

பல சாதனைகள் மாற்றி யோசித்ததாலேயே சாத்தியமாகி இருக்கிறது. அதுபோல தேர்தலில் வாக்காளர்களைக் கவர்ந்து ஓட்டுகளைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இது ஒரு பக்கம்.
வாக்காளர்களில் பலர் வாக்குச்சாவடி பக்கம் தலைவைத்துக்கூட படுப்பதில்லை. “வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமை”, “ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது” என்றெல்லாம் பல வழிகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக கோடிக்கணக்கில் செலவிடவும் செய்கிறார்கள். இது மற்றொரு பக்கம்.
பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தால்தான் சரியானவர்களின் கைக்கு ஆட்சி போகும் என்பது பலரது வாதமாக இருக்கிறது. இதற்காக, தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள், மாநில அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பல அமைப்புகள் முனைப்பு காட்டுகின்றன. ஆனால், ஓட்டு சதவீதம் 75 சதவீதத்தைத் தாண்டியதில்லை. அதனால் 100 சதவீதம் பேரையும் ஓட்டுப் போட வைக்க வேண்டும் என்றால் மாற்றி யோசிக்க வேண்டும்.
திருமணத்துக்குப் போகிறவர்கள் அங்கே மொய்ப் பணம் எழுதுகிறார்களே அது ஏன்? நாளைக்கு நம் வீட்டில் திருமண விசேஷம் நடக்கும்போது அவர்கள் வந்திருந்து திருமணத்தை சிறப்பித்துவிட்டுப் போவதுடன், மொய்ப் பணமும் எழுத வேண்டும் என்பதற்காகத்தானே. அதை லஞ்சம் என்று யாரும் சொல்வதில்லை.
அதுபோல வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையமே ஒரு ஓட்டுக்கு ரூ.500 என அறிவித்துவிட்டு, ''மக்கள் பணம் மக்களுக்கே – அனைவரும் வாக்களிக்க வாருங்கள்'' என்ற புதிய கோஷத்துடன் இத்தேர்தலை சந்தித்தால் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நிச்சயம்.
இப்படி மாற்றி யோசித்து, இத்தேர்தலில் பரீட்சார்த்த முறையில் இதைச் செய்து பார்க்கலாமே என்று பலரும் யோசிப்பதை இங்கே பதிவாகத் தருகிறோம்.
இது குறித்து சமூக ஆர்வலர் கோவிந்தன் கூறியதாவது: ''போலியோ சொட்டு மருந்து குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு ஏற்படுத்தவே சில பரிசுப் பொருட்களை வழங்க வேண்டி இருக்கிறது. வாக்களிப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விளம்பரங்கள் மூலம் கருத்துகளைப் பரப்பவும் சில கோடிகளை செலவழிக்க நேரிடுகிறது. அதனால், வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வரவைப்பதற்காகவும் இது மாதிரியான மாற்றி யோசிக்கும் உத்திகளைப் பயன்படுத்தலாம்'' என்றார்.
இதுபற்றி அன்பான ஆலோசனைகளை நீங்களும் தரலாம்.