Last Updated : 19 Jun, 2014 07:00 PM

 

Published : 19 Jun 2014 07:00 PM
Last Updated : 19 Jun 2014 07:00 PM

அதிகார இறகுகள் உதிரும் தருணம்!

அதிகாரமும், கையூட்டும் கரைபுரண்டோடும் அரசு அலுவலகம் அது. நண்பரும் நானும் ஒரு வேலையாக அங்கிருக்கும் நண்பர் ஒருவரைச் சந்திக்க சென்றிருந்தோம். சிறிது நேரம் காத்திருக்க வேண்டிய சூழல். சுற்றிலும் இருந்த இரும்பு அலமாரிகளில் காலம் காலமாய் சேமிக்கப்பட்ட தகவல்கள் பெரிய பெரிய நோட்டு புத்தகங்களாய் பழமை பூசிக்கிடந்தன. ஏதாவது தகவல்கள் தேவைப்பட்டால் இத்தனையும் கலைத்து தேடுவார்கள்தானே எனத் தோன்றுகிறது. முன்னிருக்கை அதிகாரி இன்றோடு ஓய்வு பெறவிருக்கிறார் என நண்பர் கூறுகிறார். என்ன தேதி என யோசித்தேன், மே 30 வெள்ளிக்கிழமை. சனிக்கிழமை விடுமுறை என்பதால் 31-ம் தேதிக்குப் பதிலாக ஒரு நாள் முன்கூட்டியே தன் அதிகாரத்தை துறக்க வேண்டிய சூழல்.

அந்தக் காத்திருப்பு நேரம் சுவாரசியம் கூடியதாக அமைகிறது. ஓய்வு பெறப்போகும் அதிகாரியையே தவிர்க்க விரும்பாமல் கவனிக்கிறேன். நல்லவிதமாக உடையணிந்திருந்தார். இது வழக்கத்திற்கு மாறானதாக இருக்குமென நானே நினைத்துக் கொள்கிறேன். தலைமுடிக்கும் மீசைக்கும் இன்றோ நேற்றோ சாயம் அடித்திருக்கிறார் என்பது அதன் பளபளப்பிலிருந்து தெரிகிறது. அடுத்தடுத்து ஒவ்வொருவராய் வந்து அந்த அதிகாரியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறார்கள். எல்லோரும் அவரின் ஓய்வு குறித்தே பேசுகிறார்கள். யார் பேசினாலும் அதிகாரி மையமாக சிரித்து வைக்கிறார். அந்தச் சிரிப்பில் ஒருவித கசப்பு வழிகிறது.

ஒரு பெரிய பாத்திரத்தில் தேநீர் கொண்டுவந்து கப்களில் பிடித்து தட்டிலேந்தி அங்கிருப்பவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் முன்பும் தட்டு நீட்டப்படுகிறது.. சற்றுமுன் டீ குடித்திருந்ததால் மறுத்தோம். நாங்கள் சந்திக்கச் சென்றிருந்த நண்பர் "பரவால்ல குடிங்க!" என வற்புறுத்துகிறார். "சார் இன்னிக்கு ரிட்டயராகுறார், அதனால் அவரோட டீ" என்கிறார். அதிகாரி எங்களைப் பார்த்து மையமாக தலையசைக்கிறார். அந்த டீயைக் குடித்தேயாக வேண்டுமெனத் தோன்றுகிறது. நான் டீ எடுத்துக்கொள்கிறேன்.

மடித்த சால்வையோடு ஒருவர் அவர் அருகில் வருகிறார். பக்கத்தில் இருந்த இன்னொருவர் இதெல்லாம் "சாயந்திரம் பார்த்துக்லாம்" எனச் சொல்லச் சொல்ல, "அதெல்லாம் இப்பவே செய்யனும்ங்க" என்றவாறு சால்வையை விரிக்காமலே அதிகாரி கழுத்தில் வைத்து அணைத்தவாறு பிடித்துக்கொண்டு கைகளைப் பிடித்துக் கொள்கிறார். இப்படி அவரைச் சுற்றிலும் மனிதர்கள் புதுவிதமான ஒரு அன்போடு உரசிஉரசிச் சென்று கொண்டிருக்கிறார்கள். நேரத்தைப் பார்க்கிறேன் 12 மணி. இன்னும் 5 மணி நேரம்தான் அவருக்கும் இந்த அலுவலத்திற்குமான உறவா எனத் தோன்றுகிறது. அதுவரை அவரை முன்பின் அறிந்திருக்கவில்லை. அப்போதும் கூட அறிந்துகொள்ள அவசியப்படவில்லை.

