Published : 19 Jul 2021 09:43 AM
Last Updated : 19 Jul 2021 09:43 AM

திரைப்படச்சோலை 50: சமர்ப்பணம்

திருமலை தென்குமரி

சிவகுமார்

எனது திரையுலக வாழ்க்கைக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் என்றால் முதலில் ஏவிஎம் நிறுவனத்திற்குத்தான் சொல்ல வேண்டும். ‘காக்கும் கரங்கள்’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி, ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் சத்தியம் மட்டுமே பேசும் சத்தியமூர்த்தியாக திரையில் என்னை வாழ வைத்தவர்கள்...

அதன் பிறகு பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் -ஒவ்வொரு செங்கல்லாக வைத்து கட்டடத்தை எழுப்புவது போல -தங்கள் படங்கள் மூலம் படிப்படியாக நான் வளர உதவினார்கள்.

இவர்களில் இயக்குனர் சிகரம் கே.பி. மிக முக்கியமானவர். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ , ‘அக்னி சாட்சி, ‘சிந்துபைரவி’ -பாலச்சந்தருக்கு பிடித்த அவரது 5 படங்களில் மூன்று. மூன்றுமே முத்துக்கள்.

மாசு மருவில்லாத கதாநாயகனாக அந்த 3 படங்களிலும் என்னை நடிக்கச்செய்தவர். எல்லோரையும் தாண்டி நான் முழுமையாக நன்றி தெரிவிக்க வேண்டும் என்றால் அது அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் அவர்களுக்குத்தான். இந்தக் கட்டுரையை அவருக்குச் சமர்ப்பணம் செய்வதில் நெகிழ்ச்சியடைகிறேன்.

சிறு வயது முதலே நான் நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து வளர்ந்தவன். 16 வயதிலேயே யோகக்கலை பயின்று கொண்டவன் என்ற போதிலும், இன்று முருகக்கடவுள் என்ற வார்த்தையை யார் உச்சரித்தாலும் அவர்கள் நினைவில் வருவது முதலில் என் முகம்தான். அந்த வேடத்தை பல போட்டிகளுக்கிடையே கொடுத்து ஆசீர்வதித்தவர்.

நான் வரைந்த ஓவியம்

‘எல்லா தீய பழக்கங்களும் எளிதில் மனிதனைப் பற்றிக் கொள்ளும் துறை இது. இன்னும் சொல்லப் போனால் இலவசமாகவே எல்லாம் கிடைக்கும் உலகம் இது. இதில் புகை, மது, மாது தவிர்த்து உங்களால் வாழ முடியும் என்றால் - உங்களுக்கு திரையுலகில் ‘மார்க்கட்’ 20 வருடம் என்றால் உங்கள் குணநலன்களுக்கு 10 ஆண்டுகள் போனஸாக வாய்ப்புகள் கிடைக்கும்!’ என்றார். 40 ஆண்டுகள் சினிமா -சின்னத்திரை இரண்டிலும் நடித்து சலித்துப் போய் நானாகத்தான் வெளியேறினேன்.

தூய தமிழ்வசனங்களை தெளிவாக நான் உச்சரிக்க அவர் படங்களே காரணம். ராமாயணம்-மகாபாரதம் உரைகளை நான் நிகழ்த்தியதை இன்று அவர் உயிரோடு இருந்து பார்த்திருந்தால் பெற்ற பிள்ளைக்கு மேலாக உச்சி மோந்து என்னைக் கொண்டாடி இருப்பார்.

இந்தத் தொடரை நிறைவு செய்ய நினைத்தபோது, வளரும் பருவத்தில் தொடர்ந்து தன்னுடைய 13 படங்களில் வாய்ப்புக் கொடுத்து என்னை உயர்த்தி விட்ட அவருக்கு, ‘திரைப்படச்சோலை’ -தொடரை சமர்ப்பிப்பதில் உண்மையில் மனநிறைவு கொள்கிறேன். இதன் தொடர்ச்சியாக வாசகர்களுக்கு அவர் வாழ்க்கையை சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன்.

