Last Updated : 10 Sep, 2021 09:02 AM

 

Published : 10 Sep 2021 09:02 AM
Last Updated : 10 Sep 2021 09:02 AM

திருக்குறள் கதைகள் 28 - 29: தைரியம்

சுதந்திரத்திற்காக நம் நாட்டில் போராடிய முதல் பெண்மணி ஜான்சிராணி என்று படித்திருப்போம். ஜான்சி ராணி பிறந்தது 1827-ம் ஆண்டு.

இந்த ஜான்சி ராணிக்கு 77 ஆண்டுகள் முன்னால் பிறந்தவர் வெள்ளையனை எதிர்த்து தமிழ்நாட்டில் போரிட்ட முதல் பெண்மணி வேலுநாச்சியார்.

சரியாகச் சொல்வதென்றால் வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டு ஜெயித்த இந்தியாவின் முதல் வீராங்கனை வேலுநாச்சியார்தான்.

1730-ல் ராமநாதபுரம் ராஜாசெல்லமுத்து சேதுபதியின் மகளாகப் பிறந்தார். சிறுவயதிலேயே தமிழ், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு- என 6 மொழிகள் கற்றுக் கொண்டவர்.

வில்வித்தை, வாள்வித்தை, சிலம்பம், குதிரையேற்றம் எல்லாம் கற்றுக் கொண்ட வீரமங்கை.

சிவகங்கை ராஜாமுத்து வடுகநாதருக்கு இவரை மணம் முடித்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

கி.பி.1772-ல் சிவகங்கை மீது வெள்ளையர் போர் தொடுத்தனர். நேரடியாக சண்டை போடுவதற்குப் பதிலாக காளையார் கோவிலில் நாம் சமரசம் பேசலாம் வாருங்கள் என்று முத்து வடுகநாதனை அழைத்தனர்.

பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தபோது- கவர்னர் பாஞ்சோர் ஏற்பாட்டின்படி- ராணுவத்தினர் நயவஞ்சகமாக ராஜாவை சுட்டு வீழ்த்தினர்.

சிங்கம் போல சிலிர்த்து எழுந்தார் வேலுநாச்சியார். மருது சகோதரர்கள் வேலுநாச்சியாரின் சேனாதிபதிகளாக அப்போது இருந்தனர்.

எதிரி பலசாலியாக இருக்கும்போது நாம் மோதுவது விவேகம் அல்ல; சரியான சூழ்நிலை அமையும் வரை காத்திருப்போம் என்று சொன்னார்கள்.

காடுகளிலேயே தலைமறைவாக சுற்றியபோது ஒரு நாள் கடும்வெயில். தாகம் தொண்டையை அடைத்தது.

அப்போது ஒரு குடிசையில் இருந்த ஹரிஜனப் பெண் உடையாள், வேலுநாச்சியாரை அடையாளங்கண்டு கண்ணீர் வடித்து குடிக்க தண்ணீர் கொடுத்து தாகசாந்தி செய்தாள்.

அந்தப் பெண்மணி குடிசையில் 4 நாள் தங்கி விட்டு மீண்டும் ஓர் இரவில் ஹைதர் அலியைச் சந்திக்க திண்டுக்கல் புறப்பட்டுப் போனார்கள்.

உடையாள் வேலுநாச்சியாருக்கு அடைக்கலம் கொடுத்ததை எப்படியோ மோப்பம் பிடித்த வெள்ளை சிப்பாய்கள் -அவளை எவ்வளவோ மிரட்டி சித்ரவதை செய்தும் வேலுநாச்சியார் பற்றி உடையாள் வாய் திறக்கவேயில்லை.

இவளது வைராக்கியத்தைக் கண்டு எரிச்சலடைந்த வெள்ளையர் அவளது இரண்டு கரங்களையும் வெட்டி எறிந்து விட்டனர். தலையை சீவி விட்டனர்.

வேலுநாச்சியார்

ஹைதர் அலியை திண்டுக்கல் வட்டாரத்தில் சந்தித்த வேலுநாச்சியாரும், மருது சகோதரர்களும் 8 ஆண்டுகள் அங்கு தங்கி குதிரைப்படை -காலாட்படையினருக்கு பயிற்சியளித்து சிவகங்கை நோக்கி படையுடன் புறப்பட்டனர்.

