

குறள் கதை 20: மாசிலன்
நம் நாடு சுதந்திரமடைந்திருந்த காலம். 1948-ல் சென்னையிலிருந்து கோவை செல்லும் ரயில். இரவு 2 மணிக்கு சேலம் பக்கத்தில் ரயில் போய்க் கொண்டிருந்தது. ஒரு பெரியவர் டி.டி.ஆரை எழுப்பினார். இந்த நிமிடத்திலிருந்து என் மகன் மைனராக இருந்தவன் மேஜராகி விட்டான். (70 ஆண்டுகள் முன் 12 வயது வரை அரை டிக்கெட்; 13 வயதிலிருந்து ரயிலில் முழு டிக்கெட்) ஆகையினால் சேலம் முதல் கோயம்புத்தூருக்கு முழு டிக்கெட் தாருங்கள்; நான் பணம் தருகிறேன் என்றார்.
அவர்தான் அன்றைய பிளவுபடாத ராஜதானியின் (தமிழ்நாடு -ஆந்திரா- கர்நாடகா -கேரளாவின் சில பகுதிகள் சேர்ந்தது) முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.
1895-ம் வருடம் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி ஓமந்தூரில் முத்துராமரெட்டியார் - அரங்கநாயகி அம்மாவுக்கு மகனாகப் பிறந்தவர். திண்டிவனம் -புதுச்சேரி சாலையில் உள்ளது ஓமந்தூர் சிறு கிராமம். ஆறு வயதில் ஓமந்தூர் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தார். 1905-ல் திடீரென்று அப்பா மரணமடைய, இவர் சித்தப்பா சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் சேர்த்துவிட்டார். அடுத்த ஆண்டே அம்மாவும் மரணமடைய பள்ளிப்படிப்பு அதோடு நின்றுவிட்டது. 8-ம் வகுப்பு படித்த மாணவன் பின்னர் சுயமாக நூல்களை வாங்கிப் படித்து அறிவை வளர்த்துக் கொண்டார்.
15 வயதில் 1910-ல் திருமணம் செய்துகொண்டார். ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்தது. திருமணமான 10 ஆண்டுகளில் 1920-ல் மனைவி இறந்துவிட்டார். அந்தப் பெண் குழந்தையும் இறந்துவிட்டது. கிராமத்தை விட்டு வெளியேறி ஸ்கந்தாஸ்ரமம் என்று ஒரு குடில் அமைத்து துறவி போல வாழ ஆரம்பித்தார். இருந்த ஒரே மகனும் இறந்துவிட 27 ஆண்டுகள் அந்த ஆசிரமத்தில் வாழ்ந்தார்.
1930-ல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு முதன்முதல் சிறை சென்றார். 1932- சட்டமறுப்பு இயக்கப் போராட்டத்தில் 6 மாதம் சிறை தண்டனை அனுபவித்தார். 1939-ல் தனி நபர் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறை. 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் 6 மாதம் சிறை தண்டனை.
தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.பிரகாசம், தமிழ் மக்களுக்கு எந்த திட்டத்தையும் நிறைவேற்றாத -ஆந்திரக்காரராக இருந்ததால் -அவரைப் பதவியிலிருந்து இறக்கிவிட்டு, ஓமந்தூரார் முதல்வராக வேண்டும் என்று காமராஜரும், ராஜாஜியும் விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் மேலிடத்தில் சிபாரிசு செய்தார்கள்.
நான் ஒரு சாதாரண விவசாயி. பெரும் படிப்பு படிக்காதவன். அந்தப் பதவியெல்லாம் வேண்டாம் என்று சொல்லி, திருவண்ணாமலை ரமண மகரிஷியிடம் சென்றார். மக்களுக்கு சேவை செய்ய அரிய வாய்ப்பு, ஏற்றுக்கொள் என்று அவர் சொல்லி அனுப்பினார்.
