Published : 30 Jul 2021 09:27 am

Updated : 31 Jul 2021 17:22 pm

 

Published : 30 Jul 2021 09:27 AM
Last Updated : 31 Jul 2021 05:22 PM

திருக்குறள் கதைகள் 4-5: மாண்புடையள்

thirukkural-stories
கணவதியம்மாளுடன்...

சிவகுமார்

கரிசல் எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இடச்செவல் கிராமத்தைச் சேர்ந்தவர். வசதியான விவசாய குடும்பம். பள்ளியில் படிப்பு ஏறவில்லை. மழை நேரத்தில் கூட பள்ளிக்குள் ஒதுங்க விருப்பமில்லை. அப்படி ஒதுங்கினாலும் மழையைத்தான் வேடிக்கை பார்ப்பார். ஆனாலும் கேள்வி ஞானம், உலக ஞானம், படித்தோர் வழி தான் பெற்ற அனுபவங்களை கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கரிசல் காட்டுக்கடுதாசி, வட்டார வழக்குச் சொல்லகராதி, ஏகப்பட்ட சிறுகதைகள், குறுநாவல்கள் என்று தன்னை இலக்கிய உலகில் அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்ந்தார்.

ஆந்திராவிலிருந்து புலம் பெயர்ந்து தென் மாவட்டங்களில் குடியேறி, கள்ளி, சுள்ளி வெட்டி, கரடு முரடான பூமியை பண்படுத்தி, கரிசல் மண்ணில் விவசாயத்தை தொழிலாகக் கொண்டு முன்னேறிய கம்மா நாயுடு மக்களின் வரலாற்றுப்புதினம் கோபல்ல கிராமம். கதாநாயகன், கதையின் நாயகி வில்லன் என்று முக்கிய பாத்திரங்கள் இல்லாமல் ஊர் மக்களையும், அவர்கள் வாழ்க்கையையுமே மையப்புள்ளியாக வைத்து எழுதப்பட்டு பெருத்த வரவேற்பை பெற்ற நாவல். கோபல்ல கிராமத்து மக்கள் சாகித்ய அகாடமி விருது பெற்றது. அவர் எழுத்துக்களில் முதன் முதல் அந்த நூலை படித்தே அவர் மீது பற்று வைத்தேன்.


கி.ரா.,வுடன்

1986-ல் ஜூனியர் விகடனில், ‘இது ராஜபாட்டை அல்ல’ என்ற தன் வரலாற்றுத் தொடரை துவக்கி 38 வாரங்கள் எழுதினேன். அதைத் தொடர்ந்து கி.ரா.,வின் கரிசல்காட்டுக்கடுதாசி ஜூ.வி.,வியில் வெளியாயிற்று.

அவருக்கு 24 வயதில் காசநோய் (டி.பி) வந்து விட்டது. நாகர்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளம் டிபி மருத்துவமனை, ஆந்திர எல்லையோரம் உள்ள மதனப்பள்ளி என்று டி.பி. மருத்துவமனை எங்கெல்லாம் உள்ளதோ, அங்கெல்லாம் சென்று வைத்தியம் செய்து பார்த்தார். நாளுக்கு நாள் உடம்பு எலும்பாகிக் கொண்டு வருகிறதே தவிர குணமாகும் அறிகுறி தெரியவில்லை.

இந்த சோதனை காலத்தில் தன் சகோதரியின் தோழி பக்கத்து வீட்டு கணவதியம்மா இவரைக் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். ‘‘இன்றோ நாளையோ என் கதை முடிஞ்சிடப் போகுதுன்னு நான் நடுங்கிட்டிருக்கேன். என்னைப் போய் கட்டிக்கப் போறியா.. நீ என்ன லூசா?’’ என்று கேட்டார்.

‘என்ன ஆனாலும் நான் தாங்கிக் கொள்கிறேன். இப்ப உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்!’ என்றாள் அந்தப் பெண்.

‘டி.பி., நோயாளியைக் கல்யாணம் செய்தால் உனக்கும் டி.பி., வரும்!’ என்று எச்சரித்தார் டாக்டர்.

ஆனால் கி.ரா.வின் பாட்டி அசாத்திய துணிச்சல்காரி. ‘எது வந்தாலும்பாத்திடலாம். நீ கட்டுடா தாலியை’ என்று திருமணத்தை -பயந்து பயந்து நடத்தி முடித்தார்கள்.

. கி.ரா., ஆவணப்படம் வெளியீடு

எதிர்வீட்டில் இரண்டு குடும்பம்; பக்கத்து வீட்டில் இரண்டு குடும்பம் அழைக்கப்பட்டு, வெற்றிலை பாக்கு, எலுமிச்சம் பழம், ஒரு காபியில் திருமணச் செலவு முடித்து விட்டனர்.

