

அறிவு என்பது வெளியிலிருந்து புகட்டப் படுவது என்றே பலரும் நினைக்கின்றனர். இது தவறு.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அறிவு இருக் கிறது. அதை வெளியே கொண்டுவருவதுதான் கல்வி.
‘கல்வி’ என்ற சொல்லின் வேர் ‘கல்’. ‘கல்’ என்றால் தோண்டுதல் என்று பொருள். அதாவது அறிவு என்பது மறைந்திருக்கும் புதையல். அதைத் தோண்டி எடுப்பது கல்வி.
மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல அறிவு மனிதனுக்குள் மறைந்திருக்கிறது. மண்ணைத் தோண்டத் தோண்ட நீர் ஊற்றெடுத்துப் பெருகுவதுபோல் கற்கக் கற்க அறிவு ஊற்றெடுத்துப் பெருகும் என்கிறார் திருவள்ளுவர்.
‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’
‘எஜுகேஷன் (Education) என்ற ஆங்கிலச் சொல்லின் மூலப் பொருளும் ‘தோண்டி வெளியே எடுத்தல்’தான்.
கல்வி என்ற பொருளுடைய ‘இல்ம்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘கண்டுபிடித்தல்’ என்ற பொருள் உண்டு.
அதாவது அறிவு நம்மிடம் இருந்தது. பின்பு ‘காணாமல் போனது’. அதைக் கல்வியின் மூலம் நாம் மீண்டும் கண்டுபிடிக்கிறோம் என்று பொருள்.
இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அறிவு பெறுதலை ஓர் அழகான உவமை மூலம் விளக்குகிறார்கள்.
‘அறிவு சத்தியத்தை நம்புவோரின் காணாமல் போன ஒட்டகமாகும்.
எனவே, அவர் அதை எங்கே கண்டாலும் அதை அடையும் உரிமை அவருக்கு உண்டு.'
- திர்மிதீ
‘காணாமல்போன
ஒட்டகம்’ என்ற உவமை அறிவைப் பற்றிய பல ஆழமான உண்மைகளை உணர்த்துகிறது.
பாலைவனவாசிகளுக்கு ஒட்டகம் எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு அறிவு மனிதனுக்கு இன்றியமையாதது.
பாலைவனவாசிகளுக்கென்றே ஒட்டகம் படைக்கப்பட்டிருக்கிறது. ஒட்டகம் இல்லையென் றால் பாலைவனவாசி வாழவே முடியாது.
பாலைவனத்தில் ஒட்டகத்தின் உதவியால் தான் பயணம் செய்ய முடியும். அதன் பாதங்கள் மணலில் புதையாதபடி வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.
மணல் புயல் வீசும்போதும் அது கண்கள் திறந்தபடியே நடக்க முடியும். அதன் கண்களும் இமை முடிகளும் அதற்கேற்றபடி செய்யப்பட்டிருக்கின்றன.
நீரும் உணவும் இன்றிப் பல நாட்கள் ஒட்டகத் தால் இருக்க முடியும். இரண்டும் கிடைக்கும் இடத்தில் அது ஏழு, எட்டு நாட்களுக்கு வேண்டியதைச் சேகரித்து வைத்துக் கொள்ளும்.
ஒட்டகம் உயரமாகப் படைக்கப் பட்டிருக்கிறது. அதனால் அதன் மேல் பயணம் செய்பவன் தொலைவில் உள்ளவற்றை எளிதாகப் பார்க்க முடியும். குறிப்பாகப் பாலைவனச் சோலையைத் தொலைவில் இருந்தே பார்த்துவிடலாம்.
துன்பம் என்ற பாலைவனத்தைக் கடக்க அறிவுதான் ஒட்டகம் போல் பயன்படும். அது தூரத்தில் இருந்தே ‘பாலைவனச் சோலை’ களைப் பார்த்துவிடும்.
பயணத்தில் வாகனமாக மட்டுமல்ல; ‘கட்டுச் சோறா’கவும் ஒட்டகம் பயன்படுகிறது.
ஒட்டகத்தின் பாலும் மாமிசமும் உணவாகும், முடி உடையாகும், தோல் கூடாரமாகும், எலும்பு ஆபரணமாகும், சிறுநீர் மருந்தாகும், சாணம் அடுப்பு எரிக்கப் பயன்படும்.
அது போன்றே அறிவும் மனிதனுக்கு உணவு தரும்; உடை தரும்; உறையுள் தரும்; அழகு தரும்; மருந்து தரும்; ‘அடுப்பு எரிக்க’வும் உதவும்.
இப்படியும் சொல்லலாம் அறிவு மனிதனுக்கு உணவாகும்; உடையாகும்; உறையுளாகும்; அழகாகும்; மருந்தாகும்.