சமீபத்தில் சகோதரி ஒருவரின் தந்தையார் ஓய்வுபெற்று வருவதையொட்டி, அவர்கள் வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரின் அக்கம்பக்கம், உறவுகளென எல்லோரும் மாலை ஐந்து மணியிலிருந்து குழுமியிருந்தோம். கடையிலிருந்து உணவுகளும் வந்து காத்திருந்து காத்திருந்து ஆறிப்போக ஆரம்பித்தன. எட்டு மணி சுமாருக்கு அலுவலக நண்பர்கள் சிலருடன் அவர் வந்திறங்கினார். கையில் ஒரு சந்தன மாலையைப் பிடித்தவாறு தளர்வாய் நடந்து வந்தார். குழுமியிருந்த உறவுகளும் நட்புகளும் அவருக்கு மகிழ்வைத் தருகிறதா அல்லது அத்தனையாண்டு கால அலுவலக பந்தத்திலிருந்து வெளியேறி வருவதை வேடிக்கை பார்க்க குவிந்திருக்கிறார்களே என வருத்தத்தைக் கூட்டுவதாய் அமைகிறதா எனப் புரியாத ஒரு உணர்வையே அன்று அவர் முகத்தில் நான் படிக்க நேர்ந்தது.

கைபேசியை எடுத்து சாயந்திரம் அததெல்லாம் சரியான நேரத்திற்கு வந்துவிடுமா என யாரிடமோ அந்த அதிகாரி கேட்டுக்கொண்டிருக்கிறார். அநேகமாக பிரிவுபசாரத்திற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்கிறார் எனத் தோன்றுகிறது.

நிறையக் கோப்புகளைக் கொண்டுவந்து ஒருவர் நீட்டுகிறார். ஒவ்வொன்றிலும் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கிறார். இதுநாள் வரை கையெழுத்திட்டதற்கும், இன்றைக்கு அவர் கையெழுத்திடுவதற்கும் மிகப்பெரிய வேறுபாட்டினை அவர் உணரலாம். இன்றைக்கு கடைசி கடைசியென அவர் கையெழுத்திடும் கோப்பு எதுவாக இருக்குமென சிந்தனை ஓடுகிறது. கடைசியாக இடும் கையெழுத்து வாழ்நாள் முழுதும் நினைவிலிருக்குமா எனவும் தோன்றியது.

ஒருவேளை அவர் ஒவ்வொரு ஃபைலுக்கும் குறிப்பிட்ட தொகை மாமூல் வாங்குபவராய் இருந்தால், 'அட நாளையிலிருந்து அந்த மாமூல் கிடைக்காதே' என ஒரு மகிழ்ச்சி மின்னல் அடிக்கிறது. சட்டென அந்த கணப்பொழுது மின்னல் மகிழ்ச்சியை மனதிலிருந்து விரட்ட விரும்புகிறேன். அரசுத்துறையில் நியாயமாய் நமக்கு நடக்க வேண்டிய ஒவ்வொரு வேலைக்கும் காசு கொடுக்க வேண்டும் அல்லது சிபாரிசு வேண்டும் என்ற நிலைவரும்போது சொல்லமுடியாத ஒரு எரிச்சல் மண்டுகிறது. அப்படி காசு வாங்கும் ஆட்கள் சார்ந்த துறைகள் மேல் மனதிற்குள் எப்போதும் ஒரு கசப்பு இருக்கத்தான் செய்கிறது.

அந்தச் சூழலில் நான் தவிர்க்க விரும்பினாலும் நினைவுக்குள் ஒரு சம்பவம் வந்து தேங்குகிறது. இரண்டு வருடங்கள் முன்பு ரேசன் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக வட்டாச்சியர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பித்து நடையாய் நடந்தேன். அதைத் வழங்கவேண்டிய அதிகாரியின் முகம் எனக்கு மிகவும் பரிச்சயமானது. ஆனால் எப்படி எங்கென நினைவு வரவேயில்லை. அவர் ஒருபோதும் என்னிடம் சிநேகமான முகத்தை அவர் காட்டவேயில்லை. அதுவரை நானும் எங்கும் காசு கொடுக்கவில்லை. கொடுக்கும் எண்ணமுமில்லை. ஒரு கட்டத்தில் ரேசன் அட்டையில் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது என்ற தகவல் அறிந்து அதற்கான அதிகாரியிடம் நேரில் பெற்றுக்கொள்ளச் சென்றிருந்தேன். ஆனாலும் ஒரு கட்டத்தில் தயார்படுத்தி வைத்துவிட்டார்கள். காரணம் அத்தனை நடை, அலைச்சல்.

