Last Updated : 16 Aug, 2021 09:04 AM

 

Published : 16 Aug 2021 09:04 AM
Last Updated : 16 Aug 2021 09:04 AM

திருக்குறள் கதைகள் 14- 15: சன்மானம்

பாரத விடுதலை போராட்ட வீரர்களில் முதன்மையானவரான கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையை அறியாத தமிழர் இருக்க முடியாது. 1906-ல் வெள்ளையரை எதிர்த்து சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி துவக்கி தூத்துக்குடிக்கும்- இலங்கைக்கும் இடையே கப்பலோட்டியவர். தூத்துக்குடி துறைமுகம் இந்தியாவின் மிகப்பெரிய துறை முகங்களில் ஒன்று. அதில் இரண்டு கப்பல்களை வெள்ளையர் கப்பலுக்கு எதிராக இலங்கைக்கு பயணிகள் ஏற்றிச் செல்ல அனுப்பி வைத்தார்.

அந்தக் கோபத்தில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்து கோயமுத்தூர் சிறையில் செக்கிழுக்க வைத்தனர் ஆங்கிலேயேர். அத்துடன் வழக்கறிஞர் தொழிலும் செய்ய தடை விதித்தனர்.

அப்பா உலகநாதம் பிள்ளை பிரபல வக்கீல். மகனையும் வழக்கறிஞர் தொழிலுக்கு படிக்க வைத்து, தனக்கு எதிராக வாதாட அனுமதித்தவர்.

எஸ்.எஸ்.கால்லியா

சிறுவயதில் மகன் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்பதற்காக ஊராரின் உதவியுடன் சொந்தமாக ஒரு பள்ளி ஒட்டப்பிடாரத்தில் துவக்கினார். கல்லூரிப் படிப்பை வ.உ.சி., திருநெல்வேலி இந்து காலேஜில் தொடர்ந்தார். நாட்டு விடுதலைக்கு தன்னை அர்ப்பணிக்க நினைத்தபோது பாலகங்காதர திலக்கும், லாலாலஜ்பத்ராயும் இவரைக் கவர்ந்தனர். திலகரின் சீடராக தன்னை வடிவமைத்துக் கொண்டார். மேடைப் பேச்சில் சுப்பிரமணிய சிவா -பாரதியார், வ.உ.சி., மும்மூர்த்திகளாக மக்களைக் கவர்ந்தனர்.

தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களுக்கு -சம்பள உயர்வு தர வேண்டும், வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும். வாரத்தில் ஞாயிறு அன்று விடுமுறை வேண்டும் என்று தொழிலாளர்களை ஒன்று திரட்டி போராடி வெற்றி பெற்றார்.

வங்கத்தலைவர் விபின் சந்திரபால் விடுதலையொட்டி மாபெரும் பொதுக்கூட்டத்தில் வ.உ.சி., பேச இருந்த போது கலெக்டர் விஞ்ச்துரை அவரை அழைத்து அரசியல் போராட்டங்களை கைவிடக் கேட்டார். வ.உ.சி மறுத்தபோது 1908- மார்ச் 12-ந்தேதி கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

வ.உ.சி தம்பதி

செய்தி அறிந்து பள்ளிகள், கல்லூரிகள், கடைகள் மூடப்பட்டு பெருத்த கலவரம் ஏற்பட்டது. அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை (40 வருடங்கள்) கொடுத்து வழக்கறிஞர் தொழிலும் செய்ய தடை விதித்தனர். கடைசியில் வாலேஷ் என்ற நீதிபதி வ.உ.சி.,யை விடுதலை செய்து- வக்கீல் தொழிலை தொடரும்படி தீர்ப்பளித்தார்.

அந்த நீதிபதி நினைவாக தன் கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயர் சூட்டினார் வ.உ.சி.

