

அன்னை (The Mother) என்று போற்றப்படும் ஆன்மிக வழிகாட்டியான மிர்ரா அல்ஃபாஸா (Mirra Alfassa) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் (1878) பிறந்தவர். மிர்ரா அல்ஃபாஸா என்பது இயற்பெயர். சிறு வயதிலேயே ஆன்மிக அனுபவங்களைப் பெறத் தொடங் கினார். ‘நான் இந்த உலகத்தை சார்ந்தவள் அல்ல என்பதை 5-வது வயதிலேயே அறிந்திருந்தேன். என் ஆன்மிக சாதனை அப் போதே தொடங்கிவிட்டது’ என குறிப்பிட்டுள்ளார்.
* வீட்டிலும், பின்னர் ஒரு தனியார் பள்ளியிலும் கல்வி பயின்றார். சிறந்த ஓவியராகத் திகழ்ந்தார். பியானோ வாசிப்பதிலும் வல்லவர். அல்ஜீரியாவில் மறையியல் கலையில் சிறந்து விளங்கிய தம்பதியிடம் பயிற்சி பெற்றார். தத்துவம் பயின்றார்.
* தத்துவம் குறித்த 800 நூல்களை ஒரே ஆண்டில் படித்து முடித்தார். விவேகானந்தரின் ‘ராஜயோகம்’ நூலைப் படித்ததன் மூலம் கிழக்கத்திய நாடுகளின் யோகமுறை குறித்து அறிந்தார். தன்னைப் போன்ற ஆன்மிகத் தேடல் கொண்டவர்களை இணைத்து ‘தி நியூ ஐடியா’ என்ற அமைப்பை உருவாக்கினார்.
* இந்திய குரு ஒருவர் தனக்கு வழிகாட்டியாக வந்து உதவுவதாக கனவில் உணர்ந்தார். அவரை ‘கிருஷ்ணா’ என்று அழைத்தார். 36-வது வயதில் பாண்டிச்சேரிக்கு வந்தார். முதன்முதலாக அரவிந்தரைக் கண்டார். தன் கனவில் அடிக்கடி வந்த ‘கிருஷ்ணா’ இவரே என்பதையும் உணர்ந்தார்.
* அரவிந்தருடன் இணைந்து ‘ஆர்யா’ என்ற இதழைத் தொடங்கினார். 1915 முதல் 1920 வரை ஜப்பானில் தங்கியிருந்தார். மீண்டும் இந்தியா வந்தவர் இறுதி வரை இங்கேயே இருந்தார்.
* பாண்டிச்சேரியில் அரவிந்தருடன் இணைந்து பூரண யோகப் பயிற் சியை மேம்படுத்தினார். 1926-ல் அரவிந்தரின் பெயரில் ஆசிரமம் நிறுவினார். இந்திய இளைஞர்களுக்குப் புதுமையான முறையில் கல்வி வழங்க வேண்டும் என்பது அரவிந்தரின் விருப்பம். அதை பூர்த்தி செய்வதற்காக கல்வி மையங்களைத் தொடங்கினார்.
* இவரது ஆன்மிக, அறப்பணிகளின் காரணமாக ‘அன்னை’ என்று போற்றப்பட்டார். அரவிந்தரின் மறைவுக்குப் பிறகு, அவரது பணிகளைத் தொடர்ந்தார். உடற்கல்வி நிலையங்கள், மதர்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி, அரவிந்தோ இன்டர்நேஷனல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டன. ஆசிரமத்தின் கிளை டெல்லியிலும் தொடங்கப்பட்டது.
* இவரது பிரார்த்தனை, தியானம் குறித்த குறிப்புகள், சொற்பொழிவுகள், போதனைகள், கட்டுரைகள், பொன்மொழிகள், கடிதங்கள் மற்றும் தனிப்பட்ட நினைவுக் குறிப்புகள் அனைத்தும் திரட்டப்பட்டு மொத்தம் 17 தொகுதிகளாக வெளிவந்தது. இவரது 22 ஆண்டு கால ஆன்மிக செயல்பாடுகளை ‘தி மதர்ஸ் அஜெண்டா’ நூல் விவரிக்கிறது.
* மனதுக்கு அப்பாற்பட்ட பிரக்ஞையை மேம்படுத்திக்கொள்ள விழையும் அனைவரும் வாழ்வதற்கான புது விதமான நகரத்தை உருவாக்க விரும்பினார். குஜராத்தில் நிலம் வாங்கப்பட்டு அதற்கு ‘ஓம்புரி’ என்று பெயரிடப்பட்டது. மதக் கோட்பாடுகளைத் தாண்டி மனிதகுல ஒருமைப்பாட்டை உருவாக்கும் நோக்கில் பாண்டிச்சேரிக்கு அருகே ‘ஆரோவில்’ நகரம் அமைக்கும் திட்டத்தை 1968-ல் தொடங்கிவைத்தார்.
* ‘அன்னை’ மிர்ரா அல்ஃபாஸா 95-வது வயதில் (1973) மறைந்தார். இவர் பல அற்புதங்களை புரிந்துள்ளதாக கூறும் பக்தர்கள், அன்னை தங்களுக்கு தற்போதும் அன்பு, அமைதி, சாந்தி, சமாதானம் வழங்கிவருவதாக கூறுகின்றனர்.