

ஆப்பிரிக்க-அமெரிக்க குடியுரிமைப் போராளி
ஆப்பிரிக்க - அமெரிக்க குடியுரிமைப் போராளியும், நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய் என போற்றப்பட்டவருமான ரோசா பார்க்ஸ் (Rosa Parks) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# அமெரிக்காவின் அலபாமா மாநிலம், டஸ்கிகீ நகரில் பிறந்தார் (1913). ரோசா லூசி மெக்காலி என்பது இவரது இயற்பெயர். கலப்பு இனத்தைச் சேர்ந்தவர். தந்தை ஒரு தச்சர். 5 வயதில் பெற்றோர் பிரிந்ததால் தாய்வழி உறவினர்களுடன் வாழ்ந்து வந்தார். திருமணத்துக்குப் பிறகு பட்டப் படிப்பை முடித்தார்.
# சிறு வயது முதலே துணிச்சல் மிக்கவர். ‘நான் கருப்பினத்தைச் சேர்ந்தவள் என்பதற்காக யாருக்கும் குறைந்தவள் இல்லை என்பதில் சிறு வயது முதலே உறுதியாக இருந்தேன்’ என்று கூறியுள்ளார். அந்த காலகட்டத்தில் இன வேற்றுமை சட்டங்கள் அமலில் இருந்தன. பொது போக்குவரத்துகளில் கருப்பர்களுக்குத் தனியான இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
# பேருந்தில் வெள்ளையர்களுக்கான இடம் காலியாக இருந்தாலும் அங்கு கருப்பர்கள் அமரக்கூடாது, அதேசமயத்தில் வெள்ளையர்கள் அதிகமாக இருந்தால் இவர்கள் தங்கள் இடத்தை விட்டுத்தர வேண்டும் என்பதே எழுதப்படாத சட்டமாக இருந்தது.
# ஒருமுறை கூட்டம் அதிகமாக இருந்ததால் வெள்ளையர்களுக்கு இடம் இல்லாமல் போனது. வழக்கம் போலவே நடத்துநரின் உத்தரவின் பேரில் மற்றவர்கள் எழுந்து அவர்களுக்கு இடம் தந்தனர். ஆனால், இவர் தன் இருக்கையை அவர்களுக்கு விட்டுத் தர மறுத்துவிட்டார். இவர் மீது விதி மீறல் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
# இந்த நிகழ்ச்சி கருப்பின மக்களிடையே விழிப்புணர்வையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. ‘மான்ட்கோமரி எழுச்சி இயக்கம்’ தொடங்க இந்த நிகழ்வே காரணமாக இருந்தது. இந்த இயக்கம், ‘மான்ட்கோமரி பேருந்து புறக்கணிப்பு’ என்ற வரலாற்றுப் புகழ்பெற்ற அறப்போராட்டப் புயலாக மாறியது.
# பல நூறு ஆண்டுகளாக நிறத்தின் பெயரால் தாங்கள் இழந்து வந்த உரிமைகளை மீட்டெடுக்கும் எழுச்சியுடன் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் வீறுகொண்டு எழுந்தனர். பேருந்தை புறக்கணித்து மற்ற வாகனங்களிலும் நடந்தும் பயணம் மேற்கொண்ட னர். 382 நாட்கள், இந்தப் புறக்கணிப்புப் போராட்டம் தொடர்ந்தது.
# இறுதியில் அமெரிக்க உச்ச நீதி மன்றம் இருக்கைகள் தனியாக பிரிக்கப்படும் சட்டத்தை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவித்தது. அமெரிக்காவின் சிவில் உரிமைகள் இயக்கத்தின் முக்கிய தலைவரானார். சிறை சென்றதால் இவரது வேலை பறிபோனது.
# 1992-ல் ‘ரோசா பார்க்ஸ்: மை ஸ்டோரி’ என்ற சுயசரிதை நூலை எழுதி வெளியிட்டார். இவரது இறுதிச் சடங்கில் டெட்ராய்ட், மான்ட்கோமெரி நகரங்களில் அரசு மரியாதை செய்யப்பட்டது. இந் நகரங்களில் ஓடிய பேருந்துகளின் முன் இருக்கைகளில் கருப்பு நிற ரிப்பன்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இவரது பெயரில் வானொலியில் பாடல் ஒலிபரப்பப்பட்டது.
# ‘மைட்டி டைம்ஸ்: தி லெகசி ஆஃப் ரோசா பார்க்ஸ்’ என்ற ஆவணத் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. பல பொது இடங்களுக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டது. இவரது உருவம் பொறித்த அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. உலகம் முழுவதிலும் 24 பல்கலைக்கழகங்கள் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கின.
# இவரது பிறந்த தினம் மற்றும் இவர் கைது செய்யப்பட்ட தினம் இரண்டுமே ‘ரோசா பார்க்ஸ் தினம்’ என்று பல இடங்களில் கொண்டாடப்படுகிறது. இனவெறிக்கு எதிராக அறவழியில் போராடி, கருப்பின மக்களின் உரிமை போராட்டத்தை வலுவடையச் செய்த ரோசா பார்க்ஸ், 2005-ம் ஆண்டில் 92-ம் வயதில் காலமானார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்