Published : 16 Jul 2021 09:49 AM
Last Updated : 16 Jul 2021 09:49 AM

திரைப்படச்சோலை 49: பீஷ்மர் கே.பி.,

சிவகுமார்

கர்நாடக சங்கீதச் சக்ரவர்த்தியாக விளங்கிய ஜே.கே.பி. சிந்துவின் நாட்டுப்புறப் பாடல் கேட்டு அதிர்வடைந்து அவளது சங்கீதப்புலமைக்கு அடிமையாகி, குடிகாரனாகி, மதிப்பிழந்து, மரியாதை இழந்து தெருவில் தள்ளாடி நடந்து வருகிறான். வழியில் ஒரு சபா. கர்நாடக சங்கீத கச்சேரி ஒன்றின் போஸ்டர் கண்ணுக்குப் படுகிறது. நேராக அரங்கத்திற்குள் செல்கிறான்.

சிங்கத்தை பார்த்த வித்வான் அதிர்ந்து, வியர்த்து உட்கார்ந்த இடத்திலிருந்தே குனிந்து பவ்யமாக கும்பிடு போட்டு பாடுகிறான்.

ஜே.கே.பி.,யால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எழுந்தார்.

‘‘என்னய்யா பாடறே? ஜலதோஷம் பிடிச்ச மாதிரி? புலி நகச்சங்கிலி போட்டவன் எல்லாம் ஜே.கே.பி., ஆயிட முடியுமா? பட்டு ஜிப்பா, அங்கவஸ்திரம், பத்து விரலுக்கு தங்க மோதிரம், வெளியில ஆள் உயரத்துக்கு ‘கட்-அவுட்’. இந்த தர்பார்ல எல்லாம் குறைச்சலில்லே. தர்பார் ராகமா பாடறே நீ? நான் பாடிக்காட்டவா?’’

ரீரீ; ரிசரி பமரி க காரிஸ ரீரீரீ...

தநிஸ பதநிஸ ரிமப, தநிஸ, தநிப ரிஸரிஸ தா

ரிம ரிம பதநிரீ; மதநி பதநிஸரி, ஸதநிமபரி

க கா ரிஸ ஸா; ஸா! ஸஸரிம பதநிஸ

ரீ! ரீ! ரிரிம பத நிஸ மபதநிஸ, பதநிஸ

ரிஸரீ ரிஸரீ

க காரிஸ.. நிஸதமபரி ககாரிஸ

லோசனா.. கமல லோசனா - அப்படிப் பாடு என்று உணர்ச்சி பொங்க அந்த உச்சகட்ட போதையிலும் பாடி விட்டு அரங்கை விட்டு வெளியேறுவான். கரவொலி அரங்கமே அதிரும்.

கரண்ட் இல்லாத ஊரில் பிறந்த பையன், குடி தண்ணீர் இல்லாத ஊரில் பிறந்தவன், பள்ளிக்கூடம் இல்லாத ஊரில் பிறந்த கிராமத்து இளைஞன், ரேடியோவை அவன் பார்க்கும்போதே 10 வயதாகி விட்டது. மெல்லிசையே அவன் கேட்டதில்லை. 14 வயது வரை 14 திரைப்படமே பார்த்த ஒருவனை கர்நாடக சங்கீத வித்வானாக நடிக்க வைக்க இயக்குநர் சிகரம் கே.பி.,க்கு என்ன ‘தில்’ இருந்திருக்க வேண்டும்.

அபூர்வ ராகங்கள் படத்தில் கடைசியில் தலைகாட்டும் கருப்பு இளைஞனை மறக்காமல் பேட்டி எடுக்க வேண்டும். வருங்காலத் தமிழ் திரையுலகை ஆளப்போகிறவன் அவன் என்று ‘பேசும் படம்’ இதழுக்காக பேட்டி எடுக்க வந்த மதுரை தங்கத்திடம் கே.பி., சொன்னாரென்றால் அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி.

மேதைகள், எப்போது, எந்த இடத்தில் பிறக்கிறார்கள் என்று யாரும் கணிக்க முடியாது.

