

சரியாக 101 ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாளில் (1915 பிப்ரவரி 8) வெளியானது ‘பர்த் ஆஃப் எ நேஷன்’ எனும் மவுனப் படம்.
டி.டபிள்யூ. கிரிஃபித் இயக்கிய அத்திரைப்படம்தான் அமெரிக்காவில் வெளியான 12 ரீல் கொண்ட முதல் படம். அந்தக் காலத்திலேயே மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய படமும்கூட.
தாமஸ் டிக்ஸன் ஜூனியர் எழுதிய ‘தி கிளான்ஸ்மேன்’ எனும் நாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், கருப்பின மக்களைக் கீழ்த்தரமாகச் சித்தரித்ததுடன், அவர்களைக் கொன்றழித்த ‘கு கிளக்ஸ் கிளான்’ எனும் நிறவெறி அமைப்பைச் சேர்ந்தவர்களை நல்லவர்களாகவும் காட்டியது.
இதே தலைப்பில், இந்த ஆண்டு ஒரு திரைப்படம் வெளியாகவிருக்கிறது. கருப்பின அடிமை வீரர் நாட் டர்னரைப் பற்றிய இப்படம், பழைய படம் தந்த கசப்பு உணர்வுகளுக்கு மாற்றாக உருவாகியிருப்பதாக ஹாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.