

இந்தி, சமஸ்கிருத அறிஞர், கவிஞர்
இந்தி, சமஸ்கிருத அறிஞரும், கவிஞருமான ஆச்சார்ய ஜானகி வல்லப சாஸ்திரி (Acharya Janaki Vallabh Shasthri) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l பிஹார் மாநிலம் கயா மாவட்டத்தின் மைகரா என்ற கிராமத்தில் (1916) பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்தார். குடும்ப வறுமை காரணமாக தந்தையால் முறையான கல்வியை வழங்க முடியவில்லை. ஆனால், சமஸ்கிருதம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார்.
l அரசு சமஸ்கிருத தேர்வில் 11 வயதிலேயே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 16 வயதில் சாஸ்திரி பட்டம் பெற்று காசி இந்து பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அப்போதே எழுதவும் தொடங்கிவிட்டார். 1935-ல் ‘சாகித்ய ஆச்சார்யா’ பட்டமும் தங்கப் பதக்கமும் பெற்றார். ‘சாகித்ய ரத்னா’ பட்டமும் பெற்றார்.
l வருமானம் ஈட்ட பல்வேறு இடங்களில் வேலை செய்தார். லாகூரில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் மத்தியப் பிரதேசம் ராய்கட் சமஸ்தானத்தில் அரச கவிஞராகப் பணியாற்றினார். வேதாந்த சாஸ்திரி மற்றும் வேதாந்த ஆச்சார்யா தேர்வுகளில் பிஹார் மாநிலத்திலேயே முதலாவதாக தேறினார். எழுத்தாற்றலும் நாளுக்கு நாள் மெருகேறியது.
l ஆரம்பத்தில் சமஸ்கிருதத்தில் கவிதைகள் எழுதிவந்தார். இவரது ‘காகலீ’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு சமஸ்கிருத இலக்கியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து ‘பந்தீமந்திரம்’, ‘லீலாபத்மம்’ உள்ளிட்ட கவிதைகள் வெளிவந்தன. 7 தொகுதிகளுடன் இவர் படைத்த ‘ராதா’ என்ற மகாகாவியம் பெரும் வரவேற்பை பெற்றது.
l மகாகவி நிராலா, ஜயசங்கர் பிரசாத் போன்ற கவிஞர்களின் தாக்கத்தால் இந்தியில் எழுதத் தொடங்கினார். ‘கிஸ்னே பாஸுரி பஜாயி’ என்ற இவரது முதல் இந்தி பாடல், சாதாரண மக்களிடையே மிகவும் பிரபலமான பக்திப் பாடலானது.
l அரசு சமஸ்கிருத கல்லூரியின் இலக்கியத் துறையில் முதலில் பேராசிரியராகவும் பின்னர் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பின்னர், பிஹார் பல்கலைக்கழகத்தில் இந்தி பேராசிரியராக பணிபுரிந்தவர் 1980-ல் ஓய்வு பெற்றார்.
l முறைப்படி கற்றது சமஸ்கிருதம் மட்டுமே என்றாலும், சொந்த முயற்சியில் படித்து ஆங்கிலம், இந்தி, வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளைக் கற்றார். தாகூரின் பாடல்களைக் கேட்டு அவற்றைப் பாடியும் வந்தார்.
l பல காவியங்கள், ஏராளமான காவிய நாடகங்கள், நாவல்கள், கதைத் தொகுப்புகள், கட்டுரைகள், நினைவு சித்திரங்கள், விமர்சன நூல்கள் என பல வகையான படைப்புகளை எழுதியுள்ளார். அனைத்தையும்விட மிகவும் பிரபலமானவை, இவரது கீதங்களும், கஜல்களும்தான்.
l சரளமாக, எளிமையாக எழுதும் பாணி இவரது தனி அடையாளமாகத் திகழ்ந்தது. இவரது காவியப் படைப்புகள் பல்வேறு வகையான விஷயங்களை உள்ளடக்கியதாகவும் விரிவானதாகவும் விளங்கின. ராஜேந்திர ஷிகார் விருது, உத்தரப் பிரதேச அரசின் பாரத் பாரதி விருது, ஷிவ் பூஜன் ஷாஹே விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
l மிகவும் பிரபலமான கதைகள், நாவல்கள், வாழ்க்கை வரலாறு நூல்கள், கட்டுரைகள், கஜல்கள், பாடல்கள் என அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்த ஆச்சார்ய ஜானகி வல்லப சாஸ்திரி 95-வது வயதில் (2011) மறைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்