ரேசன் அட்டையை வாங்கச் செல்லும்போது எப்படியும் காசுக்காக தலையைச் சொறியலாமென மனதை தயார்படுத்தி வைத்துக்கொண்டேன். அது ஆகஸ்ட் மாதம். பர்சில் வேண்டுமென்றே இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகள் மட்டும் வைத்துக்கொண்டேன். அன்று நான் சென்றபோது வழக்கத்திற்கு மாறான சிநேகத்துடன் வரவேற்றார். ரேசன் கார்டை பரிசோதித்துக்கொள்ளுங்கள் எனக்கொடுத்தார். பெற்றுக்கொண்டேன் என்பதற்காக கையொப்பம் பெற்றுக்கொண்டார்.

ரொம்ப நன்றிங்க எனச் சொல்லிவிட்டு நகர முற்பட்டேன். கூடுதல் கனிவாய் சிநேகமாய் அவர் முகம் இருந்தது. "சார் பார்த்து எதும்…." என தணிந்த குரலில் கேட்டார். வழக்கத்திற்கு மாறாக என் குரல் உயர்ந்தெழுந்தது "புரியலைங்க" எனச்சொல்லிவிட்டு…. "ஓ… பணம் எதும் வேணுங்ளா…!? என்றவாறு அவர் முன்னே பர்ஸைத் திறந்து இரண்டு ஐம்பதுகளை எடுத்து…. "வண்டிக்கு வேற பெட்ரோல் அடிக்கனுங்க…" என்றவாறு ஒரு ஐம்பதை மட்டும் நீட்டிவிட்டு, "சார்… ஈரோட்ல புத்தகத் திருவிழா நடக்குறது தெரியும்னுதானே … வீட்ல பசங்க இருந்தா கட்டாயம் கூட்டிட்டுப் போங்க, ஞாபகார்த்தமா இந்தக் காசுக்கு சின்ன புத்தகம் எதாச்சும் வாங்கிக் கொடுங்க" எனச்சொல்லிவிட்டு விடுவிடுவென வெளியேறிவிட்டேன். எதையோ வென்றுவிட்ட தினவா அல்லது வன்மமா எனச் சொல்ல முடியாதொரு மனநிலை. இனி வருடந்தோறும் ஈரோடு புத்தகத் திருவிழா குறித்த விளம்பரங்களை அவர் பார்க்கும்போது இந்த ஐம்பது ரூபாய் கட்டாயம் நினைவுக்கு வரவேண்டும் என்ற வன்மம்தான் அதுவென நினைக்கிறேன்.

நினைவுக்குள் சிறகடித்துக்கொண்டிருந்த அந்த சம்பவப் பறவையை விரட்டுகிறேன். ஒருவேளை அப்படி காசு எதுமே வாங்காத ஒரு நல்ல அதிகாரியாக இவர் இருந்தால், இப்படியெல்லாம் நினைப்பது மாபெரும் பாவம் என்ற ஒரு குற்ற உணர்வும் வந்துபோனது.

கைபேசிக்கு வந்த அழைப்பில் யாரிடமோ தணிந்த குரலில் அந்த அதிகாரி பேசுவது கேட்கிறது. "அவங்கம்மாக்கு உடம்பு சரியில்லைனு ஊர்ல இருக்காங்க. வீட்ல யாருமில்ல. நீங்களாச்சும் வந்து சேருங்க!" என்கிறார்.

ஏனோ அவர் மேல் வாஞ்சை கூடுகிறது. பணியிலிருந்து ஓய்வு பெறுதல் என்பது ஒரு வகையில் விடுதலையாக இருந்தாலும், மிகப்பெரிய மனச்சோர்வைத் தரும் ஒரு நிகழ்வுதான். வாழ்க்கையில் பாதி வருடங்களுக்கு மேலாக கடைப்பிடித்து வந்த நேர மேலாண்மை, ஒழுங்குகள், செயல்பாடுகள் என அனைத்தும் நாளையிலிருந்து அவசியமற்றதாக மாறிவிடலாம். அவருக்கு இந்த இரவு நிம்மதியா உறக்கம் சூழுமா? முதலில் நேற்று இரவு நிம்மதியாகத் தூங்கியிருப்பாரா? நாளையிலிருந்து அந்த அலுவலகத்திற்கும் தனக்கும் துளியும் தொடர்பில்லை என துடைத்துவிடப்படும் நிலையை எதிர்கொள்வதென்பதொன்றும் அவ்வளவு உவப்பானதல்ல!

ஈரோடு கதிர் - தொடர்புக்கு kathir7@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x