அதன்பின் 1947 மார்ச் 3-ம் தேதி முதல்வர் பதவி ஏற்றார். தமிழக அரசின் இலச்சினையில் (EMPLEM) கோபுர சின்னத்தையும் சேர்த்து வடிவமைத்தார். மதச்சார்பற்ற அரசில் இந்து கோபுரத்தைச் சேர்க்கலாமா என்று நேருவிடம் புகார் தெரிவித்தனர் சிலர்.
நேரு விளக்கம் கேட்டபோது, திருப்பத்தூரில் ஆண்ட்ரூஸ் ஆதரவுடன் தேவாலயத்தின் மீது இந்து கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதைப் புகைப்படத்துடன் விளக்கி- தமிழக கட்டிடக்கலை கலாச்சாரத்தின் அடையாளம் இந்த கோபுரம் என்று விளக்கம் அளித்தார்.
மடங்கள், ஆதீனங்கள், கோயில் சொத்துகளைச் சிலர் சுரண்டுவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்தார். ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் பூரண மதுவிலக்கைக் கொண்டுவந்தார். ஹரிஜன ஆலயப் பிரவேசத்தைத் தானே முன்னிருந்து நடத்தினார். இந்து சமய அறநிலையத்துறையை அறிமுகம் செய்தார். ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் சேர பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார்.
1949- ஏப்ரல் 6-ல் பதவி விலகி 2 வருடம் முதல்வராக இருந்தது போதும் என்று சொத்துகளை வடலூர் வள்ளலார் மடத்துக்கு எழுதி வைத்து அங்கேயே தங்கிவிட்டார்.
கடைசிக் காலத்தில் நோய்வாய்ப்பட்டு சென்னை சாந்தோமில் உறவினர் வீட்டில் தங்கியிருப்பதை அறிந்த அப்போதைய முதல்வர் கலைஞர், அரசு பொது மருத்துவமனையில் வைத்து ராஜ வைத்தியம் செய்து குணப்படுத்துவதாகச் சொல்லி அழைத்தார்.
இன்றோ, நாளையோ சாகப்போகும் சராசரி மனிதனுக்கு அரசு வரிப்பணத்தில் இயங்கும் மருத்துவமனையிலிருந்து சல்லிக்காசு செலவு செய்வதையும் அனுமதிக்க மாட்டேன். அழைப்புக்கு நன்றி என்று கூறி 1970-ஆகஸ்ட் 25-ம் தேதி விடைபெற்றுக் கொண்டார்.
இவரைப் போன்ற மனிதர்களுக்கு வள்ளுவர் எழுதிய குறள்:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
------
குறள் கதை 21: தெளிந்தான் தெளிவு
நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெயர் போனவர் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி. அவருடைய தயாரிப்பில் வெளிவந்த ‘எதிரொலி’ படத்தில்தான் கே.பாலசந்தருடன் பணியாற்றும் முதல் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ‘குங்குமச் சிமிழில் மாதுளை முத்துகள் கொட்டிக் கிடப்பதென்ன -அதை மங்கலச் சிரிப்பில் மாலைகளாகக் கட்டிக் கொடுப்பதென்ன’ என்ற வாலியின் வரிகளில் நானும் லட்சுமியும் நடித்தோம்.
அதன் பிறகு 1972-ல் 'அன்னை அபிராமி' என்ற பெயரில் கே.ஆர்.விஜயாவை அன்னை அபிராமியாக நடிக்கவைத்து அவரே தயாரித்து அந்தப் படத்தை டைரக்டும் செய்தார். நானும் ஜெயாவும் அதில் ஹீரோ, ஹீரோயினாக நடித்தோம்.
தயாரிப்பு நிர்வாகியாக இருந்த ஒருவர், வேலுமணிக்குத் தெரியாமல் படப்பிடிப்புக்குச் செலவளிக்கும் பணத்தில் கையாடல் செய்வதாக என்னிடம் சிலர் சொல்ல வேலுமணி அண்ணா காதில் போட்டேன்.
