Last Updated : 27 Feb, 2016 10:13 AM

 

Published : 27 Feb 2016 10:13 AM
Last Updated : 27 Feb 2016 10:13 AM

மன்னா.. என்னா?- மொட்டை ஓலையும்.. தேர்தல் அறிக்கையும்

பிரஜைகளில் ஒருவன் மன்னருக்கு போட்ட மொட்டை ஓலை, மந்திரிசபையில் படிக்கப்பட்டது. அதில் இருந்த விஷயம் இதுதான்:

‘‘மஹாராஜராஜஸ்ரீ மஹாகனம் பொருந்திய மன்னர்வாள் சமூகத்துக்கு வந்தனங்கள்! மூடவர்மன், மந்திவர்மன், பேக்குவர்மன், லூசுவர்மன் என்று உங்கள் வம்சாவளிகள்தான் தலைமுறை தலைமுறையாக இந்த நாட்டை ஆள்கிறீர்கள். போய்த் தொலையட்டும்! தூர தேசத்தில் இருப்பதுபோல ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் அறிக்கை வெளியிட ஏற்பாடு செய்யுங்கள். ஜனங்களுக்கு ஒரு பொழுதுபோக்காக இருக்கும். தவிர, இந்த வருஷத்தில் நீங்கள் என்னென்ன திட்டங்களை கட்டாயம் நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் நாங்கள் தெரிந்துகொள்ள முடியும்’’

இதுதான் அதில் இருந்த தகவல்.

மன்னருக்கு வெ.. மா.. சூ.. சொ.. ஜிவ்வென்று ஏறிவிட, உடனே தேர்தல் அறிக்கையை ரெடி பண்ணிவிட்டார். அதன் சாராம்சங்கள்:

* வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கும் ஜனங்கள், வைத்தியர் வீட்டுக்குச் செல்ல இலவச மாட்டு வண்டிகள் விடப்படும். குறுகலான சந்து பொந்துகளில் செல்லும்போது மாடுகள் மெர்சலாகிவிடும் என்பதால், அத்தகைய பகுதிகளுக்கு ஆட்டு வண்டிகள் விடப்படும்.

* ஆராய்ச்சி மணி என்பது ஏதோ பொழுதுபோக்கு தொடர் என்ற ஞாபகத்தில் இதுவரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10 முதல் 10.30 வரை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது 24 மணிநேர சேவையாக மாற்றப்படுகிறது. அதை சும்மா விளையாட்டுக்காக அடித்துவிட்டு ஓடிவிடும் சேட்டைக்கார சிறுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* இட்லி மாவு அரைக்க ஆட்டுக்கல், சட்னி அரைக்க அம்மி, கை விசிறி இலவசமாக வழங்கப்படும்.

* கிணற்றில் இருந்து தினமும் தண்ணீர் இரைத்து வேஷ்டியில் வடிகட்டி, வீடுகள்தோறும் 20 குவளைகள் வழங்கப்படும்.

* அந்தப்புரத் தோட்டத்தில் புலி ஆட, எலி ஓட, மலர்க் கொடிகள் அசைந்தாடும் காட்சிகளை மக்கள் கண்டுரசிக்க ஏற்பாடு செய்யப்படும்.

* வீடுகள்தோறும் தடையற்ற வெளிச்சம் பெற தீவட்டிகள், விளக்கு எண்ணெய் ஆகியவற்றோடு அவற்றை ஏற்றிவைப்பதற்காக தீவட்டித் தடியன்களும் இலவசமாக அனுப்பி வைக்கப்படுவர்.

* பாகுவதி ஆற்றுப் பிரச்சினை குறித்து பாகுபலி தேசத்துடன் பேச்சு நடத்தப்படும். அதில் எட்டப்படும் முடிவு அரசு கல்வெட்டில் பதிக்கப்படும்.

* ராஜபாட்டையில் ஜனசந்தடியைக் குறைக்க, ஒற்றைப்படை நாட்களில் ஒற்றை மாட்டு வண்டிகளும், இரட்டைப்படை நாட்களில் இரட்டை மாட்டு வண்டிகளும் மட்டுமே செல்லவேண்டும்.

* நம் தேசத்தில் நடத்தப்பட்ட முதலீட்டு விக்ஞாபன ஆலோசனைக் கூட்டத்தில் காந்தர்வ தேசம், பிரால தேசம், மங்கள தேசம் உட்பட பல தேசங்களை சேர்ந்த மந்திரி பிரதானிகள் கலந்துகொண்டார்கள். நம் நாட்டில் பஞ்சு மிட்டாய், இஞ்சி லேகியம் வணிகத்தில் பதினாயிரம் வராகன் முதலீடு செய்வதாக பிரதிக்ஞை செய்திருக்கிறார்கள்.

இவ்வாறு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்தப்புர முன்னாள் பணிப்பெண்களுக்கு ஓய்வூதியம் உயர்வு, சாமரம் வீசும் பெண்களுக்கு ஜிகினா வைத்த சீருடை, தாத்தாக்களுக்கு மூக்குப்பொடி டப்பா, பாட்டிகளுக்கு வெத்தலப் பொட்டி போன்ற திட்டங்களும் மன்னர்வாள் பரிசீலனையில் இருப்பதாக கேள்வி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x