Last Updated : 27 Sep, 2021 09:45 AM

 

Published : 27 Sep 2021 09:45 AM
Last Updated : 27 Sep 2021 09:45 AM

திருக்குறள் கதைகள் 38 - 39: தானம்

குறள்கதை 38: கற்பு

கே.பி.சுந்தராம்பாள் ஒளவையாராகத் திரைப்படத்தில் வாழ்ந்த பெருமைக்குரியவர். 1908-ல் கொடுமுடியில் பிறந்தவர். கரூரில் உள்ள அம்மா வழி பாட்டி வீட்டுக்கு ரயிலில் போகும்போது தன் தெய்வீகக் குரலில் பாட ரயில் பயணிகள், சிறுமியின் பாடலைக் கேட்டு கைதட்டி வரவேற்றார்கள்.

1917-ல் வேலுநாயர் நாடகக்குழு கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது. தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆசிரியர். 64 நாடகங்கள் எழுதி தமிழ்நாட்டில் 50 ஆண்டுகள் மேடையில் ஆட்சி செய்தவர் அவர். பிறவி மேதையான கே.பி.எஸ். அந்த சிறுவயதிலேயே ஆசிரியரைக் கவர்ந்து பாலபார்ட் (சிறுவர் வேடம்), ஸ்ரீபார்ட் (பெண்கள் வேடம்) ராஜபார்ட் (ஆண்கள் வேடம்) மூன்று வேடங்களிலும் ரசிகர்களை தன் கானத்தால் சொக்க வைத்தவர்.

எஸ்.ஜி. கிட்டப்பா -கே.பி.சுந்தராம்பாள்

1926-ல் இலங்கை சென்று மைக் வசதி இல்லாத காலத்தில் 10 ஆயிரம் பேரை வசியப்படுத்தினார். 1906-ல் செங்கோட்டையில் பிறந்து, சிறுவயதிலேயே சகோதரர்களுடன் நாடக மேடைகளில் நடித்து, பாடிக்கொண்டிருந்த எஸ்.ஜி.கிட்டப்பா இலங்கை சென்றார். ஸ்பெஷல் நாடகங்களில் ஸ்கிரிப்டில் இல்லாத வசனங்களை நினைத்தவுடன், சவால் விட்டுப் பேச வேண்டும். பாடவேண்டும்.

எஸ்.ஜி. கிட்டப்பாவை யாரும் எட்ட முடியாது என்ற போது உச்சஸ்தாயியில் பாடி அவரையே மிரட்டினார் கே.பி.எஸ். 1927-ல் இருவருக்கிடையில் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொண்டனர். கிட்டப்பா பிராமணர். அம்மா வேளாளக்கவுண்டர் இனம். ஊர் சென்றவரை வீட்டார் கட்டாயப்படுத்தி இன்னொரு திருமணம் செய்து வைத்து விட்டனர். கிட்டப்பா மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 11 நாளில் இறந்துவிட்டது. கிட்டப்பா திரும்பிப் பார்க்கவில்லை.மூன்றாண்டு பிரிந்து வாழ்ந்து, கடைசி மூன்றாண்டு சேர்ந்து வாழ்ந்தனர். மதுப்பழக்கம், உடல்நிலையை மோசமாக்கிட, 1933-ல் கிட்டப்பா மரணமடைந்தார். 1927-ல் திருமணம் 1933-ல் மண வாழ்க்கை முடிந்து விதவைக் கோலம்.

வெள்ளைப்புடவை, விபூதியுமாய் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த கே.பி.எஸ், திரும்பவும் கலைப் பணியாற்ற சத்தியமூர்த்தி- காமராஜரின் அரசியல் குரு -கல்கத்தா ஹசன்தாஸ் படத்தில் நடிக்க வற்புறுத்தினார். பிற ஆண்களைத் தொட்டு நடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறேன் என்றார். ‘நந்தனார்’ படத்தில் ஆண் வேடமேற்று நீங்கள் நடிக்கிறீர்கள். இதில் யாரையும் தொட வேண்டியதில்லை என்று சொல்லி 1935-ல் ஒரு லட்சம் சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்தனர்.
1940-களில் விடுதலைப் போராட்ட காலத்தில் தென்னாட்டிற்கு காந்தி வந்தால் கூட்டம் சேர்க்க கே.பி.எஸ். அவர்களை ஒரு மணி நேரம் பாடச்சொல்வார்கள். கூட்டம் முடிந்து காந்தி கே.பி.எஸ்., வீட்டில் உணவருந்தச் சென்றார். தண்ணீர் குடிக்க காந்திக்கு வைத்திருந்த வெள்ளி டம்ளரை காந்தி கேட்க, சந்தோஷமாகக் கொடுத்தார் கே.பி.எஸ். அதை அங்கேயே ஏலம் விட்டு வந்த காசை கட்சி நிதியில் சேர்த்துக் கொண்டார்.

காரைக்கால் அம்மையார்

1953-ல் வெளிவந்த ஜெமினி ஒளவையாரில் 6 ஆண்டுகள் நடித்ததற்காக வாசன் ரூ.4 லட்சம் சம்பளம் கொடுத்தார்.காமராஜ் மந்திரிசபையில் 1958-ல் சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1964-ல் கலைஞர் வற்புறுத்தலில் ‘பூம்புகார்’ படத்தில் கவுந்தி அடிகள் வேடத்தில் நடித்தார்.