என் தோளில் கை போட்டுத் தனியே அழைத்துப் போய், ‘எனக்கு சொந்த ஊர் கோபிச்செட்டிப்பாளையம் என்பது உங்களுக்கு தெரியும். 1954-ல் அண்ணா கதை, வசனம் எழுதி கே.ஆர். ராமசாமி-பத்மினி நடித்த 'சொர்க்க வாசல்' படத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது என்னோடு வந்தவன் சுப்பிரமணி. பக்கத்து வீட்டுப்பையன். 'பதி பக்தி' படத்தில் நானும் ஒரு கூட்டாளி. பீம்சிங்குடன் சேர்ந்த தயாரித்த படம். படப்பிடிப்பு சமயம் சிவாஜி சுட்ட டம்மி தோட்டா, என் தொடையைத் துளைத்துவிட்டது. அதைப் பார்த்து வருத்தப்பட்ட சிவாஜி, என்னைத் தனியே படம் தயாரிக்கச் சொன்னார். 'பாகப் பிரிவினை' முதல் படம். 'பாலும் பழமும்' இரண்டாவது படம். 'பாத காணிக்கை' மூன்றாவது படம்.
காலமாற்றத்தில் அடுத்து சிவாஜியை வைத்துப் படம் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தயாரிப்பு நிறுவனத்தை, மூடிவிடலாம் என்று நினைத்து, புரொடக்சன் ஆட்களுக்கு 3 மாத சம்பளத்தைக் கொடுத்து அனுப்பிக் கொண்டிருந்தேன். சுப்பிரமணிக்கு விஷயம் தெரிந்து, ‘அறியாத வயதில் உங்களோடு ஊரை விட்டு வந்தேன். உங்கள் நிழல் போல இருந்து கொள்கிறேன். என்னை மட்டும் வீட்டுக்கு அனுப்பாதீர்கள் என்று சம்பளம் வாங்காமல் வீட்டு வேலைக்காரன் போல் கூடவே இருந்தான்.
மேலே சொன்ன சிவாஜி படங்கள் 3-க்கும் தயாரிப்பு நிர்வாகி இவன்தான். அதன் பிறகு சூழ்நிலை மாறி எம்.ஜி.ஆர் தொடர்பு ஏற்பட்டு 'பணத்தோட்டம்', 'படகோட்டி', 'சந்திரோதயம்', 'குடியிருந்த கோயில்' என்று பல வெற்றிப் படங்கள் தயாரித்தேன். அதற்கெல்லாம் நிர்வாகியாக வேலை பார்த்தவன் சுப்பிரமணி.
இன்று அவன் பணம் கையாடல் செய்கிறான் என்று குற்றம் சுமத்துகிறார்கள். அப்படியே அவன் கை வைப்பதாக வைத்துக் கொண்டாலும், இத்தனை வருஷமாக நமக்கு வாழ்வளித்த அண்ணன் பணத்தில் கை வைக்கிறோமே என்று குற்ற உணர்வுடன் வருத்தத்துடன் எடுப்பான்.
புதிதாக ஒருவரை அந்த வேலைக்கு வைத்தால் கணக்கு வழக்கை வேலுமணி கேட்க மாட்டார் என்ற தைரியத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் திருடுவான்.
ஆகவே சுப்பிரமணியை என்னால் சந்தேகிக்க முடியாது!’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.
இவருடைய நம்பிக்கை- நேர்மைக்கு பொருந்தும் வள்ளுவன் குறள்:
தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்
- இதன் மூலம் முன்பின் தெரியாதவனைத் தீர விசாரிக்காமல் வேலையில் அமர்த்துவதும் தவறு; நம்பிக்கையான ஆளைச் சந்தேகிப்பதும் தவறு! என்கிறார் வள்ளுவர்.
அப்படி நேர்மையாக வாழ்ந்த வேலுமணி அண்ணா, ‘அன்னை அபிராமி’ படத்தில் நடித்த கே.ஆர்.விஜயாவுக்கு சம்பளம் தர முடியவில்லை என்று வளசரவாக்கத்தில் அவருக்குச் சொந்தமாக இருந்த 10 ஏக்கர் தோட்டத்தையே விஜயா பெயரில் எழுதி வைத்துவிட்டார். அதுதான் சினிமா படப்பிடிப்பு அதிகம் நடந்த கே.ஆர்.விஜயா தோட்டம்.
- கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in