அந்தநாள் தஞ்சை மாவட்டம், நன்னிலம் - நல்ல மாங்குடி கிராமத்தில் 1930 -ஜூலை 9-ந்தேதி பிறந்தவர் கே.பி.

அப்பா கைலாசம் கிராம முன்சீப். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி ஸ்கூல் ஃபைனல் தேர்வில் ஃபெயில் ஆனதைக்கூட பெருமையாகச் சொல்வார்.

திரையுலக பீஷ்மர்

மாதச்சம்பளம் 18 ரூபாய். இதில் 4 மகள்கள், 2 மகன்கள், மனைவி இது போக வருகின்ற விருந்தினர்களையும் சமாளிக்க வேண்டும்.

பத்துப் பேர் படுக்க தனி பாயெல்லாம் கிடையாது. ஒரே பவானி ஜமுக்காளம்தான். விரித்துப் போட்டு கல்யாண

வீடுகளில் புரள்வது போல புரள வேண்டியதுதான்.

புதுசா செருப்பெல்லாம் நினைச்சுப் பார்க்க முடியாது. காலேஜூக்கு போகும்போதும் அரை டிராயர்தான். பல நாள் அழுது அடம்பிடித்து அம்மா சிபாரிசில் ஒரு வழியாக ஃபுல் பேண்ட் கிடைத்தது.

தீபாவளியானால் எல்லார் வீட்டிலும் பட்டாசு சத்தம். எங்களுக்கு தலா ஒரு அணா கொடுப்பார். அதை வைத்து என்ன வெடி வாங்க முடியும்?

தஞ்சை டெல்டாப் பகுதியில் 2 வேலி நிலம் அப்பாவுக்கு இருந்தது. அவரே உழைத்து சம்பாதித்தது. கூடத்தை அவரே பெருக்குவார். கொல்லைப்புறத்து குப்பைகளையும் அள்ளுவார்.

கண்டிப்பார். படார் படார்ன்னு கன்னத்திலயும் முதுகிலயும் அறைவார். ஆனாலும், ‘பாலப்பா’ என்று அவர் குரல் கொடுக்கும் போது மனது நெகிழ்ந்து விடும்.

கே.பி. நாடக உலகில் பிரபலமாகும் முன்பே 72 வயதில் அப்பா மறைந்து விட்டார். பிஎஸ்சி பட்டப்படிப்பில் பிரெஞ்ச், பாட்டனி, ஜூவாலாஜி மூன்றிலும் ரேங்க் வாங்கி முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்ததுதான் அப்பாவுக்கு இவர் கொடுத்த பெரிய சந்தோஷம்.

வீட்டில் நிரந்தரமாக இருக்கும் ஒரு அக்கா பால்ய விதவை என்பதே கே.பி.,க்கு இள வயதில் தெரியாது.

26 வயதில் கே.பி திருமணம். தங்கை திருமணமாகி மும்பையில் கணவனோடு வாழ்ந்தார். எல்.ஐ.சியில் பணிபுரிந்த அவருக்கு கேன்சர் வந்து யோசிப்பதற்குள் இறந்து விட்டார். இப்போது தங்கையும் 2 குழந்தைகளும் கே.பி.,யுடன்.

மாதம் சம்பளம் ரூ.200 வாங்கிய கேபிக்கு -பள்ளி இறுதிப்படிப்பை முடிக்காத தங்கைக்கு எல்ஐசியிலேயே வேலை வாங்கிக் கொடுத்து 2 குழந்தைகளையும் படிக்க வைத்து, அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்தார்.

‘நான்கு வருடம் மெடிக்கல் லீவ் போட்டு விட்டு கே.பி., சினிமாவுக்கு வசனம் எழுதுகிறான்’ என்று மேலதிகாரியிடம் ஒருவன் ‘பத்த’ வைத்தான். ‘நான் வேலையை ராஜினாமா செய்கிறேன்!’ என்றார் கே.பி. ‘நீங்கள் திரைப்படத்துறையில் புகழடைவது ஏஜிஎஸ் அலுவலகத்துக்கே பெருமை. தொடருங்கள்!’ என்றார் அதிகாரி.