1965 முதல் திருவிளையாடல், கந்தன் கருணை, திருமலை தெய்வம், காரைக்கால் அம்மையார் என்று ஏ.பி.என் தனது புராணப்படங்களில் அவரைப் பயன்படுத்தி பெருமை சேர்த்தார். தொடர்ந்து 1968-ல் கொடுமுடியில் சொந்த தியேட்டர் கட்டி கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மூவரையும் திறப்பு விழாவுக்கு அழைத்தார்.

சென்னை தியாகராய நகர் இந்தி பிரச்சார சபா பக்கத்தில் 18 கிரவுண்ட் இடம் வாங்கினார். அதில் தனது வழிகாட்டியாக இருந்த சத்தியமூர்த்தி தேர்தலில் நிற்க சென்னையில் அவருக்குச் சொந்த இடம் இல்லை என்று தெரிந்ததும் அதில் 2 கிரவுண்ட் நிலத்தை இனாமாக எழுதிக் கொடுத்தார்.

1970-ல் பத்மஸ்ரீ பட்டம் வாங்கினார். 1972-ல் காரைக்கால் அம்மையார் படத்தில் அவர் பாடி நடித்தபோது, அந்த 6 நிமிடப் பாடலுக்கு சிவன்-பார்வதியாக நானும் ஸ்ரீவித்யாவும் நடனம் ஆடியது என் பிறவியில் நான் பெற்ற பேறு.

12 படங்களில் மட்டுமே நடித்தார். 260 பக்திப் பாடல்கள் பாடினார்.
‘தனித்திருந்து வாழும் மெய்த்தவமணியே!’, ‘ஞானப்பழத்தைப் பிழிந்து..’
‘மயிலேறும் வடிவேலனே!’, ‘தகதகதக தகதகதக என ஆடவா..’ சாகாவரம் பெற்ற பாடல்கள்.

24.09.1980-ல் இறுதி மூச்சு அடங்கும் வரை, செய்து கொண்ட சத்தியத்தின்படி பிற ஆடவரைத் தொடாமல் வாழ்ந்து சரித்திரம் படைத்தார்.

இவரைப் போன்ற பெண்களை பெருமைப்படுத்த வள்ளுவர் எழுதிய குறள்:
‘பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்’.

---
குறள் கதை 39: தானம்

1979-ல் எனது நூறாவது படம் வெளியானபோது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் தொடங்கி வைத்த சிவகுமார் கல்வி அறக்கட்டளை பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதல் 3 இடங்களைப் பிடிக்கின்ற மாணவர்களுக்கு 40 வருடங்களாகப் பரிசு கொடுத்து வருகிறது. 1980-ல் பரிசுத்தொகை ரூ.2250, 25 ஆண்டு என் சுயசம்பாத்தியத்தில் அதை ரூ.50 ஆயிரமாக படிப்படியாக உயர்த்தினேன்.

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 1979


25-ம் ஆண்டு பரிசளிப்பு விழாவில் வேலூர் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவன் ரஜினி பரிசு வாங்கினான். ஊசி பாசி விற்கும் நாடோடி இனத்தைச் சேர்ந்த மாணவன். அப்பா இறந்து விட்டார். அம்மா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். பெரியம்மாதான் இந்த இளைஞனை எடுத்து வளர்த்திருக்கிறார்.

திறந்தவெளியில் அதிகாலை காலைக்கடனை முடித்து, தெருக்குழாயில் குளித்து, தெரு விளக்கொளியில் படித்தவன். ஓலைக்குடிசை மழை வந்தால் ஒதுங்கவும், இரவு படுக்கவும் மட்டுமே பயன்பட்டது.

ஐயாயிரம் ரூபாய் பரிசுத்தொகையைப் பெற்றுக் கொண்டு ஏற்புரையில் அவன் பேசினான்:

‘‘எனக்கு இரண்டு சட்டை, இரண்டு அரை டிராயர்தான் இருக்கு. ஒன்று பின்புறம் கிழிந்திருக்கும். வகுப்பில் எப்போதும் நான்தான் முதல் மாணவன். பரிசு வாங்க பள்ளி விழாவில் மேடை ஏறும்போது இடதுகையால் பின்புறம் உள்ள கிழிசலை மறைத்துக் கொண்டு வலது கையால்தான் பரிசை வாங்குவேன். நேற்று இன்னொரு நடிகர் பரிசு கொடுத்தார். இன்று நீங்கள் பரிசு கொடுத்துள்ளீர்கள். இது எனக்கு அதிகம். எங்கூட படிக்கற பொண்ணுங்க. 4 பேர் கிழிஞ்ச பாவாடை, ஜாக்கெட் போட்டுட்டு வர்றாங்க. அவங்களுக்கு இந்தப் பணத்தில் புதுத்துணி வாங்கி குடுத்திடப் போறேன்...!’’ என்றான். அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டோம்.

25ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

வறுமையில் வாடுவோருக்குச் செய்வதே உண்மையான தானம் என்கிறார் வள்ளுவர்:
‘வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றுஎல்லாம்
குறி எதிர்ப்பை நீரது உடைத்து’

--
கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x