

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வர அரசியல்வாதிகளுக்கு யோசனை சொல்ல கிளம்பிவிட்டார் நம் விதூஷகர் தெனாலிராமன். தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பாக ஆயிரக்கணக்கானவர்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதில் தகுதியானவர்களை தேடிப் பிடிக்க அம்மாவுக்கு அவர் சொல்லும் யோசனைகள்:
தேர்தல் சீட் உங்களோட ஒட்டணும்னா அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டணும்னு ஒரு போட்டி வைக்கலாம். ஒரு மணி நேரத்தில் அதிக ஸ்டிக்கர்களை ஒட்டுபவர்களுக்கு சீட். தேர்வுக்கு தேர்வும் ஆச்சு.. கூடவே விளம்பரமும் கிடைக்கும்.
கெயில், ஜெயில், பெயில் எதுவாக இருந்தாலும் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் என்று கிளம்பிவிடுவார்கள் கழகக் கண்மணிகள். எனவே, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு அலகு குத்துதல், தீச்சட்டி ஏந்துதல், மண்சோறு சாப்பிடுதல் போன்ற பிரார்த்தனை போட்டிகளை நடத்தலாம். வேட்பாளர்கள் கிடைப்பதோடு, கடவுள் அருளும் கிடைக்கும்.
கண்கலங்குவது, ஆனந்தக் கண்ணீர் வடிப்பது, கதறி அழுவது, என்று அழுவதில் பல வகைகள். இந்த கலைகள் தெரிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கொள்ளலாம். ஓபிஎஸ் மேற்பார்வையில் இதற்கு ஒரு மாஸ் கதறல் போட்டி வைக்கலாம்.
வில்லைவிட இன்னும் அதிகமாக முதுகை வளைத்து இரு கைகளையும் சேர்த்து பாதஹஸ்த முதுகாதி குட்டிக்கரணாசனம் போடத் தெரிந்தால், வேறு கேள்வியே கேட்காமல் சீட் கொடுத்துவிடலாம்.
மேஜை முன்பு உட்கார வைத்தாலே தட்டோ தட்டு என்று தட்டத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது மிக அவசியம். அதிக நேரம் தட்டுபவர்களுக்குத்தான் சீட்.
கட்சித் தலைமைக்கு பட்டம் கொடுக்காமல் எம்.எல்.ஏ பட்டத்தை பெறமுடியுமா என்ன? தலைமையை குளிர்விக்கும் வகையில் ‘சிறை மீண்ட சிந்தனைச் செல்வி’, ‘உணவு தந்த உத்தமச் செல்வி’, ‘பகையழிக்கும் படைத் தலைவி’ என்று வித்தியாசமான அடைமொழிகளை வாரி வழங்குபவர்களுக்கு சீட்களை ஒதுக்கலாம்.