைகளில் திணித்தார்.

தாயும் தந்தையுமாய் ஆசி

வேறொரு பெண்மணியாக இருந்தால் இந்த ஜென்மத்துக்கு என் முகத்தைத் திரும்பிப் பார்த்திருக்க மாட்டார். இந்த நிகழ்வு மூலம் நான் கற்றுக்கொண்ட பாடம். யாராக இருந்தாலும் நாவடக்கம் வேண்டும் என்பது. இதோ, அதற்குப் பொருந்தும் வள்ளுவர் குறள்:

‘‘யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு!’

--

கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x