திண்டுக்கல்லில் அரசு உத்யோகம் பார்த்து ஓய்வு பெற்ற ஒரு பெரியவரைப் பார்க்க, ஏழைத் தொண்டன், ஒரு தாம்பாளத்தட்டில் வேட்டி, சட்டை, புடவை, பழங்களுடன் மேலே ஒரு ஆயிரம் பணம் வைத்து -அவர் காலடியில் விழுந்து வணங்கி தட்டைநீட்டினான். அதை வாங்கிக் கொண்டு உள்ளே போன பெரியவர் அந்த தட்டிலிருந்த எதையும் தொடாமல் அந்த 1000 ரூபாய் மீது ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து திருப்பி எடுத்து வந்து அவரிடம் நீட்டி, ‘நீங்கள் கொடுத்ததை நான் வாங்கிக் கொண்டேன். இப்போது நான் கொடுப்பதை மறுக்காமல் நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும்!’ என்று கொடுத்து விட்டு, வெள்ளையனை எதிர்த்து இரண்டு கப்பல் ஓட்டியவர் என் தந்தை, அவர் வாரிசு சன்மானங்களால் வாழ்ந்தது என்ற பெயரை அவருக்கு வாங்கித் தர மாட்டேன். உங்கள் அன்புக்கு நன்றி!’ என்றார்.

வாலேஸ்வரன்

அவர்தான் மேலே சொன்ன வாலேஸ்வரன். வ.உசி.,க்கு விழா எடுக்கிறோம். நீங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று வ.உ.சி., பக்தர்கள் கோவையிலிருந்து கார் அனுப்ப முயன்ற போது -இந்தியாவில் பெட்ரோல் என்ன அவ்வளவு மலிவாக விற்கிறதா- என்னை ஏற்றிப் போக ஒரு முறை காலியாக கார் வந்து விட்டு- என்னை இறக்கி விட்ட பின்பும் காலியாக கார் கோவை செல்லுமல்லவா? ஒன்றும் வேண்டாம் என்று பஸ்ஸில் திண்டுக்கல்லில் புறப்பட்டு, கோவை சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இரவு, விருந்து சாப்பிட்டுப் போங்கள் என்றதற்கு, மனைவி கொடுத்தனுப்பிய மோர் சாதம் உள்ளது அது போதும் என்று கிளம்பி விட்டார்.

நல்ல நோக்கத்தோட அன்பளிப்பு தந்தாலும் அதை கைநீட்டி வாங்குவது தவறு என்பதை வலியுறுத்தும் வள்ளுவர் குறள்:

‘நல்லாறு எனினும் கொளல்தீது -மேல் உலகம்

இல் எனினும் ஈதலே நன்று’

---

குறள் 15: சறுக்கல்

தமிழ் சினிமாவில் பேப்பரில் கதை வசனம் எழுதாமல் அனைத்தையும் மூளையில் பதிய வைத்து, அதைப் படப்பிடிப்புத் தளத்தில் நடிக,நடிகையருக்கு சொல்லிக் கொடுத்து திரைப்படத்தை உருவாக்கும் அசாத்திய திறமைசாலி டைரக்டர் கே.எஸ். கோபால கிருஷ்ணன்.

மல்லியம் அவர் சொந்த ஊர். ‘கண்கண்ட தெய்வம்’ -கிராமியக்கதை. படம் மொத்தத்தையும் அந்த கிராமத்திலேயே படமாக்கி முடித்தார்.

இது எனக்கு 7-வது படம். இதுவரை மற்ற படங்களில் எனக்கு டூயட் பாடல் வரவில்லை. இந்தப் படத்தில்தான் டி.எம்.எஸ்.சோலோவாக பாடும் ஒரு பாடல். ஒரு டூயட் டி.எம்.எஸ்.சுசீலாவுடன் தரப்பட்டது.

நாளைய தினம் பாடல்காட்சி என்று சொன்னார்கள். கே.எஸ்.ஜி., வீட்டுக்கு எதிரில் ஒரு ரைஸ் மில். அங்கே சென்று டான்ஸ் மாஸ்டரை வைத்து - 2 மணி நேரம் வியர்க்க விறு விறுக்க ஒத்திகை பார்த்து விட்டு வெளியே வந்தேன்.

கே.எஸ்.ஜி படப்பிடிப்பில்

‘‘என்னய்யா பண்ணினே ரைஸ் மில்லுக்குள்ளே?’’- டைரக்டர்.

‘‘டான்ஸ் ரிகர்சல் பண்ணினேன்!’’