ஏஜிஎஸ் அலுவலகத்தில் 13 ஆண்டுகள் ஓடி விட்டன.

ஏஜிஎஸ் அலுவலக வேலைக்கு விண்ணப்பித்து விட்டு வேலை கிடைக்கும் வரை சும்மா இருக்க வேண்டாமென்று முத்துப்பேட்டை போர்டு ஹைஸ்கூலில் மாதம் ரூ. 80 சம்பளத்தில் ஆசிரியர் வேலை பார்த்தார்.

ஏஜிஎஸ் அலுவலகத்தில் ஒரு ஏஜி விடைபெறுகிறார். புதிதாக ஒருவர் வருகிறார். பிரிவுபச்சாரம், வரவேற்பு இரண்டுக்குமான நிகழ்ச்சியில் ‘சினிமா பெனட்டிக்’ - என்று ஆங்கிலத்தில் ஒரு நாடகம். 3 கதாபாத்திரங்கள் அதில். மூன்றையும் கே.பியே நடித்து அப்ளாஸ் வாங்கினார். அதில் ஒன்றுதான், ‘எதிர்நீச்சல்’. பட்டுமாமியாக பின்னாளில் வடிவெடுத்தது.

இன்னொரு ஏ.ஜி வங்காளி, பதவியேற்ற போது அவருக்கு புரிய வேண்டும் என்று மேஜர் சந்திரகாந்த் - என்ற 45 நிமிட நேர நாடகத்தை எழுதிப் பார்வையற்ற மேஜராக இவரே நடித்தார்.

கே.பி., பார்த்த முதல் சினிமா படப்பிடிப்பு பராசக்தி. நண்பருக்கு ஒரு நண்பர். அவருக்கு ஒரு நண்பர். அவர் தயவில் ஏவிஎம்முக்குள் நுழைந்து ஷூட்டிங் பார்த்தார்.

கே.பி. வாரிசுகள்

ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். ஒருவர் நெருப்பை மிதித்தவர் போல இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தார். முதலாமவர் டைரக்டர் கிருஷ்ணன். இரண்டாமவர் டைரக்டர் பஞ்சு. ஒல்லிப் பிச்சானாக ஒருவர் ஓரமாக நின்று டைரக்டர் சொல்வதைக் கேட்டார். அவர்தான் சிவாஜி. நடுவகிடு எடுத்த சுருட்டைத் தலைமுடி இளைஞர் அட்டையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அவர்தான் கலைஞர் மு.கருணாநிதி.

1952-ல் அந்தப் படப்பிடிப்பை பார்த்தவர் அடுத்த 12 வருஷத்தில் தனது சர்வர் சுந்தரம் படைப்பு மூலம் அதே ஸ்டுடியோவுக்குள் ஒரு படைப்பாளியாக நுழைவோம் என்று கனவு கண்டிருப்பாரா?

முக்தா சீனிவாசன் தயாரித்த ‘பூஜைக்கு வந்த மலர்’ படத்திற்கு வசனம் எழுதினார். மாதம் பிறந்த 1-ந்தேதியானால் ரூபாய் 500 செக் ‘டாண்’ணு வந்திடும். இந்த தொகைதான் ஒரு வருஷம் குடும்பத்தைக் காப்பாத்திச்சு என்கிறார்.

ஏஜிஎஸ் அலுவலகத்திற்கு கே.பி.,யை பார்க்க வரும்போதே நாகேஷூக்கு 2 படங்கள் வெளி வந்து விட்டன. எப்படியாவது உன் ‘ட்ரூப்’ல சேத்துக்க பாலுன்னு உயிரை எடுப்பார் நாகேஷ். இப்ப வேஷம் ஒண்ணும் இல்லடான்னாரு கே.பி. ‘அட, சார்! போஸ்ட்!’ன்னு நீங்க நாடகத்தில தலைகாட்டறீங்களே அதை நான் செய்யறேன்!’ அப்படின்னாரு நாகேஷ்.