சேலம் மாவட்டம் சங்ககிரி பக்கத்தில் உள்ள அக்கம்மா பேட்டையில் ஜமீன்தார் பரமசிவம்-லட்சுமி அம்மையாருக்கு 1928, ஏப்ரல் மாதம் 24-ம் தேதி பிறந்தவர் ஏ.பி.என் அவர்கள். இளம் வயதிலேயே பெற்றோர் மரணமடைந்ததால், மாமா வீட்டில் இருந்த பாட்டி ஆதரவளித்தார். எங்கும் தங்க முடியாது என்ற நிலையில் 5 வயதில் நாடகக்கம்பெனியில் சேர்ந்து விட்டார். டி.கே.எஸ்., நாடகக் குழுவில் சிறுவனுக்கு பால சீதை வேடம் கொடுத்தார்கள். ‘சிவலீலா’ நாடகத்தில் பார்வதி தேவி வேடம்.

அம்மா, துணைவியுடன்

‘குமாஸ்தாவின் பெண்’- நாடகத்தில் கதாநாயகி. அண்ணா, பெரியார் எல்லாம் நாடகம் பார்த்தனர். அந்த நாடகத்தை திரைப்படமாக்க நினைத்த ஜெமினி வாசன் அவர்கள் எம்.வி. ராஜம்மாவை அழைத்து வந்து நாடகம் பார்க்க வைத்தார். அந்தச்சிறுவன் பெண் வேடத்தில் நடித்ததில் 50 சதவீதம நீ நடித்தாலே படம் மாபெரும் வெற்றி பெறும் என்றார்.

டி.கே.எஸ். நாடகக்குழுவுடன் சக்தி நாடக சபாவிலும் நடித்தார் ஏபிஎன். அப்போது சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் அங்கு நடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போதே சத்தியவான் சாவித்திரி கதையை, ‘விதியின் வெற்றி’ என்ற பெயரில் நாடகமாக எழுதி அரங்கேற்றினார் ஏபிஎன். சாவித்திரி எமனைத் தொடர்ந்து மேல் உலகம் போகும்போது தீப்பாலத்தைக் கடக்கும்

காட்சியில் அசல் தீப்பாலம் போல -ஸ்டேஜில் நெருப்பு எரிவதைக் காட்டி ஆடியன்ஸை சிலிர்க்க வைத்தார்.

நாடகத்துறையில் தேக்கம் ஏற்பட்ட போது -மாடர்ன் தியேட்டர்ஸ் வந்து உதவி ஒளிப்பதிவாளராக பயிற்சி எடுத்தார். மீண்டும் நாடகக்கலைஞர்கள் வற்புறுத்தலில், நாடகக்கம்பெனி சென்று தஞ்சை ராமையாதாஸ் எழுதிய ‘மச்சரேகை’ அரங்கேற்றினார். பலத்த வரவேற்பு கிடைத்ததும், ‘பகடை பன்னிரண்டு’, ‘பொன் முடி’ , ‘சரஸ்வதியின் சபதம்’ நாடகங்களை அரங்கேற்றினார்.

ரங்கசாமி ரெட்டியார், துணைவியார் நல்லபடியாக நடந்த நாடகக்கம்பெனி மீண்டும் படுத்தபோது, போட்டிருந்த நகை நட்டெல்லாம் விற்று 60 நடிகர்களுக்கும் சோறு போட்டனர்.

ஒரு கட்டத்தில், சென்னை சென்று சினிமாவில் வெற்றி பெற்று திரும்பி வந்து உங்களுக்கு உதவி செய்வேன்; வரவில்லை என்றால் நான் செத்து விட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள்!’ எ்னறு சொல்லி புறப்பட்டார் ஏபிஎன்.

பெண் வேடம்

வாக்களித்தபடி திரும்பி வந்து ஆரணியிலும், கோவையிலும் ரங்கசாமி ரெட்டியாருக்கு உணவு விடுதி வைத்துக் கொடுத்தார்.

சென்னை புறப்படும் முன் ரங்கசாமி கொடுத்த சரஸ்வதி சபதம் -நாடகக் கதைதான் பிற்காலத்தில் பல மாற்றங்கள் செய்து மாபெரும் வெற்றி பெற்ற அவரது சரஸ்தியின் சபதம் திரைப்படம்.

