Published : 21 Jul 2021 05:02 PM
Last Updated : 21 Jul 2021 05:02 PM

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தாம்பூலத் தட்டுடன் நூதனப் போராட்டம்

எஸ்.பி.வேலுமணி: கோப்புப்படம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேட்டு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளதையடுத்து, அதற்கு ஏதுவாக அவருக்கு எதிரான சங்கதிகள் அரசியல் வட்டாரத்தில் வேகமெடுத்துள்ளன. அதிலொன்றாகவே, கோவை மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் வெற்றிலை பாக்குத் தட்டுடன் நடத்திய நூதனப் போராட்டம் பேசப்படுகிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் பிரச்சாரத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்கள் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி. இவர்கள் பொறுப்பில் இருந்த உள்ளாட்சித் துறை மற்றும் மின்வாரியத் துறையில்தான் அதீத முறைகேடுகள் நடந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, திமுக முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினே போகிற இடங்களில் காட்டமாகப் பேசினார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

குறிப்பாக, "கொங்கு மண்டலத்தில் இரண்டு மணிகள். ஒன்று வேலுமணி, இன்னொன்று தங்கமணி. இவர்கள் இருவருமே ஊழல் மணிகள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல்வேளையாக நடவடிக்கை எடுக்கப்போவது இவர்கள் மீதுதான்!" என்றே ஸ்டாலின் பேசிவந்தார்.

அதிலும் வேலுமணியின் சொந்தத் தொகுதி தொண்டாமுத்தூரில் பிரச்சாரம் செய்த வேளையில், திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, திமுக நட்சத்திரப் பேச்சாளர் லியோனி போன்றோர் "வேலுமணிக்கு கோவை சிறை ரெடி; அவர்களுக்கு சிறைக் கைதிகளுக்கான ஆடையும் தயார்!" என்றே வீதிக்கு வீதி பிரச்சாரம் செய்தனர்.

"கோவை மாவட்டத்தில் 10-க்கு 10 வென்றதோடு, கோவை மண்டலத்தில் பெரும்பான்மை தொகுதிகளை அதிமுகவே கைப்பற்றியதாலும், தொடர்ந்து கரோனா பெருந்தொற்று கோவையிலேயே முதலிடத்தில் இருந்ததாலும், முன்னாள் அமைச்சர்கள் மீதான முறைகேட்டு புகார்கள் தூசி தட்டப்படாமல் உள்ளது; தொற்று சரிப்படுத்தப்பட்டவுடன் மேற்படி கோப்புகள் வேகமெடுக்கும்!" என்பதே திமுக, அதிமுக பிரமுகர்களிடம் பேச்சாக இருந்தது. தொற்று குறைந்து இயல்பு வாழ்க்கை வேகமெடுக்கும் தற்போதைய நிலையில், அந்தக் கோப்புகள் தூசி தட்டப்பட்டு வருவதாகச் சொல்கிறார்கள். முக்கியமாக, அதிமுகவினர் மத்தியிலேயே இந்தப் பேச்சு அதிகமாக உள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கக் கோரி, திமுக எம்.பி., ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, "வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை" என முன்பு கூறப்பட்டிருந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு, இரண்டு நாட்கள் முன்பு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "டெண்டர்கள் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளன. கணக்குத் தணிக்கை துறை அறிக்கை அளித்துள்ளது. அதன் மீது விசாரணை நடத்தி, தேவைப்பட்டால் வழக்குப் பதிவு செய்யப்படும்!" எனக் கூறி, எட்டு வார கால அவகாசம் கோரினார்.

அதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2-வது வாரத்துக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், "முழுமையாக விசாரணை நடத்தி, தவறு செய்ததாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், ''அதிமுக ஆட்சியில் முறைகேடாக கோவை மாநகராட்சி தூய்மைப் பணிக்கு நியமனம் செய்த 325 பேர் எங்கே? சாதிக்கொரு நீதியா? தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் தூய்மைப் பணி; மற்றவர்களுக்கு அலுவலகப் பணியா? துப்புரவுப் பணியாளர் பணிக்கு வந்துவிட்டு அப்பணியைச் செய்ய மறுக்கும் மற்றவரையும் தூய்மைப் பணி செய்திட தாம்பூலத் தட்டுடன் அழைப்பு. நிகழ்வு நாள் 20.07.2021, காலை 11 மணி, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம்!'' என்ற அறிவிப்புடன் கூடிய அழைப்பிதழை சமூக நீதிக் கட்சி என்ற பெயரில் சிலர் விநியோகித்தனர்.

அதில், குறிப்பிட்டிருந்தபடியே நேற்று (ஜூலை 20) செவ்வாயன்று கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் முன்பு, தேங்காய் பழம் - வெற்றிலை பாக்குத் தட்டு சகிதம் 50-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் ஆஜராகினர். இந்தத் தாம்பூலத் தட்டுகளுடன், கோரிக்கை மனு ஒன்றையும் ஊர்வலமாகச் சென்று (போலீஸ் பாதுகாப்புடன்) அலுவலகத்தினுள் நிர்வாக அலுவலரிடம் வழங்கினர்.

தாம்பூலத் தட்டுடன் மனு அளித்தபோது.

மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் 12 பெயர்களைச் சுட்டிக்காட்டி, "இவர்கள் எல்லாம் இந்த மண்டலத்தில் சென்ற ஆண்டு துப்புரவுப் பணிக்காக எஸ்.பி.வேலுமணியால் பணியமர்த்தப்பட்டவர்கள். ஒரு நாளும் அவர்கள் துப்புரவுப் பணி செய்ய வரவில்லை. ஏ.ஓ அசிஸ்டெண்ட், ப்ராப்பர்ட்டி டேக்ஸ் புக் தருபவர் கரோனா கண்ட்ரோல் ரூம், கிரீவன்ஸ் ஒர்க், செக் கிளார்க் அசிஸ்டெண்ட் இப்படி அலுவலக வேலை பார்க்கிறார்கள். இவர்கள் எல்லாம் தாழ்த்தப்பட்ட சமூகம் அல்லாதவர்கள்.

இதே துப்புரவுப் பணியாளர் பணியில் இருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இவர்களை விட முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் துப்புரவு வேலைதான் செய்கிறார்கள். அவர்களை ஒன்று அலுவலக வேலையில் அமர்த்துங்கள். இல்லையென்றால் இப்போது அலுவலக வேலையில் இருக்கும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் அல்லாதோரை எங்களுடன் துப்புரவுப் பணிக்கு அனுப்புங்கள்!" என்று வாக்குவாதம் செய்தனர். அலுவலர் பொறுமையாக, "கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன்" என சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்து என். பன்னீர்செல்வம் பேசும்போது, "எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருக்கும்போது போன வருஷம் 549 பேரை துப்புரவுப் பணியாளர் பணிக்கு எடுத்தாங்க. அதில், 325 பேர் இன்று வரை தூய்மைப் பணிக்கே வரவில்லை. அவர்கள் எல்லாம் தாழ்த்தப்பட்ட சமூகம் அல்லாதவர்கள்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அப்பா இல்லாமல், அம்மா இல்லாமல் அவர்களின் வாரிசுக்கு, கருணை அடிப்படையில் வந்தவர்கள். கரோனா காலத்தில் துப்புரவுப் பணியில் உயிரைத் துச்சமாக மதிச்சு வேலை செய்யும்போது, இந்த 325 பேர் மட்டும் வெட்டியாக சேரில், அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். சம்பளம் மட்டும் போயிட்டே இருக்கு.

என். பன்னீர்செல்வம்

தமிழகத்துல மட்டும் இதுபோல 20 ஆயிரம் பேர் உள்ளார்கள். இது எல்லாம் தகவல் உரிமை பெறும் சட்டத்தில் கேட்டு ஆதாரங்களாகப் பெற்றுள்ளோம். போன ஆட்சியில் புகார் செஞ்சும் நடவடிக்கை எடுக்கலை. இந்த ஆட்சியிலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்னுதான் இந்த நூதனப் போராட்டம் வழியா கவனத்துக்குக் கொண்டு வர்றோம்!" என்றார்.

பொதுவாக இதுபோன்ற போராட்டக்காரர்களை கோவையில் போலீஸார் அவ்வளவு சுலபமாய் விடமாட்டார்கள். கொடும்பாவி உருவங்களைப் பிடுங்கிக் கொள்வார்கள்; தாம்பூலத் தட்டு போன்ற நூதனப் போராட்ட முறையில் வருபவர்களையும் தடுத்து கைது செய்து விடுவார்கள்.

ஆனால், இவர்கள் அழைப்பிதழ் அச்சடித்து விநியோகித்து, தாம்பூலத் தட்டுடன் அலுவலகத்துக்குள் நுழைந்து அலுவலரிடம் வாக்குவாதம் செய்து, தாம்பூலத் தட்டைக் கொடுத்துவிட்டு வர அனுமதித்திருக்கிறார்கள் என்றால், அதில்தான் அரசியல் இருக்கிறது என்கிறார்கள் சிலர்.

அதாவது, முன்னாள் அமைச்சர்கள் மீது முறைகேட்டு புகார்கள் தூசி தட்டி எடுக்கப்படுகின்றன. கைதுக்கான ஏற்பாடுகளும் மும்மரமாக நடக்கின்றன. அதே சமயம், திடீரென்று அவர்களைக் கைது செய்து விட முடியாதல்லவா? மக்கள் மத்தியிலும் அவர்களுக்கு எதிர்ப்பு இருக்கிறது என்பதை மீடியாக்கள் மூலம் உருவாக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளில் ஒன்றே இது என்கிறார்கள்.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய கோவை மாநகராட்சி ஊழியர் ஒருவர், "தாழ்த்தப்பட்டோர் அல்லாத துப்புரவுப் பணியாளர்கள் எல்லாம் அலுவலகத்தில் கோப்புகள் பகிர்மானம் செய்யப்படும் இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லாமே முன்னாள் அமைச்சரின் உளவாளிகள். இங்கே எந்த கோப்பு நகர்ந்தாலும், யார் ஏதாவது விசாரித்தாலும் அவர் தரப்புக்கு உடனே தகவல் சென்று விடும். இதைக் கோவையில் சொல்வதற்கு மட்டுமே 324 பேர் உள்ளார்கள். இதுபோல தமிழகம் முழுக்க எவ்வளவு பேர் எனத் தெரியவில்லை.

இவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதும், பணி மாற்றி விடுவதுமே அந்தந்த அதிகாரிகளுக்குத் தலைவலியாக இருக்கிறது. எனவேதான், இப்படியொரு பிரச்சினை இருக்கிறது என்பதை இப்படி அதிகாரிகளே பின்னால் இருந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்!" என்றார்.

இதைப் பற்றி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் கேட்டோம். அவர் பேட்டியளிக்க மறுத்துவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x