Last Updated : 25 Feb, 2016 09:07 AM

 

Published : 25 Feb 2016 09:07 AM
Last Updated : 25 Feb 2016 09:07 AM

இணையகளம்: அரசியல் சோறு ஊட்டுவது எப்படி?

காலையில் மகளுக்கு இட்லியும் வடகறியும் வைத்து ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தேன். நான் ஊட்டுவது அவளுக்கு இஷ்டம். எந்தக் கலவையில் ஊட்டினால் சுவையாய் இருக்குமோ அப்படி ஊட்டுவேன். இரண்டு வாய் போனதும் தண்ணீர் குடித்தாள். அடுத்து இரண்டு வாய் போனதும் தண்ணீர் குடித்தாள்.

நான் ஆரம்பித்தேன்.

"உனக்கு செம பசி. உன் முன்னாடி நிறைய இட்லி இருக்கு. ஆனா குடிக்க தண்ணி இல்லை"

"ம்ம்ம்"

"உன்னால அந்த இட்லியைச் சாப்பிட முடியுமா?"

கொஞ்ச நேரம் யோசித்தவள், "சாப்பிடலாம்" என்று இழுத்தாள்.

"அது எப்படி பிள்ள முடியும்? இப்ப ரெண்டு வாய் வாங்குறதுக்குக்கே மூணு தடவ தண்ணி குடிக்கிற. உனக்கு விக்காதா?"

"ஆமா விக்கும்"

"இது மாதிரி ஒரு பையனுக்கு நடந்திருக்கு. இப்ப இல்ல 80 வருஷம் முன்னாடி"

"எப்படி?"

"ஒரு பையன் அவன் அண்ணனோட சேர்ந்துகிட்டு அவன் அப்பாவப் பார்க்கப் போனானாம்"

"ம்ம்ம்"

"அவன் அம்மா அவனுக்குச் சாப்பிடுறதுக்கு நல்ல சாப்பாடு செய்து கொடுத்தாங்களாம்"

"ம்ம்ம்"

"ஆனா தண்ணி கொடுக்கலியாம். வழியில யார் கிட்டயாவது வாங்கி குடிச்சிக்கன்னு சொல்லிட்டாங்களாம்"

"ம்ம்ம்"

"அந்தப் பையனும் அவன் அண்ணனும் சரி சாப்பிடலாம்னு, குடிக்க தண்ணி வேணும்னு வழியில ஒரு கிராமத்துல கேட்டாங்களாம்"

"ம்ம்ம்"

"அங்க யாரும் தண்ணி கொடுக்கல."

"ஏன்"

"ஏன்னு சொல்றேன் கேளு. சாப்பிட சாப்பாடு இருக்கு. ஆனா குடிக்க தண்ணி கொடுக்க மாட்டேங்குறாங்க. அதனால சாப்பிடவே முடியாம அந்தப் பையனும் அண்ணனும் நைட் எல்லாம் பசியோட அப்பா கிட்ட போய்ச் சேர்றாங்க"

"ம்ம்ம்"

"நினைச்சுப் பாரு சாப்பிட சாப்பாடு இருக்கு ஆனா சாப்பிட முடியல. பாவம் இல்ல?!"

"ஆமா. ஏன் அவருக்குத் தண்ணி கொடுக்க மாட்டேங்குறாங்க"

"சொல்றேன். அதுக்கு முன்னாடி நீ 'டிஸ்கிரிமினேஷன்'னு ஒரு வார்த்தையோட அர்த்தம் தெரிஞ்சிக்கணும். ' டிஸ்கிரிமினேஷன் 'னா 'பாகுபாடு'ன்னு அர்த்தம்”

'"ம்ம்ம்"

"ஒரு உதாரணம் சொல்றேன். உன் கிளாசுல மிஸ் வந்து பையன்களுக்கு எல்லாம் சாக்லேட் கொடுக்குறாங்க. பொண்ணுங்களுக்குக் கிடையா துன்னு சொல்றாங்க. அது என்னது"

"அதெப்படி ரெண்டு பேருக்கும் கொடுக்கணும்"

"அப்படி கொடுக்கலன்னா. அதுதான் பாகுபாடு”

"ம்ம்ம்"

"இப்ப அமெரிக்காவுல அந்த காலத்துல எல்லாம் கருப்பா இருக்கிறவங்கள வெள்ளையா இருக்கிறவங்க மதிக்க மாட்டாங்க. ட்ரைன்ல கூட ஏற விட மாட்டாங்க . அதாவது வெள்ளையா இருக்கிறவன் உசத்தின்னு பாகுபாடு காட்டுனாங்க"

"ம்ம்ம்"

"அது மாதிரி இந்தியாவுல அந்தக் காலத்துல உயர்ந்த ஜாதின்னு கருதிக்கிட்ட ஜாதி, தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்ட ஜாதின்னு பிரிச்சு வைச்சி, தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரங்களுக்கு தண்ணி கூட குடுக்காம அவமானப்படுத்தினாங்க"

"அந்தப் பையன் அப்போ தாழ்த்தப்பட்ட ஜாதியா? அதனாலதான் அவனுக்கு தண்ணி கொடுக்கலியா?"

"ஆமா"

"அது தப்புதானே"

"ஆமா அது பாகுபாடுதான். அதான் அந்தப் பையன் பின்னால நல்லா படிச்சு பெரிய ஆளா வந்து அப்படி பாகுபாடு தப்புன்னு தட்டிக் கேட்டார்."

"ம்ம்ம்"

"தட்டிக் கேட்டு உரிமை வாங்கி கொடுத்தாரு"

"யாரு அது"

"அது நம்ம அம்பேத்கர்தான்"

"அம்பேத்கரா? எனக்கு அவர தெரியுமே. நீங்க சொல்லிக் கொடுத்து இருக்கீங்களே. நம்ம வீட்ல அவர் கேலண்டர் கூட இருக்கே"

"ஆமா அதே அம்பேத்கர்தான்"

இட்லி வடகறியுடன் சேர்த்து அம்பேத்கரையும் ஊட்டிவிட்டேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x