ஒட்டகம் படையாகும்; அறிவும் அப்படியே.
பாலைவனத்தில் மணல் புயல் வீசும்போது பயணம் செய்பவர்கள் ஒட்டகத்தை அமர வைத்து அதன் உடலைத் தடுப்பாகப் பயன்படுத்தித் தங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள்.
அறிவும் அப்படித்தான் ‘புயல்’ வீசும்போது பாதுகாக்கும்.
ஒட்டகம் உருவம் பெரிதாக இருந்தாலும் சாதுவானது. அறிவும் அப்படியே.
ஒட்டகம் சரி, அதென்ன ‘காணாமல்போன’ ஒட்டகம்?
அறிவைப் பற்றிய நுட்பமான விளக்கம் இந்த உவமையில் இருக்கிறது.
அறிவு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் ‘காண முடியாமல்’ இருக்கிறது. அதாவது மறைந்திருக்கிறது என்று பொருள்.
இதை விளக்க குர்ஆனில் இருக்கும் ஆதாம் தொன்மம் பயன்படும்.
இறைவன், ‘‘பூமியில் நான் என் பிரதிநிதியைப் படைக்கப் போகிறேன்’’ என்று கூறி ஆதாமைப் படைத்தான். அவருக்கு அண்ட சராசரத்தில் உள்ள எல்லாப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்.
அரபயில் பெயர் என்ற பொருளில் ‘இஸ்ம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘இஸ்ம்’ என்ற சொல்லுக்கு வெறும் ‘பெயர்’ என்பது மட்டுமல்ல பொருள்; ஒரு பொருளின் பண்பு, செயற்பாடு என்றெல்லாம் அதற்குப் பொருள் உண்டு.
கணினிக்குள் நமக்கு வேண்டியதையெல்லாம் நாம் பதிவு செய்து வைத்துக்கொள்வதைப் போல், இறைவன் ஆதிமனிதருக்குள் அண்ட சராசரங்களில் உள்ள எல்லாப் பொருள்களைப் பற்றிய அறிவைச் சேகரித்து வைத்துவிட்டான் என்று பொருள். அந்த அறிவு மரபணு வழியாக எல்லா மனிதர்களுக்கும் வந்து சேர்கிறது. அதனால்தான் மனிதன் எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதை எளிதாக அறிந்து கொள்கிறான்.
அறிவியலார் மறைந்திருக்கும் இயற்கையின் ரகசியங்களை அறியும்போது அதைக் ‘கண்டுபிடித்தல்’ (Discovery) என்றுதான் சொல்கிறார்கள்.
அதாவது மறைந்திருந்ததை அல்லது ‘காணாமல் போனதை’க் கண்டுபிடித்தல் என்று பொருள்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அறிவு என்பது விதையாக இருக்கிறது. நீரூற்றி, உரம் போட்டால் அது மரமாக வளரும். இல்லையென்றால் வளராது.
‘பாலைவனவாசி தன் ஒட்டகம் காணாமல் போனால் எப்படி அதைத் தேடி அலைவானோ, அப்படி ஒவ்வொருவரும் அறிவைப் பெறத் தேடி அலைய வேண்டும்’ என்று இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
பாலைவனவாசி எப்படி ஒட்டகம் இல்லாமல் வாழ முடியாதோ, அப்படியே மனிதனும் அறிவில்லாமல் வாழ முடியாது.
இறைத் தூதருடைய வாக்கு மற்றொன்றையும் உணர்த்துகிறது. அறிவைப் பெறுகின்ற உரிமை மனிதர்கள் அனைவருக்கும் உண்டு. சிலர் கூறுவதைப் போல், ‘உயர் குலத்தோர்தாம் கல்வி கற்க வேண்டும்; தாழ்த்தப்பட்டோர் கற்கக் கூடாது’ என்பது மடத்தனமானது.
அறிவில்லாதவன்தான் இப்படிக் கூறுவான். அறிவில்லாதவன் உயர் குலத்தோனாக இருக்க முடியாது. இப்படிக் கூறுவதன் மூலம் அவன் தாழ்ந்த குலத்தவனாகிவிடுகிறான்.
அறிவு சத்தியத்தை நம்புவோரின் காணாமல்போன ஒட்டகம் என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவு நெருப்பு. சத்தியத்தை நம்புவோர் அதனால் விளக்கேற்றி வெளிச்சம் பெறுவர். சத்தியத்தை நம்பாதவர் அந்த நெருப்பால் வீட்டை எரித்துக்கொள்வர்.
- இன்னும் முத்துக் குளிக்கலாம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: Kaviko2003@yahoo.com