எதிர்நீச்சல் கே.பி.,- நாகேஷ்

‘சார் போஸ்ட்’ வசனத்துக்கு மேல ஒரு வார்த்தை கூட அவர் பேசலே. ஆனால் மேடையில் நுழைந்து தபால் பையை தவற விட்டு கிரிக்கட் பாலைப் பிடிப்பதைப் போல பாய்ந்து பிடித்து குட்டிக்கரணம் அடித்து பிறகு, ‘சார் போஸ்ட்!’ என்றார். அரங்கமே அதிர்ந்தது.

அவ்வளவு பிரபல நடிகரான பிறகும் -டிராமா நடக்கும் அன்று மத்தியானம் ஒரு மணிக்கு மேல ஷூட்டிங் வச்சுக்காம, சாப்பிட்டு நேரா ஹாலுக்கு வந்து ஃபேன்-ஐ போட்டுட்டு மேக்கப் ரூம்ல நல்லா தூங்குவார். சரியா 5 மணிக்கு எழுந்து ஃபிரெஷ் ஆயிடுவார். ஸ்டேஜ்ல எல்லா உதவியும் செய்வார்.

நாகேஷ் இல்லை என்றால் கே.பி., இல்லை. கே.பி இல்லை என்றால் நாகேஷ் இல்லை என்ற கட்டமும் வந்தது.

அப்பேர்பட்ட நாகேஷ் சொல்லாமல் ஒருமுறை எம்ஜிஆர் படத்தின் படப்பிடிப்புக்குப் போய் விட்டார். என் தேதியில் எப்படி அவன் அங்கு போகலாம் என்று தேங்காய் சீனிவாசனை அழைத்து அந்த வேடத்தில் நடிக்க வைத்து பல ஆண்டுகள் பிரிந்தே இருக்க வைத்தது காலம்.

சினிமா அனுபவமே இல்லாத ஏ.கே. வேலன். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற ஒரு படத்தை எழுதி இயக்கி தயாரித்து வெளியிட்டார்.

அந்த வேலன், உங்ககிட்ட ஏதாவது கதை இருக்கா-ன்னு கே.பி.யிடம் கேட்டார். நீர்க்குமிழி-ன்னு ஒரு நாடகம். கேன்சர் பேஷண்ட்டைப் பத்தி எழுதியிருக்கேன். முதல்ல அதை நாடகமா போடணும் என்றார் கே.பி. நாடகம் அரங்கேற்றம் பண்ணீட்டு அதை நீங்களே டைரக்ட் பண்ணிடுங்க. நான் படத்தை தயாரிக்கிறேன் -வேலன்.

நாகேஷ், மேஜர், செளகார், வி.கோபாலகிருஷ்ணன், ஐஎஸ்ஆர் -எல்லாம் ஒப்பந்தமானார்கள்.

‘நாடகத்துக்கு இசையமைக்கிற குமாரையே மியூசிக் டைரக்டரா போட்டுக்கலாம்!’ பூஜை போட்டு உவமைக்கவிஞர் சுரதா எழுதிய, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா- ஆறடி நிலமே சொந்தமடா!’ -பாடல் எழுதியாயிற்று. என்ன காரணமோ எந்திரக்கோளாறோ. பணம் புரட்ட முடியவில்லையோ? பாடல் ரத்தானது.

‘படத்துக்குப் பேர் ‘நீர்க்குமிழி’. பாட்டு ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா!’ எப்படி வெளங்கும்?’ திரையுலகினர் கிண்டல். எந்தக்காரணம் கொண்டும் நீர்க்குமிழி -பெயரையும் மாற்றக்கூடாது; ஆடி அடங்கும் பாடலையும் விடக்கூடாது என்று பிடிவாதமாகச் சொன்னார் ஏ.கே.வேலன்.

தமிழகத்தின் முதல் நிலை பின்னணி பாடகரிடம் பேசினார்கள். ‘எது நாகேஷ் ஹீரோவா? அவருக்கெல்லாம் நான் பாடணுமா? என் தலைவிதியை பாருங்க!’- திரும்பி வந்து சீர்காழியைப் பேசி பாட வைத்தார்.