இந்தக் கட்டத்தில், ‘ஸ்ட்ரெப்டோமைசின்’ என்ற ஊசி மருந்து காசநோய்க்கு கண்டுபிடிக்கப்பட்டது. 90 நாட்கள் தினம் ஒரு ஊசி போட்டனர். டாக்டருக்கு ஆச்சர்யம். செத்துப் போயிடுவேன்னு நெனைச்சண்டா.. எப்படியோ பொழச்சிட்டியே!’ என்றார்.

அதன்பிறகு குடும்ப வாழ்க்கை, கி.ரா., கணவதியம்மா தம்பதிக்கு 2 பிள்ளைகள், ஒரு பெண் பிறந்தது. பெண் குழந்தை இறந்து விட்டது. பெரிய மகன் திவாகர் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று விட்டார். சின்னமகன் பிரபாகர் ஊரில் விவசாயம் பார்த்தார். பேரன் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறான். பேத்தி ஐஏஎஸ் முடித்தாள். கி.ரா.,வையும் கணபதி அம்மாவையும் என் பெற்றோர்களாக தத்து எடுத்துக் கொண்டு, அவர் குடும்பத்து உறவுகளுடன் இன்றும் தொடர்பில் இருக்கிறேன்.

கணவதி அம்மா போன்ற வீராங்கனை புண்ணியவதி அன்று கரம் பிடிக்காவிட்டால் கி.ரா., வாழ்க்கை பட்டுப்போன செடியாகியிருக்கும்.

குடும்பத்துக்கேற்ற குலவிளக்காக இருந்து தன் கணவர் கி.ரா., வாழ்வில் ஒளியேற்றி வைத்த கணவதியம்மா போன்ற பெண்மணிகளை பெருமைப்படுத்த வள்ளுவர் எழுதிய குறள்:

‘மனைத்தக்க மாண்புடையள் ஆகித் -தற்கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை!’

பின்குறிப்பு: 2019- செப்டம்பர் 25-ந்தேதி 87 வயதில் கணவதியம்மாளும் 2021 மே- 17-ந்தேதி 98 வயதில் கி.ராவும் உலக வாழ்வைத் துறந்து விடைபெற்றுக் கொண்டனர்.

கி.ரா., குடும்பம்

கி.ரா.,வின் நினைவாக, ‘கொங்குமண்டல கி.ரா., இலக்கிய விருது’ ஆண்டு தோறும் வழங்க முடிவெடுத்து முதல் விருதை சென்ற ஆண்டு கி.ரா.வின் கையாலேயே எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு ரூ.5 லட்சம் தொகை வழங்கினோம். ஆண்டுதோறும் அந்த ரூ.5 லட்சம் விருதுத் தொகையை தொடர்ந்து வழங்குவதாக உறுதியளித்த, ‘சக்தி மசாலா’ துரைசாமி-சாந்தி தம்பதியின் கொடையுள்ளத்தைப் போற்றி வணங்குகிறோம்.

***

குறள் கதை: 5 மழை

மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவை உணவு, தண்ணீர், காற்று. மகாத்மா காந்தி உண்ணாவிரத காலங்களில் 20 நாட்கள் கூட உண்ணாமல் தாக்குப் பிடித்திருக்கிறார். தண்ணீர் குடிக்காமல் இரண்டு நாள் இருக்கலாம். ஆனால் சுவாசிக்காமல் 2 நிமிடத்திற்கு மேல் இருக்க முடியாது. பிராணவாயு இல்லாவிட்டால் பிராணன் போய் விடும்.

எனவே மனிதன் உயிர்வாழ மிகவும் முக்கியமானது பிராணவாயு- ஆக்சிஜன். 15 வருடங்களாக எந்த மேடையில் பேசினாலும் நான் இளைய தலைமுறையினரிடம் கெஞ்சிக் கேட்பதே அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் எழுந்து அரைமணிநேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். சுத்தமான பிராணவாயு அப்போதுதான் பூமியின் மீது இருக்கும். ஒரு நாளைக்கு வேண்டிய ஆக்சிஜனை அரை மணி நேரம் நடைப் பயிற்சியின் போது உங்களை அறியாமலே உள்வாங்கிக் கொள்வீர்கள். உங்கள் ஆரோக்கியம் கூடும்.. ஆயுள் நீடிக்கும் என்று கெஞ்சிப் பார்த்து விட்டேன்.

கொரோனா என்ற அரக்கன் வந்து, இரக்கமில்லாமல் ஏழை, பணக்காரன், இளைய தலைமுறை, மூத்த தலைமுறை, ஆரோக்கியமானவன், ஆரோக்கியம் குறைந்தவன், குடிகாரன், குடிக்காதவன்- என்று எந்த பேதமுமில்லாமல் சூறாவளியாக மக்களை அள்ளிப் போகும், இந்த சூழலில்தான் ஆக்ஸிஜன்- பிராணவாயுவின் அருமை மக்களுக்குத் தெரிகிறது.

