Published : 30 Mar 2016 10:28 am

Updated : 30 Mar 2016 10:28 am

 

Published : 30 Mar 2016 10:28 AM
Last Updated : 30 Mar 2016 10:28 AM

வின்சென்ட் வான் கோ 10

10

புகழ்பெற்ற டச்சு ஓவிய மேதை

உலகப் புகழ்பெற்ற டச்சு ஓவிய மேதை வின்சென்ட் வான் கோ (Vincent Van Gogh) பிறந்த தினம் இன்று (மார்ச் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:


# ஹாலந்தில் ஏழ்மையான குடும்பத்தில் (1853) பிறந்தார். அதற்கு ஓராண்டுக்கு முன்பு அதே நாளில் பிறந்து இறந்துபோன இவரது அண்ணன் நினைவாக அவரது பெயரை குழந்தைக்கு சூட்டினர். பின்னாளில் இது தெரியவந்தபோது, தாழ்வு மனப்பான்மைக்கு ஆளானார். வறுமை சிறுவனை முரடனாக, முன்கோபியாக மாற்றியது.

# கிராமப் பள்ளியிலும், உறைவிடப் பள்ளியிலும் படித்தார். படிப்பைவிட ஓவியத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இவரது 16-வது வயதில் வெளியூரில் ஓவியக் கூடம் நடத்தும் உறவினரின் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

# சிறுவனிடம் அன்பாக இருந்த அவர், தி ஹேக் என்ற இடத்தில் ஒரு ஓவியக் கூடத்தில் பணியில் சேர்த்துவிட்டார். ஓவியக்கூடம் லண்டனுக்கு மாறியதால், இவரும் லண்டன் சென்றார். ஓவியம் வரைந்து சம்பாதித்தார்.

# அப்போது, காதல் தோல்வியால் மனச்சோர்வு அதிகமானது. ஊர் திரும்பியவர், ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அங்கு காணும் காட்சிகளை ஓவியமாக வரைந்தார். தந்தைபோல மதபோதகராக மாறும் எண்ணத்துடன் நிலக்கரி சுரங்க ஊழியர்களிடம் மதபோதனையில் ஈடுபட்டார். அங்கு இவர் வரைந்த ‘தி பொட்டேட்டோ ஈட்டர்ஸ்’ ஓவியம் உலகப்புகழ் பெற்றது.

# விடுமுறைக்காக வீட்டுக்குச் செல்லும்போது பைபிளை ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மனில் மொழிபெயர்த்தார். இவரது போதனை முறைகள் தேவாலய நிர்வாகத்துக்கு பிடிக்காததால், இவரது பதவி பறிக்கப்பட்டது. பிரஸல்ஸ் நகருக்கு சென்றார். மனம்போன போக்கில் வாழ்ந்தார்.

# மற்றதைவிட ஓவியம்தான் தனக்கு ஏற்றது என 33 வயதில் முடிவெடுத்தார். ஆனாலும் வறுமை வாட்டியது. வண்ணம், தூரிகை வாங்கக்கூட காசில்லை. சகோதரன் கொடுக்கும் பணத்தைக் கொண்டு காலத்தை ஓட்டினார். பல வகையான ஓவியங்களைத் தீட்டி ஓவியத் துறையில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கினார்.

# சூரியகாந்திப் பூக்கள் நிறைந்த பூந்தொட்டி ஓவியம் உலகப் புகழ்பெற்றது. இவரது புகழ்பெற்ற பல ஓவியங்கள் இறப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு தீட்டப்பட்டவை. 900 தூரிகை ஓவியங்கள், 1,100 ஆயில் ஓவியங்கள், ஸ்கெட்ச்கள் என மொத்தம் 2,000 ஓவியங்களைத் தீட்டினார்.

# இத்தனை வரைந்தாலும், ஒன்றுகூட விற்பனையாகவில்லை. இவர் தரவேண்டிய வாடகைக்காக ஒரே ஒரு ஓவியத்தை வீட்டு உரிமையாளர் எடுத்துக் கொண்டாராம். ஒருகட்டத்தில் மனச்சோர்வு அதிகமாகி, கத்தியால் காதை அறுத்துக்கொண்டார். காதில் கட்டுப்போட்ட கோலத்தில் தன் உருவத்தை தானே வரைந்தார்.

# மனச்சோர்வால் மனநல மருத்துவமனைக்குப் போவதும் வருவது மாக இருந்தார். சோகம், துயரம், வறுமை தந்த மனச்சோர்வுடன் போராடிவந்த ஓவிய மேதை வான் கோ 1890 ஜூலையில் 37-வது வயதில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

# வாழ்ந்தபோது அவரது ஓவியங்களை மதிக்காத உலகம், மறைவுக்குப் பிறகு அவற்றை பொக்கிஷமாக கொண்டாடிப் போற்றியது. உலகில் மிக அதிக மதிப்புள்ளதாக இவரது ஓவியங்கள் கருதப்படுகின்றன. நியூயார்க்கில் 1990-ல் நடந்த ஓவிய ஏலத்தில் இவரது ஒரு ஓவியம் அதிகபட்சமாக 10 கோடி டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
வின்சென்ட் வான் கோ

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

10

பாப்பா உமாநாத் 10

வலைஞர் பக்கம்
10

மே.வீ.வேணுகோபாலன் 10

வலைஞர் பக்கம்
10

ஹோமி சேத்னா 10

வலைஞர் பக்கம்
x