

சமூக அங்கீகாரத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மூன்றாம் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உணர்வுபூர்வமாக பேசியுள்ள குறும்படம் 'மனம்'. ராடன் குறும்படப் போட்டியில் பங்கேற்றுள்ளது.
வாழ்வில் எல்லாருக்கும் எல்லாவித வசதிகளும் வாழ்வும் கிடைத்துவிடுவதில்லை. எல்லாருக்கும் எல்லாவித மகிழ்வும் கொண்டாட்டமும் அமைந்துவிடுவதும் இல்லை.
சமூக அங்கீகாரம் மட்டுமல்ல உணர்வுரீதியாகவும் மூன்றாம் பாலினத்தவர் எதிர்கொள்ளும் வலிகள் புறக்கணிக்கப்படும் வாதைகள் எண்ணிலடங்காதது. அவர்கள் வசிக்கும் இடம் குப்பமாகவே இருந்தாலும்கூட குழந்தைகளை அவர்களிடம் அண்டவிடாத தாய்மார்களும் அங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.
கொஞ்சுவதற்கு ஒரு குழந்தைகூட கானல்நீரான அவர்கள் வாழ்வில் ஒரு குழந்தை வந்தால் எப்படியிருக்கும்? மனம் குறும்படம் இந்த சூழ்நிலையை மிக மிக அற்புதமாக வடித்துத் தந்துள்ளது.
இத்தகையதொரு படத்தை தயாரிக்க முன்வந்த பாலமுருகன் ஜி. ஜெயக்குமாரின் முயற்சி பாராட்டத்தக்கது.
மூன்றாம் பாலினத்தவர்களாக நடித்துள்ள நேகா, ஷிவானி இருவரது உச்சரிப்பும் உடல்மொழிகளும் விளிம்பில்நின்றுகொண்டு வெளிச்சத்தைத் தேடுபவர்களின் வாழ்வை நம் கண்முன் நிறுத்திவிட்டது.
நவீன் குமாரின் கேமரா குறும்படத்தை ஒரு முழுநீளப் படத்தை பார்க்கமுற்படுகிறோமோ என உணரசெய்துவிட்டது. விஜய் ஆனந்தின் பின்னணி இசையும் அருண் வரதனின் படத்தொகுப்பும் சிறந்த முயற்சிக்கான ஊன்றுகோல்களாகத் திகழ்கின்றன. பாலாஜியின் திரைக்கதைக்கு அருண் பிரகாஷின் வசனம் காயத்தை ஒற்றியெடுத்த சுகம்.
சிலருக்கு கைக்கெட்டும் தூரத்தில் கிட்டிய வசந்தம் வேறுசிலருக்கோ கானல் நீராகவே கடைசிவரை கண்ணெதிரே நிழலாடிக்கொண்டிருப்பது இயற்கைதானே. அந்தக் குழந்தையும் அவர்களுக்கு சொந்தமில்லாமல் போவதை உரிய தர்க்கத்தோடு சொல்லியுள்ளார் இயக்குநர் எம்.பாலாஜி
>மனம் குறும்படத்தை காண....