Published : 28 Aug 2021 10:12 PM
Last Updated : 28 Aug 2021 10:12 PM

கீதாரிகள் தலைமைப்பண்பு மிக்கவர்கள்: எழுத்தாளர் சோ.தர்மன் பேச்சு 

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இன்று நூலாசிரியர்கள் பெரி.கபிலன், க.சி.பழனிக்குமார் ஆகியோர் எழுதிய ‘கீதாரிகள் இனவரைவியல்’ எனும் நூலினை சாகித்ய அகாடரி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் வெளியிட்டார்.  

மதுரை 

கீதாரிகள் தலைமைப்பண்பு மிக்கவர்கள் என சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் நூல் வெளியீட்டு விழாவில் பேசினார்.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இன்று மாலையில், நூலாசிரியர்கள் பெரி.கபிலன், க.சி.பழனிக்குமார் ஆகியோர் எழுதிய ‘கீதாரிகள் இனவரைவியல்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தலைமை வகித்து நூலினை வெளியிட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) அ.ரவிச்சந்திரன், வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ப.சிவக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நூலாசிரியர் பெரி.கபிலன் ஏற்புரை வழங்கினார்.

நூலினை வெளியிட்டு எழுத்தாளர் சோ.தர்மன் பேசியதாவது:

கீதாரிகள் சாதாரணமானவர்கள் என நினைத்து விடாதீர்கள். அவர்கள் தலைமைப்பண்பு மிக்கவர்கள். போரில் படையை வழிநடத்தும் அளவுக்கு வலிமை மிக்கவர்கள், தொழில்நுட்பம் மற்றும் நுணுக்கம் தெரிந்தவர்கள். இவர்கள் கலாச்சாரம், பண்பாட்டை கொண்ட ஆதிகுடிகள். விவசாயத்திற்கு அடிப்படை கால்நடைகள். இன்றும் விவசாயம் உயிர்ப்போடு இருப்பதற்கு கீதாரிகளுக்கு முக்கியப்பங்குண்டு. தற்போது ஜல்லிக்கட்டு பற்றி பெருமை பேசுகிறோம். சங்ககாலம் முதல் தற்போது வரை ஜல்லிக்கட்டுக்குரிய காளைமாடுகளை வளர்த்து பாதுகாத்தவர்கள் கீதாரிகள். அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள், பாதுகாக்கப்படவேண்டியவர்கள். தமிழக அரசு யார் யாருக்கோ ஓய்வூதியம் தருகின்றது. ஆனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள கீதாரிகளுக்கும் ஓய்வூதியம் தர வேண்டும். விவசாயத்தையும், விவசாயத்திற்கு

அடிப்படையான கால்நடைகளையும் காத்து நிற்கும் கீதாரிகளையும் அரசு பாதுகாக்க வேண்டும். இதுதொடர்பாக விரைவில் தமிழக முதல்வரை எழுத்தாளர்கள் சந்திக்கவுள்ளோம். அப்போது கீதாரிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அவர்களது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வழிவகை செய்வோம், என்றார்.

இதில், மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவள காப்பு மைய மூத்த ஆராய்ச்சியாளர் மு.மதிவாணன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் எம்.ஜெகதீசன் ஆகியோர் நூல் மதிப்புரை வழங்கினர். நூலாசிரியர் க.சி.பழனிக்குமார் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x