ஃபால்கே விருது

இப்படி முதல்படம் துவக்கி திரையில் நுழைந்தவர் 100 படங்களுக்கு மேல் தன்னை தொடர்புபடுத்திக் கொண்டார். கதாசிரியராக -கதை, திரைக்கதை ஆசிரியராக- இயக்குநராக- தயாரிப்பாளராக இப்படி 100 படங்கள்.

42 வயதில் ஹார்ட் அட்டாக். ‘எல்லாம் அவ்வளவுதானா? முடிந்து விட்டதா?’ வெலிங்டன் நர்சிங் ஹோம். ஐசியு. பிராணவாயு முகமூடி. உடம்பு முழுக்க ஏகப்பட்ட ஒயர்கள். சல்லடை போடும் ஊசிகள். கண் திறந்து பார்த்தார். ‘24 மணி நேரம் கழித்து எமனிடம் எக்ஸ்டென்ஷன் வாங்கி வந்து விட்டீர்கள்!’ என்றார் டாக்டர்.

‘நீங்கள் செயின் ஸ்மோக்கர் ஹார்ட் அட்டாக் வரக் காரணம் அதுதான்.’

‘நான் பிழைத்தால் இனி சிகரெட்டை தொடவே மாட்டேன். சத்தியம்.’

1. இனி சிகரெட் தொடுவதில்லை.

2. பிஸியான நடிக நடிகையர் வேண்டாம். புதுமுகங்களை அறிமுகப்படுத்துவோம்.

3. ஏதாவது ஒரு நல்ல சேதி படத்தில் மக்களுக்கு சொல்ல வேண்டும்.

4. ஆணாதிக்கம் மேலோங்கிய சமூகத்தில் -பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் படங்களைத்தான் எடுக்க வேண்டும்...

அரங்கேற்றம். சொல்லத்தான் நினைக்கிறேன். அவள் ஒரு தொடர்கதை. அபூர்வ ராகங்கள். மூன்று முடிச்சு. அவர்கள், மரோசரித்ரா, தண்ணீர் தண்ணீர். அக்னி சாட்சி. சிந்து பைரவி. அத்தனையும் வைரங்கள்.

சின்னத்திரையிலும் புரட்சி. ரயில் சிநேகம் -கையளவு மனசு- காதல் பகடை- அண்ணி -சஹானா -எங்கிருந்தோ வந்தாள். அதிலும் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனை.

42 வயதில் உயிர் ஆபத்தை சந்தித்தவர். மேலும் 42 வருடங்கள் வாழ்ந்து அதிலும் சரித்திரம் படைத்தார்.

அவரால் அறிமுகப்படுத்தப்பட்டோர் 61 பேர் பால்கே- பத்மஸ்ரீ -9 தேசிய விருதுகள்- 12 ஃபிலிம்பேர் விருதுகள்- தியேட்டரில் கே.பி என்று டைட்டிலில் பெயர் போட்டால் தியேட்டர் அதிரும். கைதட்டல்கள். அதற்கு முன்பு அப்படி ஒரு கரவொலி வாங்கியவர் டைரக்டர் ஸ்ரீதர். சிவாஜியும், எம்.ஜி.ஆரும் உச்சத்தில் இருந்தபோது அந்த கைதட்டல் பெற்றவர் அவர்.

தெய்வத்தாய் நாயகனுடன்

கே.பி. வசனம் எழுதினால் பட்டுக்கத்தரித்தது போல் அவ்வளவு நைசாக இருக்கும். பேசுவதற்கு சுகமாக இருக்கும்.

ஹைதராபாத் விபச்சார விடுதி. கதாநாயகி பாலியல் தொழிலாளியாகி விட்டாள். கதாநாயகன் அப்பாவோடு கோபித்துக் கொண்டு ராணுவத்தில் சேர்ந்து விட்டான். லீவில் ஹைதராபாத் வந்தவன் விலைமகள் வீடு தேடி வருகிறான்.

‘யெஸ். கம் இன்’ அவள்.

