

தங்கள் குழந்தையை தனியார் பள்ளிகளில் சேர்க்க நினைக்கும் நடுத்தர குடும்பங்களின் மனோபாவத்தை அழகாக படம்பிடித்துள்ளது தாண்டவ் எனும் இந்திக் குறும்படம்.
11 நிமிடமே கொண்ட இக்குறும்படம் ஆங்கிலக் கல்வி மோகம் சாதாரணக் குடும்பங்களில்கூட என்னவிதமான சலசலப்பை உண்டாக்குகின்றன என்பதை சொல்லத் தவறவில்லை.
ஒரு ஹோலி கொண்டாட்டத்திலிருந்து படம் தொடங்குகிறது. ஒருவருக்கொருவர் வண்ணம் பூசி ஆட்டம் பாட்டம் என கொண்டாடுகிறார்கள் இளைஞர்கள். ஆட்டம் போடும் அந்த இளைஞர்களை தூரநின்று கவனிக்கிறார் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். அவர் தனது அறிவுத்திறன்மிக்க மகளை நன்றாக படிக்கவைக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு. நினைத்தால் ஒரு நிமிடம் ஆகாது பணம் செலவாகும் தன் மகளின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு.. ஆனால் அவர் ஒரு நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள்.
ஆங்கிலக் கல்வியைவிட அதையொட்டிய பல்வேறு பிரச்சனைகள்தான் அவரை தொந்தரவு செய்கிறது. இப்படம் எதற்கும் தீர்வு சொல்ல முனையவில்லை... அதற்குள் படம் வேறெங்கோ சென்றுவிடுகிறது...
நம்மைச் சுற்றியுள்ள எல்லாப் பிரச்சனைகளையும் மண்டையில் ஏற்றிக்கொண்ட சமூகக் கோபம் எவ்வளவு வேடிக்கையானது என்பதைச் சொன்ன தேவசிஷ் மகிஜாவின் இயக்கம் ஒரு நல்ல முயற்சி. நீங்களும் பாருங்களேன் போலீஸ் கான்ஸ்டபிள் மனோஜ் பாஜ்பாயின் தாண்டவத்தை!
</p>