1780-ல் நேரடியாக வெள்ளையரோடு மோதாமல் 18 பாளையக்காரர்களை சிவங்கையை சுற்றி வட்டமாக படையுடன் வரச் செய்தார். ராஜராஜேஸ்வரி கோவிலில்தான் வெள்ளையர் ஆயுதக்கிடங்கு இருந்தது. எல்லாவகை வெடி மருந்துகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

நவராத்திரி தினம் கோயிலுக்குள் பெண்கள் மட்டுமே அனுமதி. நூற்றுக்கணக்கான பெண்கள் கைகளில் விளக்கு ஏந்திச் செல்கிறார்கள். குயிலியும் உள்ளே விளக்கோடு செல்கிறாள்.

உள்ளே சென்றதும் அத்தனை பெண்களும், தாங்கள் கொண்டு சென்ற விளக்கிலிருந்த எண்ணெயை குயிலி தலைமீது ஊற்றினர். நெருப்பு பற்ற வைத்ததும் கண் இமைக்கும் நேரத்தில் குயிலி ஆயுதக்கிடங்கில் குதிக்க, அணுகுண்டு வெடித்தது போல் ஒரு சத்தம். கோயிலே அதிர்ந்தது.

வேலுநாச்சியாரின் ராஜதந்திரம் தெரிந்த கவர்னர் பாஞ்சோர், நீங்கள் ஆட்சி செய்யும் வரையிலும் சிவகங்கை மண்ணிலே கால் வைக்க மாட்டோம் என்று சத்தியம் செய்து கொடுத்தனர். வேலுநாச்சியார் வாழ்ந்த வரை அவர்கள் அந்த மண்ணில் கால் பதிக்கவில்லை.

ஜெயிப்பதற்கான வழியும், சரியான நேரமும் அமைந்து விட்டால், தைரியம் ஒன்றே போதும் எதிரியை வீழ்த்த என்று சொல்கிறார் வள்ளுவர்.

‘‘அஞ்சாமை அல்லால் துணை வேண்டா- எஞ்சாமை

எண்ணி இடத்தான் செயின்’’

-----

குறள்கதை 29: இல்லாள்

அப்பா 100 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் டாக்டர். மனோகர் தேவதாஸ் பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி. அமெரிக்கன் கல்லூரியில் படித்தவர். சுயமாக ஓவியம் கற்று மதுரையின் அழகை புகைப்படங்கள் எடுத்து கட்டடக்கலை நிபுணர் போல PEN & INK-ல் வரைந்து சாதனை புரிந்தவர்.

சென்னையில் புரொபசர் வேலை. பி.ஏ.,ஃபைன் ஆர்ட்ஸ் படித்து, பி.எட் முடித்து ஆசிரியராகப் பணிபுரிந்த மகிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மாதம் ஒரு முறை காரில் பயணம் செய்து 450 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் மதுரை சென்று பெற்றோரைப் பார்த்து விட்டுத் திரும்புவார்கள்.

1972-ல் ஒரு நாள் அப்படி காரில் கிளம்பியவர்கள் விழுப்புரம் பகுதியில் சாலையோரக் கடையில் மாலை சிற்றுண்டி அருந்தினார்கள்.

மகிமா நன்றாக கார் ஓட்டுவார். கொஞ்ச நேரம் நான் டிரைவிங் செய்கிறேன் என்று மகிமா காரை எடுத்தார். இவர்களுக்கு முன்னால் மணல் லாரி ஒன்று போய்க் கொண்டிருந்தது. குடித்தவன் தள்ளாடி நடப்பது போல ரோட்டின் இடதுபக்கம், வலது பக்கம் என்று பாம்பு நெளிவது போல லாரி சென்றது. கிளீனர் முதன் முதல் வண்டி ஓட்டுகிறான் போலும்.

மனோகர்தேவதாஸிற்கு புத்தகம் பரிசு

என்ன ‘ஹார்ன்’ அடித்தும் வழி விடுவதாகத் தெரியவில்லை. லாரி இடதுபுறமிருந்து வலதுபுறமாகப் போகும்போது, கியரை மாற்றி ஓவர் டேக் செய்ய வேகமெடுத்தார் மகிமா.

கண் இமைக்கும் நேரத்தில் வலது பக்கம் போன லாரி திடீரென்று இடது பக்கம் வந்து கார் மீது மோத -அப்படியே ஆகாயத்தில் பறந்து பள்ளத்தில் விழுந்தது கார்.

மனோகர் தேவதாஸூக்கு வெறும் சிறாய்ப்புகள்தான். கார் ஒரு பக்கம் கிடக்கிறது. உள்ளே மகிமாவை காணோம். தேடிப் போனால் அடர்ந்த புதருக்குள் மகிமா.