மலைகளில் மழை

உடம்பில் ஆக்ஸிஜன் லெவல் குறைந்து போய் ஒவ்வொரு ஆஸ்பத்திரிக்கும் சென்று, ஆக்ஸிஜன் வசதி இருக்கிறதா? வெண்டிலேட்டர் வசதி உள்ளதா?- எப்படியாவது இவருக்கு அட்மிஷன் கொடுங்கள். ஆயிரங்கள் அல்ல, பல லட்சம் தருகிறோம் என்று கெஞ்சியவர்களை நான் அறிவேன். ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் வசதி கிடைக்காமல், அகால மரணமடைந்த பல பெரியவர்களை, கோடீஸ்வரர்களை நான் அறிவேன்.

சராசரி மனிதனுக்கு ‘பல்ஸ்- ஆக்ஸி- மீட்டர்’ மூலம் பார்த்தால் 92-லிருந்து 99 வரை ஆக்சிஜன் லெவலை அது காட்டும். 90-க்கு கீழே போனால் எச்சரிக்கை தேவை. 60-க்கும், 40-க்கும் இடையில் ஆக்ஸிஜன் லெவல் இறங்கி விட்டால், ஆண்டவனே காப்பாற்றத் திணறுவான். அதனால் வீட்டில் உட்கார்ந்தபடியே கூட நெஞ்சை நிமிர்த்தி வைத்துக் கொண்டு, நுரையீரல் நிரம்பும் அளவு காற்றை உள்ளே இழுத்து 8 விநாடி நிறுத்தி முழுசாக அதை வெளியே விட வேண்டும். பின்னர் அதேபோல் மூச்சை இழுத்து நுரையீரல் நிரம்பியதும் 8 விநாடி நிறுத்தி மீண்டும் வெளியேற்று. இப்படி 50 தடவை நீ செய்தால் இன்று ஒரு நாளைக்கு வேண்டிய பிராண வாயு உடம்புக்குள் வந்து விடும்.

பிராணாயாமம்

இந்த பிராணவாயுவை உற்பத்தி செய்பவை மரங்கள். சூரியன் மேலே வந்த பிறகு அத்தனை மரங்களும், பிராணவாயுவை உற்பத்தி செய்து, பூமியில் பரப்புகின்றன.

ஊட்டி, கொடைக்கானல் போல மலைகள், மரஞ்செடி கொடிகள் அடர்ந்த பகுதியில் நீங்கள் நடக்கும் போது உங்களை அறியாமலே குதூகலமாக இருப்பீர்கள். காரணம் அப்போது பூமி மீது பிராணவாயு அளவுக்கு அதிகமாக மிதந்து கொண்டிருக்கும்.

ஆக, மரங்கள்தான் பிராணவாயுவை உற்பத்தி செய்கின்றன. மரங்கள் ஆரோக்கியமாக வளர மழை வேண்டும். மரங்களை காடுகளில் கண்மூடித்தனமாக வெட்டியதால்தான் மழை பொய்க்க ஆரம்பித்து புவி வெப்பமயமாதல் நிகழ்கிறது.

கம்மங்கதிர் அறுவடை

ஒரு மரத்தை நீ வெட்ட நேர்ந்தால் 4 மரத்தை சத்தியமாய் நீ வளர்க்க வேண்டும். மழை மேகங்கள் திரள அடர்ந்த காடுகள் தேவை. மழை பெய்தால்தான் மரங்கள் வளரும் என்பது மட்டுமல்ல, உணவு தானியங்களையும் உற்பத்தி செய்யமுடியும்.

எங்கள் பகுதி வறட்சியானது. ஐப்பசி, கார்த்திகை மாத மழை, ஆடி மாத மழை பெய்யும்போது வீட்டு ஓடுகளின் மீது விழும் தண்ணீரை அண்டாக்களில் பிடித்து, காய வைத்து குடிப்போம். சமையலுக்கும் பயன்படுத்துவோம்.

மழை பெய்ததும் பூமியை உழுது கேழ்வரகு, கம்பு, சோளம், தினை, பாசிப்பயிறு, கொள்ளு விதைப்போம். அவை விளைந்தால் அதுதான் உணவு.

ஆக, மழைநீர், மரம் செடி கொடிகள் வளர உணவு தானியங்கள் முளைக்க உதவுகிறது. சமயத்தில் அந்த மழைநீரே உணவாகமும், பயன்படுகிறது என்பதைத்தான் வள்ளுவர்:

‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி -துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை’

என்கிறார்.

---

கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in


தவறவிடாதீர்!

Thirukkural storiesதிருக்குறள் கதைகள்மாண்புடையள்கி.ராஜநாராயணன்கி.ராசிவகுமார்கணவதியம்மாBlogger special

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

bear

பளிச் பத்து 89: கரடி

வலைஞர் பக்கம்

More From this Author

x