பள்ளிக்குச் செல்ல வாய்ப்புக் கிடைக்காத போதும், புராண இதிகாச நூல்களை வாங்கிக்குவித்து இடைவிடாது படித்துக் கொண்டே இருந்தார். கி.வா.ஜ, ம.பொ.சி., வாரியார், டி.கே.சண்முகம் ஆகியோரை தன் இல்லம் வரவழைத்து இலக்கிய விவாதம் நடத்துவார்.

தேசியவாதி, தமிழ்மீது பற்று மிக்கவர், ம.பொ.சி அவர்களின் தமிழரசு கட்சியில் முக்கிய உறுப்பினர். ‘சாட்டை’ என்ற பெயரில் சிற்றிதழ் கூட நடத்தினார். கவி காமு.ஷெரீப் அதற்கு பெரும் ஆதரவளித்தார்.

ஏசுநாதர் 19 வயதில் பெற்றோரை பிரிந்து போனவர், 32 வது வயதில் திரும்பி வந்தார் என்று சொல்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில் அவர், இந்தியா வந்து இமயமலை உச்சியில் சித்தர்களுடன் வாழ்ந்து சித்து வித்தைகளையெல்லாம் கற்றுச் சென்றிருக்கிறார்.

அதனால்தான், ஒரு அப்பத்திலிருந்து 100 அப்பளத்தை வரவழைத்தார். ஒரு குவளை திராட்சை ரசத்திலிருந்து ஒரு பீப்பாய் திராட்சை ரசம் வரவழைக்க முடிந்தது- என்ற செய்தியை எல்லாம் எம்ஜிஆருடன் பேசி அது சம்பந்தப்பட்ட நூலை எம்ஜிஆருக்கு கொடுத்தார் ஏபிஎன்.

ஏபிஎன் அம்மாவழி பாட்டியும், ராமநாதபுரம் ராஜாவின் அம்மா வழிப்பாட்டியும் சகோதரிகள். ராஜாவுக்கு ஏபிஎன் சகோதரர் முறை. ‘ஏனப்பா தாடி வளர்த்தகிட்டு சாமியார் மாதிரி சுத்தறே? அரண்மனையிலேயே செளகர்யமா இருக்கலாம்ல’ என்று அவர் கேட்க, ‘சினிமாவில் எப்படியும் ஜெயிப்பேன். அரண்மனை சுகங்கள் எனக்கு ஒத்து வராது!’ என்றாராம் ஏபிஎன்.

பெண்ணரசி

‘நால்வர்’ நாடகம். கொள்ளு தாத்தா- தாத்தா- அப்பா-மகன் 4 தலைமுறைக்கதை. நால்வரும் கடமை தவறாதவர்கள். காவல்துறை அதிகாரி -துணிக்கடை அதிபர் -சீர்திருத்தவாதி- வழக்கறிஞர், இந்த குணச்சித்திரங்களை வைத்து பின்னப்பட்ட ஏபிஎன் நாடகம் எம்.ஏ.வேணு திரைப்படமாக தயாரிக்க அது பெரும் வெற்றி பெற்று ‘நால்வர்’ நாகராஜன் ஆனார். ‘மாங்கல்யம்’- அடுத்தபடம்- டாக்டருக்கு படித்த பையன். ஏழை வேலைக்காரப் பெண்ணைக் காதலித்து பல தடைகள் தாண்டி திருமணம் செய்யும் கதை. ஏபிஎன் கதை, வசனம், நடிப்பு. கே. சோமு இயக்கம். எம்.ஏ.வேணு தயாரிப்பு.

1955-ல் ‘பெண்ணரசி’ -மனோகரா பாணி ராஜாராணிக்கதை. இவரே எழுதி ஹீரோவாக நடித்தார்.

1956-ல் வெளியான, ‘நான் பெற்ற செல்வம்’ படத்தில்தான் திரையுலகில் ஏபிஎன்னும், சிவாஜியும் முதன்முதல் இணைந்தனர். அந்தப்படத்தில் ஏற்கனவே திருவிளையாடலில் வரும் சிவன்-நக்கீரன் காட்சி வைத்து விட்டார். சிவாஜி ஒருவரே நக்கீரனாகவும், சிவனாகவும் நடித்திருக்கிறார்.