பெரிதாக ரத்தக்காயம் ஏதுமில்லை. ஆனால் மயக்கமாக இருந்தார். ரோட்டில் போன கார் ஒன்றை நிறுத்தி, நிலமையை விளக்கி, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கொண்டு போனார்கள். பரிசோதனை எல்லாம் முடிந்தது.

அதிர்ச்சியான செய்தியை டாக்டர்கள் சொன்னார்கள். ‘மகிமாவுக்கு (க்வாட்ரிப்ளிஜியா) -கழுத்துக்கு கீழே கைகால்கள் செயல்படாது. சிறுநீர், மலம் கழிப்பது உணர முடியாது. நடமாட்டம் முடிந்து விட்டது. சாப்பிடுவார். பேசுவார். பார்ப்பார். கேட்பார். ஆனால் உடல் செயல்பாடு இனிமேல் இராது!’ என்ற குண்டைத்தூக்கிப் போட்டனர்.

தாங்க முடியாத அதிர்ச்சி. சொல்ல முடியாத வேதனை. மருத்துவமனையிலிருந்து வெளியே வரும்போது, தொடர்ந்து செயல்படாமல் படுக்கயைிலேயே இருந்தால் படுக்கைப் புண் (BED SOUR) வந்து விடும். தாங்க முடியாத துர் நாற்றம் வீசும். அதைத் தாங்குவது கடினம் என்று டாக்டர்கள் எச்சரித்திருந்தனர்.

ஓவியர் மணியம் செல்வம், மனோகர் தேவதாஸ்

அந்த வினாடியே சத்தியம் செய்து கொண்டார். என் மகிமாவை நான் எவ்வளவு சுத்தமாக வைத்துக் கொள்வேனா அப்படி கடைசி வரை பாதுகாப்பேன் என்று முடிவெடுத்தார்.

உதவியாளரை வைத்துக் கொண்டு மகிமாவைக் குளிப்பாட்டி, உடை அணிவித்து, டைனிங் டேபிள் அருகே கொண்டு வந்து உணவு ஊட்டி, தூங்க வைக்கும் வரை ஒரு தாயின் நிலையில் இருந்து கவனித்துக் கொண்டார்.

ஓவியம் தீட்டும் இவருக்கு கண்ணில் ‘ரெட்டினா’ பிரச்சனை வந்து கொஞ்சம் கொஞ்சமாக பார்வை குறைந்து கொண்டே வந்தது. மதுரை வரலாற்றை மகிமா படித்து சொல்வார். பூத கண்ணாடி உதவியுடன் இவர் ஓவியம் தீட்டுவார்.

மகிமா படத்துக்கு மல்லிகை மாலை

2008- மார்ச் மாதம் கிரவுஞ்ச பறவைகளில் ஒன்று புறப்பட்டுப் போய் விட்டது.

நானும், ஓவியர் மணியம் செல்வமும் மனோகர் தேவதாஸைப் பார்க்கப் போனோம். பார்வை முழுமையாக இழந்து விட்ட நிலையிலும் வாசலில் நிற்று எங்களை வரவேற்று உள்ளே அழைத்துப் போனார். மகிமாவுக்கு மதுரை மல்லி பிடிக்கும். அவள் படத்துக்கு சிவகுமார் மாலை அணிவிக்க மதுரை மல்லி வாங்கி மாலை கட்டி வைத்துள்ளேன். அந்த மாலையை என் மகிமா படத்துக்குச் சூட்டுங்கள் என்றார். கலகலப்பாக சிரித்துப் பேசி, போண்டா, பஜ்ஜியெல்லாம் கொடுத்து உபசரித்தார். புறப்படும்போது ‘நீங்கள் இருங்கள்; நாங்கள் போய் வருகிறோம்!’ என்றோம்.

மனோகர் தேவதாஸ் ஓவியம்

இல்லை. வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை வாசல் வரை சென்று அனுப்ப வேண்டும் என்று என் மகிமா சொல்லியிருக்கிறாள். அதை நான் மீற முடியாது என்று தட்டுத்தடுமாறி வெளிவாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

13 ஆண்டுகள் ஓடி விட்டன. இன்றும் மகிமா நினைவில் -இருண்ட உலகில் - பெருமிதத்தோடு வாழ்கிறார் மனோகர் தேவதாஸ். இந்த அபூர்வத்தம்பதிக்கு வள்ளுவரின் குறள்:

‘அன்பும் அறனும் உடைத்தாயின்- இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது’

----

கதை பேசலாம்
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x