அவனுக்கு அதிர்ச்சி ‘லலிதா!’

அவளுக்கும் அதிர்ச்சி -‘தங்கவேலு!’

‘‘நீ இங்கதான் இருக்கியாம்மா. நல்லா இருக்கியா?’’

‘அப்பா, அம்மா செளக்கியமா?’’

‘‘ஒரு உண்மையை சொல்லலேண்ணா என் இதயமே சுக்கல் சுக்கலா வெடிச்சுப் போகும்.. விலைமகள் வீட்டுக்கு வழி கேட்டு வந்தேன். இந்த வீட்டைக்காட்டீட்டான் ஒரு பாவி!’’

‘‘அவன் பாவி இல்லே தங்கவேலு. பழக்கப்பட்டவன்தான்!’’

‘‘லலிதா!’’

‘‘நான் மட்டும் ஒரு உண்மையைச் சொல்லலேண்ணா என் இதயமும் சுக்கல் சுக்கலா வெடிச்சிடாதா?’

‘‘தங்கவேலு. நாட்டைக்காப்பாத்தறதுக்காக நீ உன்னோட உயிரையே தியாகம் பண்றே! ஆனா ஒரு பொண்ணு எதைக் காப்பாத்தணுமோ அதை நான் வெலை பேசிட்டிருக்கேன்.!’’

‘‘ வெலை பேச வேற எந்தப் பொருளும் கிடைக்கலியா உனக்கு?’

‘‘வேற எதுவும் அவ்வளவு சுலபத்தில வெலை போறதில்லையே!’’

‘இவ்வளவு பெரிய ஹைதராபாத் சிட்டில நீ வெலை குடுத்து வாங்க நினைச்சதும் இதைத்தானே தங்கவேலு?’

‘ஏன் இப்படி ஆயிட்டே? என் கதை என்னன்னு கேக்க நினைக்கிறே? கதைக்கு மதிப்புள்ள காலமில்லப்பா இது. சதைக்குத்தான் மதிப்பு!’

புறப்பட்டான். சுவற்றில் மாட்டப்பட்டிருந்த லலிதா புகைப்படத்தைப் பார்க்கிறான். அது செல்லரித்துப் போய் இருக்கிறது.

‘‘அந்த லலிதாவா இது? செல்லரிச்சுப் போன இந்தப் படத்தை இங்க எதுக்கும்மா மாட்டி வச்சிருக்கே?’’

‘‘முன்பெல்லாம் என் முகம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்க அடிக்கடி கண்ணாடியப் பார்ப்பேன். இப்ப, இந்தப்படத்தை பாத்துக்கறேன்!’’

‘‘அது சரி! நீ செத்துப் போயிட்டதா தந்தி வந்திச்சே?’’

‘‘நீ என் புள்ளையே இல்லே போடா வெளியேன்னாரு எங்கப்பா. புள்ளை போனவனாவே இருக்கட்டும்ன்னுதான் பொய்த் தந்தி அடிச்சேன்!’

பாலியல் தொழிலாளி வீட்டுக்கு வந்தவன். அந்தக் காசை எடுத்து லலிதா கையில் திணித்து விட்டு நகர்வான். அவள் பிடித்துக் கொண்டு, ‘‘சந்தைக்கு வந்திட்டவ நான். நீ சந்தைக்கு வந்திட்டு ஒண்ணுமே வாங்காம போறியே. நான் மட்டும் பணம் வாங்கிக்கலாமா? இந்தா!’’ என்று அவன் கையிலேயே மீண்டும் திணித்து அனுப்புவாள்.

1973-ல் படமாக்கப்பட்ட அரங்கேற்றம் - பட வசனம் 48 ஆண்டுகள் ஆகியும் கல்லில் செதுக்கிய சிற்பம் போல் என் இதயத்தில் அப்படியே பதிந்துள்ளது. ஒரு பாலச்சந்தர் -ஒரே பாலச்சந்தர் -அவர் சாதனையை நம் காலத்தில் யாராலும் முறியடிக்க முடியாது.

----

அனுபவிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x