1957-ல் வி.கே.ராமசாமி அண்ணா, ஏபிஎன் கூட்டாகச் சேர்ந்து ‘லட்சுமி பிக்சர்ஸ்’ பெயரில் தயாரிப்பு கம்பெனி துவக்கி தயாரித்த முதல் படம் ‘மக்களைப் பெற்ற மகராசி’- அதில் சிவாஜி மட்டும் கொங்கு தமிழ் பேசி அசத்தியிருப்பார்.

சூலூரில் விழா

வி.கே.ஆர் எழுதிய கதை ‘நல்ல இடத்து சம்பந்தம்’. திரைக்கதை, வசனம் ஏபிஎன் எழுதினார். நாடகங்கள் சரியாகப் போகாமல் சினிமா வாய்ப்பும் இல்லாமல் இருந்த எம்.ஆர்.ராதா அவர்கள், ‘தம்பிங்களா! நீங்க படம் எடுக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன். எனக்கு ஒரு வேஷம் குடுங்க. நீங்க தர்ற சம்பளத்தை வாங்கிட்டு, ஒழுங்கா வந்து நடிச்சுத் தர்றேன்- என்று சொல்ல, ‘நல்ல இடத்து சம்பந்தம்’ படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்து படம் வெற்றி பெற்றதும், மீண்டும் நிறைய வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன.

கே.சோமு இயக்கத்தில் எம்.ஏ.வி. பிக்சர்ஸ் தயாரித்த, ‘சம்பூர்ண ராமாயணம்’ திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்டரின் நிழலாய் இருந்து நினைத்தபடி படத்தை முடிக்க உதவினார் ஏபிஎன்.

சம்பூர்ண ராமாயணம்

பெரியார் கடவுள் மறுப்பு போராட்டம் உச்சம் பெற்றிருந்த காலகட்டம் அது. அவர் நடத்திய ஊர்வலத்தில் ராமர் சிலைக்கு செருப்பு மாலை போடுகிறார்கள். அறிஞர் அண்ணா, ‘கம்பரசம்’- என்ற நூல் எழுதி கம்பன் சிற்றின்பப் பிரியன், முழுமையான பக்தி நூல் அல்ல ராமாயணம் என்று முழங்கிக் கொண்டிருக்கிறார். வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாக வைத்து- ராவணனை ஹீரோவாக்கி, ராமனை குடிகாரனாக்கி, வில்லனாக்கி, ‘கீமாயணம்’ நாடகம் போடுகிறார் எம்.ஆர்.ராதா.

இப்படிப்பட்ட சூழலில் சம்பூர்ண ராமாயணத்தை எடுத்து வெற்றி கண்டது அசுர சாதனை.

தெலுங்கில் ராமனாகவும், கிருஷ்ணனாகவும் மக்கள் கையெடுத்துக் கும்பிடும், என்.டி.ராமாராவை முதன் முதல் ராமர் வேடம் போடச் செய்து உங்கள் முகம் கடவுள் வேடம் போட ஏற்றது என்று சொன்னவர் ஏபிஎன்.

ராஜேந்திர சோழன்

கே.சோமுவுடன் 10 படங்கள். சோமு-வேணு-ஏபிஎன் மும்மூர்த்திகளாக வலம் வந்தனர்.

மக்களைப் பெற்ற மகராசி, பாவை விளக்கு, வடிவுக்கு வளைகாப்பு, குலமகள் ராதை, நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட் செல்வர், தில்லானா மோகனாம்பாள், வா ராஜா வா, திருமலை தென்குமரி, கண்காட்சி, அகத்தியர், காரைக்கால் அம்மையார், மேல் நாட்டு மருமகள் என்று அவர் சம்பந்தப்பட்ட 41 படங்களில் இவை பேர் சொல்லும் படங்கள்.

1977-ல் அவர் மறைந்தபோது ‘ஒரு பல்கலைக்கழகம் மறைந்து விட்டது!’ என்று எஸ்.எஸ்.ஆர் என்னிடம் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்.

----

திரைப்படச்சோலை இந்த அத்தியாயத்துடன் நிறைவு பெறுகிறது. அடுத்த பகுதி ‘திருக்குறள் கதைகள் 100’ என்ற தலைப்பில் வெளிவரும்.

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x