‘‘எதுக்கு டான்ஸ்!’’

‘‘நாளைக்கு SONG-ஐ படமாக்கப் போறிங்கள்ல?’’

‘‘பாட்டு மரத்து மேல இருந்துதானே பாடப்போறே. அதுக்கு எதுக்கு ரிகர்சல்?’’

‘‘மொத்த பாட்டுமே மரத்துமேலயா?’’

‘‘ஆமா! முட்டாள் ! தேவையில்லாம ஏன் ஸ்ட்ரெயின் பண்ணிக்கறே?’’

‘எது மரத்து மேல பாட்டா? நமக்குத்தான் மரமேறிப் பழக்கமில்லியே. நாளைக்கு சூட்டிங் பார்க்க வர்ற கூட்டத்துக்கு முன்னாடி ஏர்றா மரத்திலேன்னு டைரக்டர் சொன்னா மாட்டிக்குவமே!’

அந்த கிராமத்தில மரமேறும் பெரியவரைத் தேடிப் போய், ‘அண்ணா மரமேறக் கத்துக் குடுங்க!’ என்றேன்.

தாம்புக் கயிறு எடத்துக் கொண்டு தோப்புக்கு கூட்டிப் போனார். போகும் வழியில் ஒரு யோசனை. நாகேஷ் நம்ம ஊர்க்காரர்தானே? அவர் குரங்கு மாதிரி தாவி ஏரறாரு. நாம 10 வயசு சின்னவன்-நம்மால ஏற முடியாதான்னு, காலில் தாம்புக்கயிறு மாட்டாமல் தாவி ஏறி, தத்தித் தத்தி 10 அடி உயரம் போய் விட்டேன்.

கால்கள் தந்தியடித்தன.

‘‘சாமி, சாமி கால் நடுங்குதே!’’

‘‘அதுக்கு என்ன?’’

‘‘கீழே விழுந்திரப் போறீங்க!’’

‘‘அய்யய்யோ!’’

தென்னை மரத்தைக் கட்டிப் பிடித்தேன்.

‘‘சாமி! மரத்தை கட்டிப் பிடிச்சா கீழ வர்றப்ப நெஞ்சு தோல் உரிஞ்சுடும்’’

‘‘அட, அதை விட உசிரு முக்கியமப்பா!’’

‘சர்..சர்..சர்...!’ நெஞ்சுத்தோல் சிராய்க்கப்பட்டு ரத்தம் கசிந்தது. வாய்க்கால் தண்ணீரில் கழுவி விட்டுக் கொண்டு அறைக்குப் போய், புண் மீது பவுடர் அடித்து, ‘ரவுண்ட் நெக்’ பனியன் போட்டுக் கொண்டேன்.

‘‘என்னய்யா! உனக்கு சம்பந்தமில்லாம இப்படி ‘மாடர்ன்’ பனியனெல்லாம் போட்டிருக்கே’’

‘‘மரம் ஏறி நெஞ்சு உறிஞ்சு போச்சு. அதை மறைக்கத்தான் இப்படி!’’

என்று சொல்லி மரமேறி ரிகர்சல் பார்த்த அனுபவத்தை சொன்னேன்.

அவர், ‘‘மடையா.. மடையா.. நாங்க ஏணி வச்சு மரத்து மேல ஏத்தி விட்ருப்பம்ல?’’ என்றார்.

‘ஏன்யா, இதெல்லாம் முன்னாடியே சொல்ல மாட்டீங்களா?’

‘சொல்ல மாட்டாங்க. 7000 ரூபாய் சம்பளம் வாங்கறவனுக்கு இதெல்லாம் சொல்ல மாட்டாங்க..!’

சினிமாக்காரனுக்கென்ன லட்சக்கணக்கில் சம்பளம். ராஜவாழ்க்கை வாழறாங்கன்னு மக்கள் நினைக்கிறாங்க. நாங்க படற கஷ்டம் எங்களுக்குத்தானே தெரியும். இந்த என் நிலையை விளக்கும் குறள்:

‘சொல்லுதல் யார்க்கும் எளிய- அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்!’

--

கதை பேசுவோம்.
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x